உடல் நோய்த் தடுப்பூசி, அடுத்து ஊழல் தடுப்பூசி – கமல்

இந்தியாவில் நேற்று முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உடைய 45 வயதை கடந்தவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று காலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். மேலும் நாடு முழுவதும் நேற்று மட்டுமே 4.25 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை பெரிய அளவில் கொரோனா தடுப்பூசியை அரசியல் பிரபலங்கள் போட்டுக் கொள்ளாத நிலையில்   திரைப்பட நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று (2.3.2021) கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது;

“ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்.”