தவறாமல் வாக்களியுங்கள்!

ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,

ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,    

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. என்று ஒரு புறநானூற்றுப் பாடல்  உண்டு. ஒவ்வொருவரின் கடமையையும் அது விளக்குவதாக அமைந்திருக்கும். அந்தவகையில் இன்றும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை உண்டு. சில நேரங்களில் அது தனிநபர் என்பதைத் தாண்டி நம் அனைவரின் கடமையாகவும் அமைந்து விடுவதுண்டு. அப்படி ஒரு கடமை தான் வாக்களித்தல். இது நமது ஜனநாயகக் கடமை. அதனை நாம் சரியாக செய்கிறோமா என்று பார்த்தால் சில நேரங்களில் இல்லை என்று தான் தோன்றுகிறது. நூறு சதவீத மக்கள் வாழ்கின்ற ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு பல நேரங்களில் எழுபது, எண்பது என்று தான் பதிவாகிறதே தவிர, ஒரு பெரிய பங்கு வாக்களிக்காமல் தான் இருக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும்.

ஒரு எழுபது சதவீதம் வாக்கு பதிவாகி தொகுதியில் மொத்தம் மூன்று வேட்பாளர்கள் கூடவே கொஞ்சம் சுயேச்சைகளும் போட்டியிட்டு ஒருவர் வென்றால் அதில் வென்றவர் பெற்ற வாக்குகளை விட வாக்களிக்காதவர்களின் சதவீதம் அதிகமாக அமையும் வாய்ப்பு கூட உண்டு. இது எந்த வகை ஜனநாயகம்?

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு தரும் சலுகைகள், வசதிகள், மற்ற சட்ட பாதுகாப்பு என்று எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு தேர்தல் என்று வரும் போது ஏதோ வானத்தில் இருந்து இறங்கியவர்கள் போல  தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது சரியானதல்ல. போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் யாரையும் பிடிக்காவிட்டால் இருக்கவே இருக்கிறது நோட்டா. அதற்கு போட்டால் போகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் வாக்களிக்காமல் தான் இருக்கிறார்கள். அவர்கள் யார், ஏன் இப்படி செய்கிறார்கள் என்று ஆய்வு செய்து அது தொடர்பாக மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். இதில் உண்மையிலேயே முடியாதவர்களை எதுவும் செய்யத் தேவையில்லை. மற்றவர்கள் தானாக வந்து வாக்கு அளிக்கும் வகையில் அறிவுறுத்த வேண்டும். அதற்கான தகுந்த நடைமுறை மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.

அதே போல தேர்தல் என்பது மக்களால் அளிக்கப்படும் தீர்ப்பு. இதில் மக்களாகிய நாம் அனைவரும் இணைந்துகொள்ள வேண்டும். உலகின் எந்த பகுதியிலும் இல்லாத அளவு அதிக மக்கள் தொகை கொண்டு நாட்டில் இன்னும் ஜனநாயகம் உயிர்ப்புடன் இயங்கி வருவதற்கு இந்த தேர்தல்கள் ஒரு அடையாளம். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடு, வளர்ந்த நாடுகளில் கூட தேர்தல் நடைபெறும் போது பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆனால் இத்தனை பெரிய மக்கள் தொகை கொண்ட, இன்னும் படிப்பறிவிலும், பணத்திலும் பல மடங்கு குறைந்த இந்திய மக்கள் இந்த தேர்தல்கள், மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து இயங்கி வருவது பெருமைக்குரிய விஷயம்.

அதனை சரியாக இயக்கி காட்ட ஒவ்வொருவரும் வாக்களிப்பது அவசியம். எப்போது பார்த்தாலும் அது சரியில்லை, இது சரியில்லை என்று குற்றங்களை பார்க்காமல் களத்தில் இறங்கி வாக்களிக்கும் நமது கடமையைச் செய்ய நாம் அனைவரும் முன்வர வேண்டும்.

நமது நாடு சுதந்திரம் பெற்ற போது, கூடவே சுதந்திரம் பெற்ற பல நாடுகளில் இன்று ஜனநாயகம் இல்லாததை கண்கூடாக காணமுடிகிறது. நமது நாட்டில் அப்படி இல்லாமல் ஜனநாயகம் தழைத்தோங்கி இருப்பதற்கு இந்த மக்களாட்சி முறையும், தேர்தல் நடைமுறைகளும் அதனை மதித்து நடக்கும் மக்களும், அரசியல்வாதிகளும் முக்கிய காரணம்.

இந்த மக்களாட்சி முறைக்கு, மக்களுக்கு ஏதாவது சிக்கல் வருமானால் அதனை தேர்தல் முறை மூலம் சரிசெய்து கொள்ளும் உரிமை இந்த தேர்தல் நடைமுறை மூலம் மக்கள் பெற்றிருக்கிறார்கள். 1970களில் இந்தியாவில் அவசரநிலை சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட போது அதனை எதிர்த்து பலரும் குரல் கொடுத்தும் பலன் ஏதும் கிட்டவில்லை. ஆனால் வந்தது தேர்தல், இதில் வென்றது ஜனநாயகம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என மக்கள் ஆட்சியை மாற்றிக் காட்டிய வரலாறு இந்தியாவில் நடந்திருக்கிறது.

எனவே நாம் ஒவ்வொருவரும் இந்த தேர்தலில் வாக்குச்சாவடிக்குச் சென்று தவறாமல் வாக்களிப்போம். இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் நமது ஜனநாயகக் கடமையை செய்வோம்!