கோவையில் ரூ.55 லட்சம் பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில்  அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும்படை, தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை சட்டமன்ற தொகுதிகளுக்கு மூன்று பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று (12.3.2021) சூலூர் பகுதியில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 50 ரூபாயை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவையில் நேற்று மட்டும்  உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 லட்சத்து 26 ஆயிரத்து 850 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவையில் இதுவரை மொத்தம் ரூ.55 லட்சத்து 86 ஆயிரத்து 870 பறிமுதல் செய்யபட்டுள்ளது.  இது தவிர மதுபாட்டில்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் உரிய ஆவணங்களை காட்டியதாக ரூ 2 லட்சத்து 24 ஆயிரத்து 500 மட்டும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.