சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவது தொடர்பான ஆலோசனை கூட்டம்

இந்தியத்தேர்தல் ஆணையம் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட 5மாநிலங்களில் பொதுத் தேர்தல் நடத்திட அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அமைதியான முறையிலும், எவ்வித பாரபட்சமின்றியும் பொதுத்தேர்தல் நடத்துவதில் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி இன்று (03.03.2021) தமிழக கேரள எல்லையோர மாவட்டங்களான கோவை, பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களின் ஆட்சித்தலைவர்கள் ராசாமணி (கோவை) முருன்மாய் ஜோஷி, (பாலக்காடு) சனவாஸ், (திருச்சூர்) ஆகியோர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோடு இன்பரா மெகா புட் பார்க் வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கேரள மாநிலத்தின் எல்லையோரத்தில் உள்ள கோவை மாவட்டத்தின் சோதனை சாவடிகளான வாளையார், முள்ளி, மேல்பாவியூர், வேலந்தபாளையம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம், மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, ஆனைகட்டி ஆகிய ஒன்பது சோதனை சாவடிகளில் சோதனைகளை தீவிரப்படுத்தவும், தேர்தல் பரிசுப்பொருட்கள் பரிமாற்றம், பணம் மற்றும் மதுபானம் உள்ளிட்டவற்றினை எடுத்துச் செல்வதை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு அதிகரிக்கபடுவது குறித்தும், அதிக எண்ணிக்கையிலான பொருட்களை வாங்குபவர்களின் விவரங்களை பகிர்தல், சந்தேகத்திற்கு இடமான வகையில் எல்லைகளை கடந்து செல்லும் வாகனங்கள் தொடர்பான விவரத்தினை உடனடியாக தகவல் தெரிவித்தல், மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் ஆலோசனை செய்யப்பட்டது. பிரதான சோதனைச் சாவடிகள் மட்டும் அல்லாது, பல்வேறு வழிகளில் எல்லையினை கடக்கும் வழிகளை கண்காணிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. தனிநபர் உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்டதொகை, விலை உயர்ந்த பொருட்களை எடுத்து சென்றால் உடனடியாக பறிமுதல் செய்து, அதன் தகவலை அந்தந்த மாநில கட்டுப்பாட்டு அறை அல்லது தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் மக்களுக்கு பணம், பரிசுபொருட்களை விநியோகித்தால் உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுத்தல், தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக பெறப்படும் புகார்களின் மீதும் எடுக்கப்படும் நடவடிக்கைகளை பகிர்தல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  தேவையின் அடிப்படையில் மீண்டும் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தலாம் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.