தேர்தலும் கொரோனாவும்

நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா, மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா என்று ஒரு பழைய தமிழ்த் திரைப்படப் பாடல் உண்டு. அது போல தேர்தல் காலத்தில் கொரோனா பரவுகிறதா அல்லது கொரோனா காலத்தில் தேர்தல் நடக்கிறதா எனும் அளவுக்கு கொரோனா பரவலும், தேர்தலும் தமிழ்நாட்டில் மக்களை நெருங்கி வருகின்றன.

முன்பு ஒரு காலத்தில் காலரா, பிளேக் போன்ற கொள்ளை நோய்கள் பரவுவதற்கும், திருவிழாக்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு இருந்தது. அதற்கேற்பதேர்த் திருவிழா போன்ற திருவிழாக்கள் நடைபெறும் சமயங்களில் அரசாங்கம் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். கிட்டத்தட்ட தேர்தலும் ஒரு ஜனநாயகத் திருவிழா தான்.  இந்த திருவிழா நடக்கும் சமயம் பார்த்து கொரோனா வைரஸ் என்ற வேண்டாத விருந்தாளியும் வந்த சேர்ந்திருக்கிறது. அதனை சரியான முறையில் எதிர்கொண்டு செயல்பட வேண்டியது நம் கடமை ஆகும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஓரளவு கட்டுக்குள் இருந்த கோவிட் 19 தற்போது மெல்ல மெல்ல இந்தியாவில் அதிகரித்து வருகிறது. முதல் மூன்று இடங்களில் மகாராஷ்டிராவும், பஞ்சாபும், கேரளாவும் இருந்தாலும் முதல் பத்து இடங்களுக்குள் தமிழ்நாடும் அந்த கோவிட் 19 பட்டியலில் உள்ளது.

தமிழக அரசு ஒரு பக்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்றாலும் மெதுவாக அது அதிகரித்து வரத்தான் செய்கிறது. சென்ற ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இடையில் ஒரே ஒரு வித்தியாசம் தான் உள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி வந்து விட்டது.  அரசாங்க மருத்துவமனை தொடங்கி தனியார் மருத்துவமனை வரை ஒரு பக்கம் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

என்றாலும் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இருக்கிறது என்று சொல்லமுடியாது. இன்னும் சாலைகளில் மாஸ்க் மறந்த முகங்கள், கை கழுவுவதில் அலட்சியம், இடைவெளியின்றி கூட்டமாக கூடுதல் ஆகியன பரவலாக காணப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமாக இந்த சட்டமன்றத் தேர்தலையும் சொல்லலாம். தமிழகமெங்கும் நடக்கும் தேர்தல் பரப்புரை, அதற்கு ஆங்காங்கே கூடும் கூட்டம் ஆகியவற்றை பார்த்தால் சிறிது அச்சமாகத் தான் இருக்கிறது. எங்கே பார்த்தாலும் கூட்டம் கூடுகிறது. அரசின் எச்சரிக்கைகள் காற்றில் பரப்பது போலத் தான் தெரிகிறது. இதில் அரசாங்கமோ அதிகாரிகளோ மட்டும் தனியாக ஒன்றும் செய்துவிட முடியாது. பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

அதைப்போலவே முன்பு போல பெரிய பெரிய பொதுக்கூட்டங்கள், மாநாடு, ஊர்வலம், பேரணி என்று இல்லாவிட்டாலும் முக்கிய தலைவர்கள் கூடும் கூட்டங்களுக்கு திரள், திரளாக மக்கள் வரத் தான் செய்கிறார்கள். அதற்கு ஒரு மாற்று கண்டறிந்து திறமையாக செயல்பட்டால் தான் நாம் இந்த இரண்டாவது கொரோனா அலையைக் கையாள முடியும். முக்கியமான கட்சித் தலைவர்கள் சில பேருக்கும் வேட்பாளர்களுக்குமே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது மெல்ல அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு சில வாரங்களுக்குள் கணிசமான அளவு உயர்ந்து விடும் பாதிப்பும் உள்ளது.

மறுபடியும், தகர சீட் அடிப்பது, வெள்ளை கலர் பொடி தெளிப்பது, டூ வீலர்களை எடுத்துக்கொண்டு  ஊரைச் சுற்றுவது அதற்காக காவலர்களிடம் சிக்கி தோப்புக்கரணம் போடுவது சாலைகளை மூடுவது, காய்கறி, பால் கூட வாங்க முடியாமல் சிரமப்படுவது பிறகு கடைசியாக ஊரடங்கு என்று கொரோனா நமக்கு ஆட்டம் காட்டுவதற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வது தான் நம்முன்னால் உள்ள நல்ல பாதை. இதை அரசியல்வாதிகளும் உணர்ந்து கொண்டு கொரோனா பரப்பாளர்களாக இல்லாமல் கொள்கை பரப்பாளர்களாக மட்டும் செயல்படுவது அனைவருக்கும் நல்லது.

இல்லாவிட்டால் திருவள்ளவர் சொன்னது போல நமது வாழ்க்கை

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை  எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.