அறுவை சிகிச்சை மூலம் ஊனம் ஏற்படாமல் பெண்ணிற்கு மறுவாழ்வு  

கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண் ஒருவருக்கு ஊனம் ஏற்படாத வகையில் அறுவை சிகிச்சை செய்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த டிசம்பர் மாதம், 24 வயதுடைய பெண்  ஒருவர் வலது தொடை எலும்பில் பெரிய கட்டி பாதிப்புடன் சிகிச்சைக்காக வந்தார்.

தொடை எலும்பு அதிகமாக பாதிக்கப்பட்டு, கட்டி பெரியதாக இருந்ததால் காலின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருந்தது.

அவ்வாறு அகற்றினால் நோயாளி வாழ்நாள் முழுவதும் ஊனமான காலுடன் செயற்கை கால் பொருத்தி நடக்க வேண்டி இருக்கும். அப்பெண்ணின் இளவயது மற்றும் குடும்ப பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, ஊனம் ஏற்படாதவாறு நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு  எடுக்கப்பட்டு, இதற்காக தசைகளை பலப்படுத்தும் இயன் முறை சிகிச்சை அளித்து நோயாளி தயார் செய்யப்பட்டார். அவரது தொடை எலும்பின் அச்சு அசலான மாதிரி அளவுகள் எடுக்கப்பட்டு எலும்பு வடிவிலான உலோகமாதிரி வடிவமைக்கப்பட்டது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அதிநவீன ஊனமில்லா எலும்பு புற்று அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டு, நோயாளி குணமடைந்தார். கால் தசைகளை பலப்படுத்தும் உடற்பயிற்சிகள் கற்றுத்தரப்பட்டு மெதுவாக நடக்கவும் ஆரம்பித்துள்ளார்.

சென்னை, மும்பை போன்ற நகரங்களுக்கு தான் பொதுவாக ஊனமில்லா எலும்பு புற்று நோய் அறுவை சிகிச்சைகள் செய்வதற்காக செல்ல வேண்டும்.

தற்போது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பல லட்சம் மதிப்புள்ள அதிநவீன சிகிச்சை முற்றிலும் இலவசமாக அரசு கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டது பல தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.