வாக்களிக்க செல்கிறீர்களா?  

இரண்டு மிகப்பெரிய முக்கிய அரசியல் புள்ளிகளின் ஆளுமைகள் இல்லாத நிலையில், பல்வேறு   எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை துவங்க நடைபெற உள்ளது.

கொரொனா பாதிப்பு உள்ள காரணத்தால் நாளை ஒரு மணி நேரம் கூடுதலாக வாக்குப்பதிவு நடத்தத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகம் முழுக்க 88 ஆயிரத்து 936 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவையில் 4 ஆயிரத்து 427 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 5 ஆயிரத்து 316 வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன.

தமிழகத்தில் 6.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.09 கோடி ஆண் வாக்காளர்கள், 3.19 கோடி பெண் வாக்காளர்கள் மற்றும் 7 ஆயிரத்து 192 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்களிக்கச் செல்லும் போது  கவனத்தில் கொள்ள வேண்டியவை:

* வாக்களிக்கச் செல்பவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம்

* புதிய வாக்காளர் அடையாள அட்டை எடுத்துச் செல்லவேண்டும்

* புதிய வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் உள்ளிட்ட இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்லலாம்.

* வாக்களிக்கச் செல்பவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி வரிசையில் நிற்க வேண்டும்.

* மையங்களில் சானிடைசர்கள் மற்றும் கையுறைகள் வழங்கப்படும். மேலும், உடல் வெப்ப அளவு பரிசோதிக்கப்படும்.

* உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் / கொரோனா சிகிச்சை முடிந்து தனிமையில் இருந்தால் மாலை 6 மணி முதல் 7 மணி வரை பாதுகாப்பு உடையுடன் சென்று வாக்களிக்கலாம்.

* வாக்குச்சாவடிக்குள் நுழையும் முன்பு வலது கை உறையை முழுமையாக அணிந்து கொள்ள வேண்டும். மேலும், முதலாம் தேர்தல் அலுவலரிடம் உங்கள் வாக்குச் சீட்டை காண்பித்து அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும்.

* இதனைத் தொடர்ந்து இரண்டாம் அலுவலர் உங்களது பெயர், வரிசை எண் உள்ளிட்ட விவரங்களுடன் உங்களை அழைப்பார். அங்கு சென்று 17 A படிவத்தில் கையொப்பம் இட்டு இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்க வேண்டும்.

* தொடர்ந்து உங்களுக்கு வாக்குச் சீட்டு வழங்கப்படும். அதனை எடுத்துக் கொண்டு மூன்றாவது அலுவலரிடம் சென்று வாக்குச் சீட்டை கொடுத்தால் உங்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.

* கையுறை அணிந்த கை விரல்கள் மூலம் தங்களுக்குப் பிடித்த வேட்பாளர் பொத்தானை அழுத்த வேண்டும், பீப் சத்தம் வருவதையும், வேட்பாளருக்கு அருகில் உள்ள சிவப்பு விளக்கு எரிவதையும் நீங்கள் பார்க்கலாம்.

* அருகில் இருக்கும் விவி பேட் இயந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்து உள்ளீர்கள் என்பதைக் காட்ட வேட்பாளரின் சின்னம் 7 வினாடிகள் காண்பிக்கப்படும். அதன் மூலம் தங்கள் வாக்கை உறுதி செய்யலாம்.

*தலைமைத் தேர்தல் அலுவலரைத் தவிர வாக்குச்சாவடி மையத்திற்குள் யாரும் செல்போன் கொண்டு செல்லக்கூடாது.