கண்ணாடி துண்டுகள் மீது நின்று கரகாட்டம் ஆடி கோவை சிறுமி சாதனை

கோவையை  சேர்ந்த ஏழு வயது சிறுமி ரியா, கண்ணாடி துண்டுகள் மீது நின்று, தலையில் தீக்கரகம் ஏந்தி 1800 நொடிகள் கரகாட்டம் ஆடி பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கோவை காந்திமாநகரை சேர்ந்த மணிகண்டன், விஜிதா தம்பதியரின்  ஏழு வயது மகள் ரியா, சிறு வயது முதலே தமிழ் பாரம்பரிய கிராமிய கலைகளில் ஆர்வமுடையவர், அதே பகுதியில் உள்ள கிராமிய புதல்வன் அகாடமியில் பாரம்பரிய கலைகளை கற்று வந்தார்.

எஸ்.என்.டி.பி.யோகம் கோயம்புத்தூர் மற்றும் பீனிக்ஸ் புக் வேர்ல்டு ரெக்கார்டு ஆகியோர் இணைந்து நடத்திய இந்த சாதனை நிகழ்வை சங்கமம் கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும்,தலைமையாசிரியருமான கனகராஜ் துவக்கி வைத்தார்.

கிராமிய கலையில் உலக சாதனை முயற்சியாக   கண்ணாடி துண்டுகள் மீது நின்று, தலையில் தீக்கரகம் ஏந்தி 1800 நொடிகள் கரகாட்டம் ஆடி சிறுமி ரியா சாதனை புரிந்தார்.

அங்கு கூடியிருந்த கிராமிய கலைஞர்கள், சிறுமி நடத்திய இந்த சாதனையை கைகளை தட்டி உற்சாகபடுத்தினர். தொடர்ந்து சிறுமியின் சாதனை பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. மேலும் சிறுமி ரியாவுக்கு பீனிக்ஸ் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தின் நிறுவனர் டாக்டர் கலையரசன் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர்  பாண்டியராஜனிடம் கலாரத்னா விருது வாங்கியவர் சிறுமி ரியா  என்பது குறிப்பிடத்தக்கது.