5 மணிநேரம் மாடாட்டம் ஆடி கல்லூரி மாணவர் சாதனை!

கிராமிய கலை நடனமான மாடாட்டத்தை தொடர்ந்து 5 மணி நேரம் ஆடி, கல்லூரி மாணவர் பீனிக்ஸ் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கோவை சரவணம்பட்டி எஸ்.என்.எஸ்.தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று  வரும் மாணவர் பிரித்விராஜ். இவர் தொடர்ந்து 5 மணிநேரம் மாடாட்டம் ஆடி சாதனை புரிந்துள்ளார். மரத்திலான மாடு போன்ற உருவத்தை சுமந்தபடி இவர் ஆடிய மாடாட்டம் பீனிக்ஸ் புக் ஆப் உலக  சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இதற்கான துவக்க நிகழ்ச்சி இன்று (2.03.2021)   நடைபெற்றது.  தொடர்ந்து மாணவ, மாணவிகளின் உற்சாக கரகோஷத்துடன் மாணவர் பிரித்விராஜ்  ஐந்து மணிநேரம் மாடாட்டம் ஆடினார்.

சாதனை மாணவருக்கு பீனிக்ஸ் சாதனை புத்தகத்தின் நிறுவனர் டாக்டர் கலையரசன் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.   சாதனை குறித்து மாணவர் பேசுகையில், உலக அளவில் பேசப்பட்டு வந்த தமிழக பாரம்பரிய நாட்டுப்புற கலைகள் தற்போது அழிந்து வருவதாகவும், இளம் தலைமுறையினர் இது போன்ற கலைகளை கற்று கொள்ள அதிகம் முன்வருவதால் நமது பாரம்பரிய கலைகள் அழியாமல் பாதுகாக்கப்படும் எனவும், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக  தொடர்ந்து 5 மணி நேரம் மாடாட்டம் ஆடி சாதனை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

கிராமிய கலைகளில் ஐந்து மணி நேரம் மாடாட்டம் ஆடி சாதனை புரிந்த முதல் மாணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.