அறநிலையத்துறையை அரசிடம் இருந்து மீட்கும் கட்சிக்கு வாக்கு – துறவியர் பேரவை

அகில பாரத துறவியர் பேரவை நிர்வாகிகள், கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரக்கையாளர்களை (2.4.2021)சந்தித்தனர்.

அப்போது பேரூராதீனம் ஸ்ரீ மருதாசல அடிகளார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் அனைவரும் தவறாமல் வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் எனவும், கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் இந்து சமய நம்பிக்கையும், இந்து கலாச்சாரத்தையும், இந்துக்களின் வழிபாட்டு முறையையும், இந்து கோவில்கள், கடவுள்கள் மற்றும் கடவுள்களின் சிலையையும், இந்து பெண்களையும் இழிவுபடுத்தி நாத்திகவாதிகள் மற்றும் இந்து விரோத சக்திகளும் பொது மேடைகளில் பேசி வருகின்றனர் எனவும் கூறினார்.

இதன் மூலம் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற முடியும் என்ற நம்பிக்கையில் அரசியல்வாதிகள் இப்படி செய்து வருகின்றனர். இவர்கள் போன்ற இந்து விரோத அரசியல்வாதிகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

மேலும், இந்து சமய கலாச்சாரங்கள், பண்பாடு, காப்பவர்களுக்கும் இந்து சமய அறநிலையத் துறையை அரசிடம் இருந்து மீட்டு, சுதந்திரமாக செயல்பட வைக்கும் அரசியல் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று  தெரிவித்தார்.