கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க திட்டம்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பமான கொரோனா பரவலின் காரணமாக நாடு முழுவதும் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

தொற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், கடற்கரைகள், பூங்காக்கள் போன்றவை அனைத்தும் மூடப்பட்டன. இதனால பொருளாதார ரீதியாக பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பிற துறைகள் அனைத்தும் வீட்டிலிருந்த படியே வேலைகளை செய்தன. மாணவர்களின் கல்வி உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டன.

இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து மக்களின் வாழ்க்கையும் இயல்பு நிலைக்கு திரும்பியது. பல மாதங்கள் முயற்சிக்கு பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. .பள்ளி, கல்லூரிகளும், பல எதிர்ப்புகளுக்கு இடையே திரையரங்குகளும் திறக்கப்பட்டது.. அனைத்தும் இயல்பு நிலைக்கு திருப்பியதால் மக்களும் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை சரியாக கடைபிடிக்காமல் இருந்தனர்.

பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் மக்களிடம் குறையத் தொடங்கியது. மேலும் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பொதுக் கூட்டம், பிரச்சாரம் போன்ற இடங்களிலும் மக்கள் அதிகளவு கூட ஆரம்பித்தனர். இதனால் குறைந்திருந்த கொரோனா தொற்று  தற்போது வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பரவல் அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிக பாதிப்பு உள்ள சென்னை, கோவையில் புதிய பாதிப்பு 2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதார துறை திட்டமிட்டுள்ளது.