கே.பி.ஆர்.கல்லூரியில் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டி

மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டி கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.

தமிழக  ரோலர் ஸ்கேட்டிங் சங்கத்தினர் கே.பி.ஆர்.கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்தும் இந்த மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாநில அளவில் பல்வேறு ஸ்கேட்டிங் குழுக்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் முதல்நாள் மற்றும் தொடக்கவிழா 20-ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது.

கே.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்த நிகழ்வை கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் அகிலா தலைமைப் பொறுப்பேற்று, கொடியசைத்து தொடங்கி வைத்தார். கே.பி.ஆர்.கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி முதல்வர் பாலுசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் பெற்றோர் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

முதல் நாள் போட்டியில் 4 பிரிவுகளில் 8 போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு மடல்கள் வழங்கப்பட்டன. தலைமைப் பொறுப்பேற்ற அகிலா தன் உரையில் விளையாட்டு மேம்பாட்டுக்காகவும், மாணவர்களின் உடல் நலம் பேணும் வகையில் அனைத்து வகை விளையாட்டுப் போட்டிகளையும் தங்கள் கே.பி.ஆர்.கல்வி நிறுவனங்கள் நடத்திட எல்லா வகையிலும் ஆக்கமும், ஊக்கமும் அளித்திடத் தயாராக உள்ளதாகக் கூறினார்.

நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாடுகளை, தமிழக ரோலர் ஸ்கேட்டிங் சங்கத்தின் மாநில தலைவர் கஸ்தூரிராஜ், துணைத் தலைவர் பாபு, இணைப் பொது செயலாளர் ராமநாதன் மற்றும் கே.பி.ஆர் உடற்கல்வி இயக்குநர்களான தம்பிதுரை, ஸ்டாலின் மற்றும் முத்துலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.