உடல் நலக்குறைவு ஏற்பட முக்கிய காரணம்

 

உடல் நலக்குறைவு ஏற்பட முக்கிய காரணம் மன அழுத்தம் – உலக சுகாதார நிறுவனம் தகவல்

உடல் நலக்குறைவு மற்றும் உடல் குறைபாட்டை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளுள் ஒன்றாக மன அழுத்தம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உலகம் முழுவதும் 30 கோடி மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2006 முதல் 2015ஆம் ஆண்டு வரை பாதிப்பு விகிதம் 18 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன அழுத்த பாதிப்பு விகிதம் அதிகரித்திருப்பது அனைத்து நாடுகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், மன அழுத்த பிரச்சனைக்கான சிகிச்சை முறைகளை மாற்றியமைப்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 50 சதவீதம் பேர் சிகிச்சை பெறுவதில்லை என்றும் சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.