பி.ஆர்.ஜி அருண்குமாருக்கு பாஜகவினர் பூரணகும்ப மரியாதை

தேசிய ஜனநாயக கூட்டணியின் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் அந்த பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சூடு பிடித்து வரும் நிலையில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. ஆளும் அ.தி.மு.க கட்சியின் தலைமையில் பா.ஜ.க, பா.ம.க, த.மா.கா  என பல்வேறு கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியாக தேர்தலை சந்திக்க உள்ளனர்.

இந்நிலையில் கடந்த முறை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராக உள்ள பி.ஆர்.ஜி.அருண்குமார் இந்த தேர்தலில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தங்களது கூட்டணி கட்சியினரை சந்தித்து வரும் பி.ஆர்.ஜி.அருண்குமார், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் நந்தகுமார் மற்றும் மாவட்ட பொதுசெயலாளர் தாமுவை வெள்ளிக்கிழமையன்று சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் உள்ள பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் மைதிலி வினோ, மண்டல் தலைவர் வினோ ஜி ஆகியோரை சந்தித்து பேசினார்.

முன்னதாக அவருக்கு பாரதிய ஜனதா கட்சியினர் பூரணகும்ப மரியாதை அளித்தும், பட்டாசுகள் வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சந்திப்பின் போது மண்டல பொதுச்செயலாளர்  பிரதீப் ஜி, ஊடகத்துறை மண்டல தலைவர் ராமநாதன் உட்பட கவுண்டம்பாளையம் மண்டலத்தின் அனைத்து பாஜக காரிய கர்த்தாக்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.