தொழிற்கல்வியின் பிதாமகன்! – பேராசிரியர் ஜி.ஆர்.தாமோதரன்

மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோரில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர் குரு என்றே தோன்றுகிறது. மாதா, பிதாவுக்கு தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மட்டும் நல்ல முறையில் உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இயல்பாகவே அமைந்து விடுகிறது. ஆனால் குருவின் பொறுப்பும், கடமையும் அப்படி அல்ல. அது ஒரு குழந்தையை கல்வி புகட்டி ஒரு சிறந்த மனிதனாக உருவாக்கும் வரை விரிவடைகிறது.

அதிலும் ஆசிரியர் என்பதைத் தாண்டி ஒரு கல்வியாளர் என்பவர் கிட்டத்தட்ட ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே உருவாக்குகிறார் என்றே கூற வேண்டும். அத்தகைய பொறுப்பும், வாய்ப்பும் பெற்றவராக இருந்து தனது கடமையை மனமுவந்து முழுமையாக நிறைவேற்றிய மாமனிதர் என்று கோவை தந்த கல்வியாளரான ஜி.ஆர்.டி என்ற டாக்டர் ஜி.ஆர்.தாமோதரனைச் சொல்லலாம்.

கல்விமுறையில் மாற்றங்களைக் கொண்டு வந்தவர். தமிழில் கலைச்சொல்லாக்கத்துக்கு ஊக்கம் அளித்தவர், பொறியியல் கல்வியில் பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியை ஒரு முன்னணி கல்வி நிறுவனமாக உருவாக்கியவர் என்ற பல பெருமைகள் இருந்தாலும் ஜி.ஆர்.டி என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவருக்கும் அவரது மாணவர்களுக்கும் இடையே இருந்த ஒரு மதிப்பு மிகுந்த பாசமிக்க உறவு தான்.

ஆம், டாக்டர் ஜி.ஆர்.டி அவர்கள் கடந்த 1950களில் தொடங்கி, 1980கள் வரை மூன்று தலைமுறை மாணவர்களின் ஆதர்சமாக திகழ்ந்தவர். ஒரு அரசியல்வாதி எப்போதும் அடுத்த தேர்தலை மனதில் கொள்ளுகிறார். ஆனால், அறிவாளி அடுத்த தலைமுறையை மனதில் கொள்ளுகிறார் என்று சொல்வதுண்டு. அரசியல்வாதி என்றாலும், அறிவாளி என்றாலும் பொதுவெளியில் இயங்கும் போது அவர்களின் பணிகளுக்கேற்ப, சமூகத்தில் பாதிப்புகளை, பலன்களை உருவாக்குவது உண்டு.

ஒரு மகாத்மா காந்தி என்ற அரசியல்வாதி உருவான போது தியாகத்தையும், சத்தியாகிரகத் தையும் பண்புகளாகக் கொண்ட ஒரு தலைமுறை உருவானது. அதைப்போலவே ஜி.ஆர்.டி என்ற கல்வியாளர் உருவான போது பல நூறு தரமான, சமூகப்பொறுப்பு மிகுந்த மாணவர்களை உருவாக்க முடிந்தது. ஆலமரத்தின் கீழ் வேறு செடிகள் எதுவும் வளராது என்பது போல மிகப்பெரும் ஆளுமைகளின் நிழலில் வளரும் வெற்றிகரமான அடுத்த தலைமுறை உருவாகாது என்ற கருத்தை பொய்யாக்கியவர் டாக்டர் ஜி.ஆர்.டி.

அவரின் மாணவர்களில் பல பேர் கல்வியறிவு என்பதைத் தாண்டி அறிவாற்றல் மிக்கவர்களாகவும், சமூகப்பொறுப்பு மிக்க வர்களாகவும், சாதனையாளர்களாகவும் இருப் பதைக் காலம் அடையாளம் காட்டுகிறது. அவரிடம் பயின்ற, பழகிய மாணவர்கள் அனைவருமே விலை மதிப்பற்ற ரத்தினங்கள் என்றாலும் எடுத்துக்காட்டுக்காக டாக்டர் ஏ.வி.வரதராஜன், டாக்டர் சுப்பையன் ஆகிய இருவரைப் பற்றி அறிந்து கொள்வது ஜி.ஆர்.டி.,யை நினைவு கூற உதவும்.

இருவருமே ஜி.ஆர்.டி. உடன் தொடர்பு கொண்டவர்கள். தனித்தன்மை கொண்டு இயங்குபவர்கள். ஏ.வி.வரதராஜன், உழைப்பால் முன்னேறிய பெரிய தொழில் அதிபராகவும், டாக்டர் சுப்பையன் சிறந்த கல்வியாளராகவும் தாங்களும் முன்னேறி, சமூகத்திற்கும் தங்கள் பங்களிப்பைச் சரியான முறையில் செய்து வருபவர்கள். இவர்கள் இருவரின் வாழ்விலும் ஜி.ஆர்.டி ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது.

இவர்கள் இருவரின் வாழ்க்கையிலும் நடைமுறைகளிலும் ஜி.ஆர்.டி.,யின் வழிகாட்டுதலும், அரவணைப்பும் ஏற்படுத்திய மாற்றங்களைக் கண்கூடாகக் காண முடியும். ஏ.வி.வரதராஜன் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில்  சூலூருக்கு அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பயின்று பள்ளிக்கல்வி முடித்து விட்டு மேற்கொண்டு கல்வியைத் தொடர இயலாத நிலையில் ஜி.ஆர்.டி.,யின் தொடர்பால் பொறியியல் கல்வி பயிலும் வாய்ப்பு பெற்றவர்.

தனக்கே உரித்தான கடுமையான உழைப்புடன், ஜி.ஆர்.டி.,யின் வழிகாட்டுதலும் சேர்ந்து கொள்ள சிறிது கால பணி அனுபவத்துக்குப் பிறகு சொந்தமாக தொழில் தொடங்கியவர் இன்று மூன்றாயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பை வழங்கும் ஒரு தொழில் குழுமத்தை உருவாக்கி இருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக கொடிசியா, இந்திய தொழில் வர்த்தக சபை போன்ற தொழில் வணிக, சேவை நிறுவனங்களின் மூலம் அவர் இப்பகுதியின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை.

தான் மட்டும் முன்னேறினால் போதாது, இந்த சமூகத்துக்கும் நாம் திருப்பி அளிக்க வேண்டும், அறிவியலும் தொழில் நுட்பமும் சமூகத்தை முன்னேற்றும் கருவிகள், எளிமையே அணிகலன் என்ற ஜி.ஆர்.டி.,யின் எண்ணங்கள்,  ஏ.வி.வரதராஜனிடமும் வேரூன்றி இருப்பதை மறுக்க முடியாது.

அதைப்போலவே டாக்டர் சுப்பையன், கணிதத்தில் பட்டதாரியாகத் தேறி ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தவர், ஜி.ஆர்.டி.,யின் தொடர்பால், வழிகாட்டுதலால் பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் துணை விரிவுரையாளராக சேர்ந்ததோடு அமெரிக்காவின் எம்.ஐ.டி. எனும் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட்  ஆப் டெக்னாலஜி எனும் தொழில்நுட்ப உயர் கல்வியகத்தில், தங்கப்பதக்கம் பெற்ற மாணவராக  கற்றுத் தேறியதோடு, தனது கல்வி அறிவு தாய் நாட்டுக்கு பயன்படவேண்டும் என்ற நோக்கில் பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளர், பேராசிரியர், துறைத்தலைவர், பிறகு கல்லூரி முதல்வர் என்று உயர்ந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக கோவையின் பெருமை மிகு உயர் கல்வி நிலையமாக பாரதியார் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட போது அதன் முதல் துணைவேந்தராக (தொடர்ந்து இருமுறை) பொறுப்பேற்று தனது பணிக்காலத்தை நிறைவு செய்து கடமையாற்றியவர். ஜி.ஆர்.டி என்ற கல்வியாளரிடமிருந்து உருவான கல்வி விழுது இவர்.

இது போல பல நூறு மாணவர்களை உருவாக்கிக் காட்டிய கல்விப்பெருந்தகை ஜி.ஆர்.டி ஆவார்.  கல்வியின் இலக்கணம் புத்தக வாசிப்பு மட்டுமல்ல, அதன் மூலம் சமூகம் பெற வேண்டிய பயன்களிலும் அடங்கி இருக்கிறது என்பதை தனது வாழ்வில் நிரூபித்து, வழிகாட்டிச் சென்ற டாக்டர் ஜி.ஆர்.டி.,யை நன்றியுடன் நினைவு கூறுவது சமூக அக்கறை கொண்ட அனைவரின் கடமையாகும்.

 

சுதந்திரமாக செயலாற்ற அனுமதிக்கும் குணம் கொண்டவர்

– டி.வித்யபிரகாஷ், ஜி.ஆர்.டியின் மூத்த மகன்

நான் 5 வயது சிறுவனாக இருந்தபோது என்னுடன் அவர் விளையாடிய நாட்கள் முதல், நான் வளர்ந்து ஒரு இளைஞனாக  சுயமாக சிந்தித்து எடுத்த தீர்மானங்கள் முடிய  அனைத்திலும் அவர் எனக்கு முழு சுதந்திரம் அளித்து, அருகே ஒரு வழிகாட்டியாய் நின்றார்.

ஒருவரின் விருப்பத்திற்கு எதிராக எதையும் செய்யக்கூடாது என்று அவர் நினைப்பார், அதை நானும் கற்றுக்கொண்டேன். யாரிடமும் ’நீ இப்படி தான் இருக்கவேண்டும்’ என்று அவர் கூறியது கிடையாது.

நான் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரி நுழைவுத்தேர்வில் தேர்வாகிய பின்னர், அவரிடம் சென்று, 5 ஆண்டுகள் பொறியியல் பயில எனக்கு பொறுமை இல்லை, அதற்கு பதிலாக நான் வேறு துறையை தேர்வு செய்து கொள்கிறேன், பொறியியல் சம்மந்தமான அறிவை நான் நடைமுறை அனுபவத்தினால், ஆர்வத்தினால் கற்றுக்கொள்கிறேன் என்று கூறினேன். என்னுடைய விருப்பத்தை அவர் நிராகரிக்கவில்லை.

என்னுடைய பொறியியல் சேர்க்கை அட்டை வீட்டிற்கு வந்தது, ஆனால் நான் அதை மற்ற ஒருவருக்கு விட்டுக்கொடுத்தேன், பொறியியலுக்கு பதில் எனக்கு பிடித்த துறைக்குள் நுழைந்தேன். அப்பாவிடம் இருந்து ’ஒருவரின் விருப்பத்தை மதிக்கவேண்டும்’ என்ற பண்பை இன்றுவரை கடைபிடித்து வருகிறேன்.

ஜி.ஆர்.டி என்றால் மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும். காலை 7.30 மணிக்கு வீட்டிலிருந்து சென்றால் சிலநாட்களில் 5.30 மணிக்கு வருவார், சில நாட்கள் 7.30 க்கு வருவார். வந்தால் புத்தகங்களை படிப்பார். ஆல்வின் டோஃப்லர் எழுதிய ’பியூச்சர் சாக்’ (Future Shock) அவர் அதிகம் வாசித்த புத்தகங்களில் ஒன்று. நிறைய படிப்பார். ஜி.ஆர்.டி என்றால் உடனே நினைவுக்கு வருவது அவரின் புத்தக பிரியம் தான்.

வீட்டிற்கு வந்து புத்தகம் படித்த பின்னர் உறங்கிவிடுவார்.  ஞாயிற்றுக்கிழமைகளில்  வீட்டிற்கு தொழிலதிபர்கள், பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் என பலர் வருவார்கள். ஆனால்  அவர் என்னுடன் குறைவாக நேரத்தை செலவு செய்ததினால் எனக்கு எந்த வருத்தமும் இருந்தது கிடையாது.

மாணவர்களின் நலன் மீதும், கல்லூரியின் வளர்ச்சியிலும் அவருக்கு இருந்த ஆர்வத்தை, ஈடுபாட்டை நான் அறிந்துகொண்டேன்.

கல்விக்காக, சமுதாயத்திற்காக அவர் செய்த சேவைகள் பல. எங்களுடைய சிறிய பங்காக ஒரு கல்வி நிலையத்தை  உருவாக்கி இன்று 1800 மாணவர்களுக்கு கல்வி வழங்கி வருகிறோம்.

நம் இளைஞர்களிடம் அப்பா என்றும் எதிர்பார்ப்பது இரண்டே விஷயங்கள் தான்; அது அவர்கள்  ஒழுக்கத்தையும் அறிவாற்றலையும் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்பதே. இளைஞர்கள் ஒருவரிடம் வேலை செய்பவர்களாக இருந்துவிடாமல், பலருக்கு வேலை வழங்குபவர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்.

 

படைப்பாளிகளின் படைப்பாளி ஜி.ஆர்.டி

– ஏ.வி.வரதராஜன், தலைவர், சாண்ட் ஃபிட்ஸ்

இந்தியாவிலேயே தொழில்முனைவோர்களை அதிகம் உருவாக்கியவர் ஐயா ஜி.ஆர்.டி தான். தொழில்முனைவோர்களை படைப்பாளி என கூறுவார்கள், அந்தகோணத்தில் பார்த்தால், அவர் படைப்பாளிகளின் படைப்பாளி.

ஒருவரை திறமைசாலி என தெரிந்துகொண்டால், அவருக்கு நிறைய வாய்ப்பளித்து, நல்ல நிலைக்கு கொண்டுவருவார். கேன்டீன் கிளெர்க்காக பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பணிபுரிந்த என்னை  அழைத்து, மேற்படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி, என்னை இந்த நிலைமைக்கு வர மிகவும் உதவியவர் அவரே. நான் அவரை ஆசானாக அல்ல, அதற்கும் மேலாக பார்க்கின்றேன்.

தன் மாணவர்களின் சாதனையை தன் சாதனையாகவே நினைத்து மகிழக்கூடியவர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் தன் மாணவர் சிவ் நாடாரின் ஹெட்ச்.சி.எல் -லை அடிக்கடி சொல்லி பாராட்டுவார். ஒருமுறை அங்கு சென்று, பார்த்து எங்களிடம் வந்து ’நீங்கள் அதை பார்க்க வேண்டும். எவ்வளவு பெரிய நிறுவனமாக வளர்ந்து இருக்கிறது!’ என்று கூறினார். இவ்வாறு, அவருடைய மாணவர்களின் வழிகாட்டுதலில் நடைபெறும்  எந்த ஒரு சாதனை நிறுவனமாக இருந்தாலும் அதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி கொள்வார்.

சாதித்த முன்னாள் மாணவர்களை கௌரவிப்பதிலும் அவர் மிக சிறப்பானவர். அந்த சந்திப்பின் போதெல்லாம் தன் மாணவர்களுடன் மிக சந்தோஷமாய் இருப்பார்.

இயல்பாகவே ஒருவர் வெளிநாடு சென்றால் பொழுதுபோக்கு சாதனங்கள், புத்தாடைகள் போன்றவற்றை வாங்கிவருவார்கள், ஆனால் ஜி.ஆர்.டி அவர்கள் புத்தகங்களை வாங்கி வருவார். பிரிட்டிஷ் நாட்டில் கிடைக்கும் அரிய அறிவியல் இதழை வாங்கி வந்து என்னிடம் ஒருமுறை அதில் குறிப்பிட்டிருக்க கூடிய தொழில்நுட்பத்தை பற்றி பேசி அதை இங்குள்ள வார்ப்பகத்தில் (பவுண்ட்ரீ) செய்ய முடியுமா என கேட்டார். அதற்கான முயற்சிகளை எடுத்து, வெற்றிபெற்றோம். இவ்வாறு, எந்நேரமும் புத்தகங்கள், அறிவியல், தொழில் வளர்ச்சி என தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்துகொண்ட மாமனிதர் அவர்.

இன்று அவர் இருந்திருந்தால், இந்தியா தொழில்நுட்ப ரீதியாக இன்னும் வெளிநாடுகளுக்கு இணையாக வில்லையே என நினைத்து வருத்தப்படுவார், அந்த நிலைமையை அடைய என்ன செய்யவேண்டும் என்ற வழிகளை காட்டி ஊக்கப்படுத்துவார்.

1982 ஆம் ஆண்டு, கொடிசியாவில் ’என்டெக்ஸ் – 82’ எனும் தொழில்முனைவோர்கள் வளர்ச்சிக்கான கண்காட்சியை நடத்தினோம். பத்து நாட்கள் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியை அவர் வந்து பார்த்தார்.  அதனுடைய நிறைவு நாள் விழாவின் சிறப்புவிருந்தினராக அவரை அழைத்திருந்தோம். அந்த விழாவில் அமைச்சர் கிருஷ்ணசாமியும் விருந்தினராக கலந்துகொண்டார். அந்த தருணத்தில் அவர் மேடையில் பேசும்போது இந்த நிகழ்வு ஏற்பட நான் எடுத்த முயற்சிகளை பாராட்டினார்.

விழா முடிந்து, அனைவரும் செல்ல தொடங்கிய பொழுது, ஜி.ஆர்.டி அவர்களை வழியனுப்ப நான் கூடவே சென்றேன். காரில் ஏறுவதற்கு முன்னே, என் தோல் மீது கையை வைத்து ’குட் ஜாப் … யு ஹவ் டன் எ வெரி குட் ஜாப்’ என்று சொல்லி காரில் சென்றார். என் வாழ்க்கையில் கிடைத்த மிக பெரிய மரியாதையாக நான் அதை பார்க்கின்றேன்.

 

அனைவருக்குமான ஜி.ஆர்.டியின் அறிவுரை

-ஆர்.சுப்பையன், முன்னாள் முதல்வர், பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி

அவர் இந்தியாவின் எதிர்காலம் அதனுடைய கல்வி மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் தான்  உள்ளது  என்பதை நன்கு அறிந்தவராக இருந்தார்.

தொழில்நுட்ப கல்வியின்  பாடத்திட்டத்தை நவீனப்படுத்த அவர் எடுத்த முயற்சிகள் மிக பெரியது.  வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு  இணையாக  பல புதிய பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்தார். அவர் தலைமையில், பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்கள்  முதன்மையான நிலைக்கு உயர்ந்தன. கல்வி, அரிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சியில் பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்கள் மிக சிறப்பாக செயல்பட்டனது.

”நம் இந்தியநாட்டின் வளர்ச்சியில் நாம் பங்கு பெறவேண்டுமென்றால் நாம் தன்னலமின்றி, அர்ப்பணிப்புடன், பிரிந்து செயல்பட வேண்டும்” என்பதே அனைவருக்குமான அவருடைய அறிவுரையாக இருந்தது.

 

தொலைநோக்கு பார்வைக்கு அளவே இல்லை!

-டி.பாலசுந்தரம், நிறுவனர் & இயக்குனர், கோயம்புத்தூர் பங்கு வர்த்தக மையம் லிட்.

ஜி. ஆர். டி ஒரு சிறந்த பொறியாளர் , உயர்ந்த  மனிதர், மிக திறமை வாய்ந்த  கல்வியாளர்.  அவருடைய தொலைநோக்கு பார்வைக்கும், உயரிய எண்ணத்திற்கும் அளவே இல்லை. தன் வாழ்க்கையை கல்வி கற்பித்தலுக்காக அர்ப்பணித்து கொண்டவர் அவர்.

நாங்கள் கல்லூரியில் பயிலும் போது, அனந்த ரஞ்சன் தாஸ் எனும் ஒரு மாணவன் எங்களுடன் பயின்றார். ரஞ்சனின் தந்தை ஒரு ஏழை  பள்ளி ஆசிரியர். அவர் ரஞ்சனை எப்படியாவது பொறியாளர் படிப்பில் சேர்க்கவேண்டுமென விரும்பினார்.

ஜி. ஆர். டி அய்யாவை கல்லூரியில் வந்து சந்தித்து, தன் மகனிற்கு உதவ வேண்டினார். அவருடைய பொருளாதார பின்னடைவையும் ரஞ்சனின் ஆர்வத்தையும் கருத்தில் கொண்டு, மேனேஜ்மென்ட் கோட்டாவில் படிக்க வாய்ப்பளித்தார். ரஞ்சன் நன்குபடித்து மெட்ராஸ் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் தலைமைத் திட்டமிடுபவராக பொறுப்பேற்றார். இதுபோல் பலரை உருவாக்கியவர் அவர்.

எப்போது வெளிநாடு சென்றாலும் கல்வியாளர்களிடமும், பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்று அமெரிக்கா இங்கிலாந்தில் பணிபுரியும் முன்னாள் மாணவர்களிடமும் இன்னும் எவ்வாறு இந்தியாவின் கல்வித்துறையை மேம்படுத்தலாம் என கருத்துக்களை கேட்பார்.

எம். சி. ஏ படிப்பு ஒரு துறையாக இங்கு உருவெடுக்க மிக முக்கியமானவர் ஜி. ஆர். டி அய்யா தான். அந்த காலங்களில் பொறியியல் கல்லூரிகளில் கணினி பற்றிய பாடங்கள் இல்லை.  பி.காம்; பி.எஸ். சி படித்தவர்களும் கணினி படிக்க இந்த துறை உதவியது.

இன்று நம் பாரத பிரதமர் அனைத்து தொழில்நுட்ப கல்விப் பாடங்களையும்  உள்ளூர் மொழி/பிராந்திய மொழியில் பயிலும் முக்கியத்துவத்தை பற்றி பேசிவருகிறார். ஆனால் ஜி. ஆர். டி அய்யா 40-50 ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் கல்வியை தமிழ் வழியே கற்பிக்க பெரும் முயற்சி எடுத்தவர்.

கல்லூரியின் தமிழ் சங்கம் மூலமாக பொறியியல் துறையில் உள்ள ஆங்கில வார்த்தைகளை தமிழாக்கம் செய்யும் பணியை அந்த சங்கத்தின் மாணவர்கள் மூலம் நடத்தினார் . எங்களுக்கு 100 வார்த்தைகள் ஆண்டிற்கு இலக்காக கொடுப்பார். கலைகதிர் எனும் மாதாந்திர பத்திரிக்கையில் அவை வெளிவரும்.

தமிழ் வழியே பள்ளிப்படிப்பினை முடித்து பொறியியல் படிக்க சேரும் மாணவர்கள் மீது அவருக்கு ஒரு தனி அக்கறை உண்டு. ஏனென்றால் அந்த மாணவர்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் இன்ஜினியரிங் கற்கும்போது இருக்கும் சிரமங்களை அவர் நன்கு அறிந்தார். அதனால் முதலாமாண்டு மாணவர்கள் சற்று பாடத்தில் பின்தங்கியிருந்தாலும் தட்டிக்குடுத்து, நம்பிக்கையளித்து வழிநடத்துவார். அவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

தலைசிறந்த கல்வியாளர், மாணவர்களின் வழிகாட்டி!

– ஆர்.எம்.வாசகம்,  முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம்

கோவை இன்று உலகத்தரம் வாய்ந்த பொறியியல் துறை பொருட்களை உற்பத்தி செய்துவருகிறது என்றால் அதற்கு முக்கியமான காரணங்களென பார்த்தால் அது அங்குள்ள மனிதவளம், அந்த மனிதவளத்திற்கு பொறியியல் துறைக்கு தேவையான கல்வியை வழங்கிய பி.ஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி.

ஜி. ஆர்.தாமோதரன் ஐயா அவர்களின் தலைமையில் அது மிக சிறப்பாய் வளர்ந்து, இன்று அது கிட்டத்தட்ட ஒரு பல்கலைக்கழகத்திற்கு நிகராக உருவெடுத்துள்ளது.

நான் பி.எஸ் .ஜி யில் ஜி.ஆர்.டி  அய்யா முதல்வராக இருக்கும்பொழுது மின் பொறியியல் பயின்றேன். இங்கிலாந்து, அமெரிக்காவில் இருக்கும் மிக சிறந்த பொறியியல் ஆராய்ச்சி முறைகளை  அப்போதே  கோவைக்கு ஜி.ஆர்.டி கொண்டுவந்தார்.  புதிய துறைகளை தைரியமாக பாடத்திட்டத்தில் அவர்  இணைத்தார். நான் பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் படிக்கும்போதே அங்கு இந்தியன் சொசைட்டி பார் டெக்கினிகள் ரிசர்ச், சி.எஸ்.ஐ.ஆர் போன்ற அமைப்புகள் கொண்டுவரப்பட்டன.

பி.எஸ்.ஜி யில் படித்தபின்  மேற்படிப்பிற்காக ஐ.ஐ.டி மெட்ராஸில் இணைந்து, 1965-ல் முதுகலை பட்டம் பெற்ற பின்னர் அதே ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தேன்.  1996-ல்  அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டேன். இப்பொழுதும் பல பொறியியல் சார்ந்த துறைகளில் செயலாற்றி வருகிறேன். இதற்க்கெல்லாம் அடித்தளமிட்டவர் அய்யா ஜி.ஆர்.டி.

அவர் கல்லூரியில் ஒவ்வொரு துறையிலும் முதல் மூன்று இடங்களை பெறுவோர்களிடம் அங்கேயே ஆசிரியராக சேர வாய்ப்பளிப்பர்.  அவர்களிடம் மாணவர்களுக்கு ஒரு பாடத்தையும், ஆய்வகத்தில் மாணவர்களுக்கு ஆய்வக சோதனைகள் பற்றி விளக்கம் அளிக்கவும், அரசாங்கத்திடமிருந்து நிதியளிக்கப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் வழிநடத்துவார்.

ஆசிரியர்களை வெளிநாட்டிற்கு கல்வித்திறனை தரமுயர்த்திக்கொள்ள அனுப்ப முயற்சிகள் எடுத்து, பலரை அவ்வாறு அனுப்பிவைத்துள்ளார். மாணவர்களிடம் தொழில்முனைவோராக வளர வேண்டும் என ஊக்குவிப்பார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆப்பிள் செயற்கைகோள் திட்ட இயக்குனராக நான் பணியாற்றி பின் கோவைக்கு வந்த பொழுது ஐயா விமான நிலையத்திலிருந்து எனக்கு மிகப்பெரிய வரவேற்பளித்தார். என்னையும் சேர்த்து 6  பி.எஸ்.ஜி கல்லூரிகளின் தலை சிறந்த மாணவர்களுக்கு அவர் தலைமையில் பாராட்டு விழா நடத்தினார்கள். வாழ்க்கையில் அதை என்றும் மறக்கமுடியாது. எண்ணற்ற சாதனையாளர்களை உருவாக்கியவர் ஜி. ஆர்.டி அவர்கள்.

அவரின் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்க முடியும் என்றால் அதுவே நாம் அவருக்கு செய்யும் சிறந்த கைமாறு.

மனித நேயம் கொண்ட மாமனிதர்!

– விஜய்மோகன் நிறுவனர், பிரிக்கால்

என் சகோதரரை போல எனக்கும் மெட்ராஸில் கல்லூரி கற்கவேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால் திரு.ஜி.ஆர்.டி என் தந்தையிடம் என்னை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியிலே சேர்ந்து விடுமாறு கூறினார். அப்போது எனக்கு சிறிய வருத்தம் இருந்தது.

கல்லூரியில் 1964-ல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயில தொடங்கினேன். நான் ஜி.ஆர்.டி அவர்களை சந்திக்கும் ஒவ்வொரு காலைப்பொழுதிலும் ’குட் மார்னிங் சார்’ என்று வணக்கம் சொல்லிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டேன்.

ஒருநாள் ஏதோ நினைவில் அவரை கவனிக்காமல் சென்ற என்னை பெயர்சொல்லி அழைத்து ’ஏன் இன்றைக்கு நீ எனக்கு காலை வணக்கம் சொல்லாமல் சென்றாய் ?” என்று சிரித்த முகத்தோடு அன்பாய் கேட்டார். அப்போது எனக்கு இவர் மற்ற அதிகாரிகள், ஆசிரியர்கள் போல் இல்லாமல் சற்று வித்தியாசமானவர் என்று அறிந்துகொண்டேன்.

என்னுடைய நான்காம் ஆண்டில் நான் கல்லூரியின் விளையாட்டு துறைக்கான மாணவர்-செயலராக பொறுப்பில் இருந்த  போது, மாரத்தான் போட்டியை நடத்த ஜி.ஆர்.டி யிடம் ஆர்வம் தெரிவித்தேன்.   அவருக்கு மாணவர்கள் விளையாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருந்தது.

மாராத்தானில் பலர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதால், அவர் என்னை அதற்கு எவ்வாறு நகராட்சி மற்றும்  காவல் துறையினரிடம் சம்மதம் வாங்கவேண்டும் என்று அவர் சகோதரர் ஜி.ஆர்.கோவிந்தராஜூலுவிடம்

சென்று இதைப்பற்றி பேச சொன்னார். அனைத்தையும் சீராக செய்து அந்த மாரத்தான் போட்டியை மிக வெற்றிகரமாக நடத்தினோம்.

இறுதி ஆண்டில் மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்யவேண்டும். பேராசிரியர் வெங்கட்ராமன் அவர்கள் என்னை கூட்டாக அல்லாமல் தனியாக ஒரு ப்ராஜெக்ட் செய்து காட்ட சொன்னார். அதை சவாலாக எடுத்துக்கொண்டு, நான் சரி என்றேன்.

கல்லூரிக்குள் இருக்கும் ஆய்வகத்தில் என் ப்ராஜெக்டிற்கு தேவையான இயந்திரங்கள் இருக்கும் ஆனால் அதை எளிதில் உபயோகிக்க முடியாது.  எந்நேரமும்  அதை நிறைய மாணவர்கள் உபயோகித்து ஆய்வு மேற்கொள்வார்கள்.  ஆனால் பின் புறம் உள்ள பி.எஸ்.ஜி இன்டஸ்ட்ரியல் இன்ஸ்டிடியூடில் எனக்கு தேவையான மெஷின் எளிதில் கிடைக்கும். எனவே நான் எனக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து, ஒரு கைவண்டியிலே வைத்து இழுத்து செல்வேன்.

இதை ஜி.ஆர்.டி பார்த்தார். என்னை அழைத்து என்ன என கேட்டுத்தெரிந்து விட்டு ”நீ உழைப்பின் கண்ணியத்தை புரிந்து கொண்டாய்” என்று கூறி பாராட்டினார்.

கல்லூரியில் பட்டம் பெற்று, பிற்காலத்தில் தொழில்முனைவோராகி பிரிக்கால் எனும் ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்தினேன். ஒரு நிறுவனத்தை எவ்வாறு திறமையாக நிர்வாகம் செய்யவேண்டும் என்பதை ஜி.ஆர்.டி யிடம் தெரிந்துகொண்டேன். அவர் ஆசிரியர்களினுடைய மாணவர்களினுடைய மனதை நன்கு புரிந்து, மிக அருமையாக கல்லூரியை நடத்தினார். இதை வெகு சிறு கல்வி நிலையங்களாலேயே செய்துகாட்ட முடிந்தது.

ஜி.ஆர்.டி அவர்கள் புதிய பாடங்களை கல்லூரியின் பாடத்திட்டத்தில் சேர்த்தார். இதனால் வெறும் புத்தக அறிவை தாண்டி, பொறியியல் சம்மந்தமான பரந்த பார்வை மாணவர்களுக்கு கிடைத்தது. கோவையில் நிறைய சிறு நிறுவனங்கள் உருவாக மிக பெரிய காரணம் பி.எஸ்.ஜி. நிறுவனம்தான். இப்படி சிறு நிறுவனமாக கோவையில் உருவான பல ஸ்தாபனங்கள் இன்று தேசிய அளவில் உயர்ந்து நிற்கிறது.

அவர்காலத்தில் நான் மாணவனாக படித்ததை நினைத்து மிகவும் மனம் மகிழ்கின்றேன்.

கல்வியின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என நினைத்தவர் ஜி.ஆர்.டி

–  எல்.கோபால கிருஷ்ணன், நிர்வாக அறங்காவலர், பி.எஸ்.ஜி அறக்கட்டளை

சமுதாயத்திற்கு சேவை செய்வதையே தன் தலையாய கடமையாக கருதி ஆரம்பிக்கப்பட்ட பி.எஸ்.ஜி அறக்கட்டளையில், ஜி ஆர்.தாமோதரன் அவர்கள் ஆற்றிய பங்கு மிகுந்த பாராட்டுதலுக்கு உரியது ஆகும்.

கல்வி ஒன்றே நம் சமுதாயத்தையும் நாட்டையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் என்ற பெரும் சிந்தனையை கொண்ட அறக்கட்டளையின் நிறுவனர்கள் போலவே, ஜி.ஆர். தாமோதரன் அவர்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கினார்.

அவருடைய காலத்தில் பி.எஸ்.ஜி யில்  கல்வி பயின்றோர் இன்று தேசிய அளவில்  மட்டுமல்லாமல்  உலகளவில் பலதுறைகளில் சாதனை செய்து இந்நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பலமாக இருந்து வருவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கின்றது.

எங்கள் நிறுவனர்களின் விருப்பத்தை மிகச்சிறப்பாக அவர் நிறைவேற்றினார். அவர் காட்டிய பாதையில் இன்னும் பலநூறு ஆண்டுகள் எங்கள் சேவை தொடரும்.

கல்வித்துறையில் தனித்தன்மை கொண்ட ஆளுமை

-சி.ஆர்.சாமிநாதன், முன்னாள் தலைமை செயல் அதிகாரி, பி.எஸ்.ஜி நிறுவனங்கள்.

என் வாழ்க்கையில் ஜி.ஆர்.டி பலநேரங்களில் எனக்கு நல்ல ஆலோசனை  வழங்கி என்னை ஊக்குவித்திருக்கிறார். அதனாலே நான் நல்ல நிலைக்கு சென்றேன்.

பி.எஸ்.ஜி இண்டஸ்ட்ரியல் இன்ஸ்டிடியூடில் மேலாண்மை பயிற்சியில் இருந்து வந்தேன். அவர் எனக்கு உதவி மேலாளர் பொறுப்பளித்தார், என்னிடம் எம்.பி.ஏ படிக்கச்சொன்னார்.  அவர் பல சங்கங்களில் முன்னணி வகுத்தார்,  என்னையும் சங்கங்களில் இணைந்து பணியாற்ற சொன்னார். சொன்னது மட்டுமில்லாது என்னை சங்கங்களின் தலைவர் பொறுப்பிற்கு உயர வழிநடத்தினார். தேசிய அளவில் என்னை பலர் அறிய, நான் பல தலைவர்களை  அறிந்துகொள்ள அவரே காரணம்.

மத்திய அரசு இந்திய மேலாண்மை கழகங்களை உருவாக்கும் முன்னே ஜி.ஆர்.டி யின் வழிகாட்டுதலில் இங்கு பி.எஸ்.ஜி மேலாண்மை துறை ஆரம்பிக்கப்பட்டது. இதில் டிப்ளமோ, முதுகலை மேலாண்மை பட்டபடிப்புகள் அப்போதே இருந்தது. ஜி.ஆர்.டி. யின் தொலைநோக்கு பார்வைக்கு இது சிறிய எடுத்துக்காட்டே!

அவர் தன் மாணவர்களிடம், தொழில் தொடங்கு, கடுமையாக உழை, நேர்மையாக லாபம் ஈட்டு, ஆனால் ஏழைக்கு கல்வி கிடைக்க உதவு என்று கேட்டுக் கொள்வார்.

கல்வியே அவரது சுவாசம்!

– டி.லக்ஷ்மி நாராயணசுவாமி,  நிர்வாக அறங்காவலர், எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை.

நான் என்னுடைய பி.யு.சி யை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியிலும், பி.டெக் டெக்ஸ்டைல்ஸ் டிகிரியை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியிலும் படித்தேன்.  பி.எஸ்.ஜி மாணவன் என்பதில், குறிப்பாக ஜி.ஆர்.டி அவர்களின் காலத்தில் படித்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் கல்லூரி காலத்தில், அவரை சில தருணங்களில் கோரிக்கைகளோடு சந்தித்துள்ளேன். அவருடைய சிறப்பு என்னவென்றால், மாணவர்கள் ஏதாவது தன்னிடம் கூற முன்வந்தால் அவர்களிடம் பொறுமையாய் விசாரிப்பார். நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தால் அதை ஏற்பார்.

அந்த காலத்தில் பி.எஸ்.ஜி என்றால் ஜி.ஆர்.டி உடனே முதலில் நினைவிற்கு வருவார். அவர் கல்விக்கான மிக பெரிய தொலைநோக்கு பார்வை கொண்டவராக  திகழ்ந்தார்.  கல்லூரியில் தரமான உள்கட்டமைப்பும்  திறமையான ஆசிரியர்களையும் கொண்டு திறன்மிக்க பொறியாளர்களை உருவாக்கினார்.

பிற்காலத்தில் அவர் மெட்ராஸ் யூனிவர்சிட்டி யின் துணை வேந்தராக இருந்த போதும் கல்வித்துறை சம்மந்தமாக அவரை சந்தித்திருக்கிறேன். என்றும் தாழ்மையான மனிதராகவே இருந்தார் ஜி.ஆர்.டி.

 

ஒருவரின் நற்பண்புகளை மட்டுமே பார்க்கக்கூடியவர்

– எஸ்.சுப்ரமணியன், முன்னாள் துணை வேந்தர், பாரதியார் பல்கலைக்கழகம்

24/7 என்பது பேச்சுவழக்கத்திற்கு வருவதற்கு முன்பே கல்விக்காகவும் மாணவர் நலனிற்காகவும் தன்னை அர்ப்பணம் செய்து கொண்டவர் அய்யா ஜி.ஆர்.டி.

பி.எஸ்.ஜி யின் மாணவனாகவும் பிந்நாளிலே ஆசிரியராகவும் செயல்படக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் முதல் செயலராக நான் நியமிக்கப்பட்டேன். அப்போதிருந்து ஜி.ஆர்.டி. அவர்களிடம் என்னால் நன்கு பழக முடிந்தது.

ஜி.ஆர்.டி ஒருவரின் பலத்தை கண்டறிந்து அதை நல்லவழியிலே செலுத்த வழிகாட்டுவார். பிறருடைய எதிர்மறையான விஷயங்களை புறம்தள்ளிவிட்டு நல்லதை மட்டுமே பார்க்கும் தன்மை கொண்டவர். யாராவது மற்றவர்களை பற்றி தவறாக சொன்னாலும், நல்லதை மட்டும் பாருங்கள் என்று கூறுவார்.

அவர் மாணவர்களிடம் கண்டிப்பும், கடுமையுமாக இருந்து ஒழுக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்று எண்ணாமல் எடுத்துக்காட்டாய் இருந்து, அன்பாக வழிநடத்தி அவர்களை பண்புள்ளவர்களாக உயர்த்தினார்.

கல்லூரியின் சமூக சேவை கிளப் மூலம் சமுதாயத்தில் தாழ்வு நிலையில் இருக்கும் மக்களிடம் மாணவர்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று விரும்பினார். சமூகரீதியாக பின்தங்கிய மக்களுக்கான மருத்துவ உதவி, உணவு உதவி, முதியோர்க் கல்வி என பல உதவிகளை இந்த சமூக சேவை கிளப் மாணவர்கள் செய்ய வாய்ப்பளித்தார். அவரும் அந்த மாணவர்களோடு முன் நின்று உதவி செய்வார்.

அவர் ஆசிரியர்களை கல்லூரி ஆரம்பித்த காலம் முதலே மேல் நாடுகளுக்கு சென்று உங்கள் அறிவுத்திறனை பன்மடங்கு உயர்த்துங்கள் எனவும், அதற்கான வழிகள் என்ன உள்ளன என்பதை பற்றி எடுத்துரைப்பார், உதவியும் தாராளமாய் செய்வார்.

1981-ல் நான் கனடா நாட்டிற்கு இவ்வாறு கல்வி தொடர்பாக செல்ல வாய்ப்பு கிடைத்தது. என்னுடன் என் மனைவியும், பிள்ளையும் அழைத்து செல்ல முடிவெடுத்தேன். அது போஸ்ட் டாக்டரல் பெல்லோஷிப் ; எனவே அதற்கு நெடுநாள் ஆகும் என்பதால் அப்போது நான் பி.எஸ்.ஜி யில் என் பணியை விட்டு விலகிவிட்டு செல்லவேண்டிய நிலை. ஆனால் ஜி.ஆர்.டி அய்யா என்னை அழைத்து பதவி விலக வேண்டாம், விடுப்பு மட்டும் எடுத்துவிட்டு பின்னர் வந்து பணியை தொடருமாறு சொன்னார்.

அவர் அத்துடன் நிற்காமல், நான் செல்வது கனடா என்பதால் உறைபனி, கடுங்குளிர் கொண்ட பருவநிலை நிகழும் என்று அறிந்த அவர், எனக்கும் என் மனைவிக்கும் மிக தரமான மேல் அங்கிகளை எங்களுக்கு வழங்கினார்.

நான் என் குடும்பத்தினருக்கும் சேர்த்து விமான பயணசீட்டு வாங்கியதினால்  என்னிடம் பெரியளவில்  காசு ஏதுமில்லை. பெங்களூரு சென்று பின் அங்கிருந்து கனடா செல்ல வேண்டிய காலம் அது. நான் விமான நிலையத்திலிருக்கின்றேன், அப்போது அய்யாவிடமிருந்து எனக்கு ஒருவர் போதிய காசை கொண்டுவந்து கொடுத்து சென்றார். நான் என்னுடைய போஸ்ட் டாக்டரல் பெல்லோஷிப் முடிந்த  பின்னர் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரிக்கே வந்து என் பணியை தொடர்ந்தேன்.  தன் மாணவர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர் ஐயா ஜி.ஆர்.தாமோதரன்.

அவருக்கு சொந்தமான நிலத்தை தன்னுடைய கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அவர் விற்றார். அன்று ஒரு சென்ட் ரூ.200தான். அனைவரையும் வாங்க சொன்னார். அதற்கு காரணம் வரும் காலங்களில் எங்கள் அனைவரிடமும் சொந்த நிலம் இருக்கவேண்டும் என்பதற்காகவே.

ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் இதேபோல் வாய்ப்பளித்தார். சித்ரா பகுதியில் உள்ள வித்யாநகர், ரங்கசாமி நகர் அவர் உருவாக்கியதே.

 

ஜி.ஆர்.டி என்றால் கல்வி

– வி.லக்ஷ்மிநாராயணசாமி, முன்னாள் தலைவர், சீமா.

ஜி.ஆர். தாமோதரன் என்றால் நினைவுக்கு வருவது கல்வி தான். அவர் ஒரு  ஒப்பற்ற மனிதர்.  தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தை  (சீமா) நிறுவினார். அவர் நிறுவிய அந்த சங்கத்தினுடைய முன்னாள் தலைவராக நான் இருந்துள்ளேன் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் என் இளங்கலை பட்டத்தை பெற்றபின்,  பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.பி.ஏ பயின்றேன். இரு தடவை நான் சேர்க்கைக்கான நேர்காணலுக்கு  சென்றபொழுது அவர் தான் என்னிடம் நேர்காணல் நிகழ்த்தினார்.

எம்.பி.ஏ சேர்க்கையின்  போது அவர் என்னிடம் ”சிறு தொழில் நிறுவனங்கள் ஏன் இன்னும் சிறுதொழில் நிறுவனங்களாக இருக்கிறது ?” என்று கேள்வி எழுப்பினார். அப்போது இருந்த அரசாங்க கொள்கைகள் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியிருந்தது.

’ஒரு மனிதனின் வாழ்க்கையின் உன்னதம் அவன் என்ன செய்கிறான் என்பதல்ல, எதை விட்டு செல்கிறான் என்பதே’ என்ற ஆங்கில கவிஞர் ஆஸ்க்கார் வைல்ட் வார்த்தை  ஜி.ஆர்.டி அவர்களுக்கு பொருந்தும்.

அவர் எழுப்பிய கட்டிடங்கள் மட்டுமல்ல, அவர் உருவாக்கிய பல திறமைசாலிகள் இன்று அவருக்கு புகழ் சேர்த்து வருகின்றனர்.

அந்த இரண்டு கல்லூரிகளிலிருந்து  இன்னும் பல ஆயிரக்கணக்கான  திறமைசாலிகளை, ஜி.ஆர்.டி தேர்ந்தேடுத்தோர் உருவாக்கி, அந்த இரண்டு நிறுவனங்களை சர்வதேச புகழ் பெற்ற இடத்திற்கு அழைத்து சென்று வருகின்றனர்.

மிகசிறந்த ஆளுமை கொண்ட நிகரில்லாத மனிதர்

-இ.பாலகுருசாமி, முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம்

ஜி.ஆர்.டி  அவர்களை  இந்தியாவின் தொழில்நுட்ப கல்விக்கு தந்தை என்று சொல்லலாம். ஜி.ஆர்.டி என்பது இந்தியாவின் தொழில்நுட்ப கல்வியில் மிக முக்கியமான பெயர்.

1962-ல் எஸ்.எஸ்.எல். சி முடித்தபின் பாலிடெக்னிக் படிக்கவேண்டுமென விரும்பினேன். அதன் காரணம் வீட்டில் அனைவரும் சிறு விவசாயிகள், பாலிடெக்னிக் முடித்ததும் குறுகிய காலத்தில் வேலை பெற்று பெற்றோர்க்கு உதவலாம் என்பதே.

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கையில் உள்ள சிறு தொகையோடு பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரிக்கு வந்தேன். ஆங்கிலத்தில் பேசினால் புரிந்து கொள்வேன் ஆனால் சரளமாய் பேச அப்போது தெரியாது. ஜி.ஆர்.டி ஐய்யா என்னிடம்  ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கான பதிலை ஆங்கிலத்தில் சொல்ல சற்று திணறினேன்.

என்னை தட்டி கொடுத்து, ’தயங்காதே, நீ நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளாய், உனக்கு டிப்ளமோ சீட் உண்டு’ என்று கூறியதோடு, என்னை கல்லூரிக் கட்டணத்தை செலுத்தி சேர்ந்துகொள்ள சொன்னார். ஆனால் நான் அவர் நடத்திய டிப்ளமோவிற்க்கான நேர்காணலில் அன்றே தேர்வாகுவேன் என நினைக்கவில்லை, நான் போதிய பணத்தையும் ஊரிலிருந்து எடுத்து வரவில்லை.

அவரிடம் இதை தெரிவித்தேன், அந்த மிகப்பெரிய மனிதர் ’விவசாயின் மகனிற்கு இங்கு நிச்சயம் அனுமதி உண்டு. நீ இங்கு மாணவனாக சேர்த்து படி, இப்போது கையில் உள்ளதை கட்டினால் போதும்’ என்று சொன்னார்.

1965-ல் டிப்ளமோ முடித்தேன். மாநில அளவு தரவரிசையில் நல்ல இடத்தை பிடித்தேன். என் ஆசிரியர் என்னை அழைத்து ஐயா விடம் நான் பெற்ற நல்ல மதிப்பெண்களை பற்றி சொன்னதும் அவர்  என்னை கல்லூரியில் பயிற்றுவிப்பாளர் பொறுப்பை வழங்கினார். அவர் எனக்கு செய்த உதவிகள் ஏராளம்.

1968 அல்லது 1969 என நினைக்கிறேன்; அப்போது இந்திய அரசாங்கம் தொழில்நுட்ப கல்வியின் தரத்தை உயர்த்தவும், இந்த துறை சார்ந்த மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தரவும் தொழில்நுட்ப கல்வி  தொடர்பான உயர் சக்தி குழு ஒன்றை அமைத்தது. அதற்க்கு தலைவராக ஜி. ஆர். தாமோதரன் அவர்களே நியமிக்கப்பட்டார். அந்த குழுவினுடைய அறிக்கைகளை எழுதும் பொறுப்பு மூவருக்கு வழங்கப்பட்டது. அதில் நானும் ஒருவராக இருந்தேன்.

நான் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் உறுப்பினராக, தமிழ் நாடு அரசிற்கு ஆலோசகராக உயர அஸ்திவாரம் இட்டவர் அய்யா   ஜி.ஆர்.டி தான்.

மிக பெரிய செல்வந்தர் அவர். ஆனால் அவர் அதை துளிகூட காட்டிக்கொள்ள மாட்டார். மிக தாழ்மையானவர். எல்லோரிடமும் சமமாய், சகஜமாக பழகுவார். மிகசிறந்த ஆளுமை கொண்ட நிகரில்லாத மனிதர்.

ஜி.ஆர்.டி ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்

– மாணிக்கம் அத்தப்ப கவுண்டர், தலைவர் மேக் இண்டஸ்ட்ரீஸ்

கல்லூரியின் முதல்வர் என்ற பொறுப்பை மட்டும் அவர் வகிக்கவில்லை.  அவர் அதையும் தாண்டி மாணவர்களின் நலன் மீது எந்நேரமும்  அக்கறை  செலுத்தும் மிகச்சிறந்த ஆசானாகவே வாழ்ந்தார்.

நான் கிராமத்தில் இருந்து நகருக்கு பொறியியல் கற்க வந்த ஒரு ஏழை விவசாயியின் மகன். எனக்கு பொறியியல் மீது உள்ள ஆர்வத்தையும் திறனையும் அடையாளம் கண்ட அவர், எனக்கு உதவித்தொகை கிடைக்க வழிசெய்தார். திறமைசாலிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிகளை செய்வார் அவர்.

அப்போது, பொறியியல் பட்டப்படிப்பில் முதல் 2 ஆண்டுகள் பொதுவான பாடங்களே பெரிதும் இருக்கும் . 3வது ஆண்டு தான் அவரவர் துறை  சார்ந்த பாடங்கள் இடம்பெறும். முதல் 2 ஆண்டுகளில் எங்களுக்கு நடைமுறை அனுபவம் இருக்க வேண்டும் என்பதற்காக கல்லூரியில் உள்ள பட்டறையில் பல பொறியியல் சம்மந்தமான இயந்திரங்களை இயக்க எங்களுக்கு பயிற்சி கிடைக்க வழிசெய்தார்.

2-ஆம் ஆண்டு முடிந்தபின் விடுமுறைக்கு வீட்டுக்கு செல்லலாம் என நாங்கள் எண்ணிய பொழுது, 45 நாட்கள் விடுமுறையில் எங்களை புகழ்பெற்ற ஜி.டி. நாயுடு அவர்களிடம் பயிற்சி எடுக்க அவரே அழைத்து சென்று  அறிமுகம் செய்துவைத்தார். எங்களை சிறந்த பொறியியல் மாணவர்களாக உருவாக்கினார். அவர் உருவாக்கிய அனைவரும் இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்ப  துறை வல்லுனர்களாய், ஆராய்ச்சியாளர்களாய், தொழிலதிபர்களாய் சிறந்து விளங்குகிறார்கள்.

அவர் காலை 7 மணிக்கு கல்லூரிக்கு வந்தால், கல்லூரியின் இயல்பான வேலை நேரம் (மாலை 4 மணி) முடிந்தும், மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுகிறார்களா, விடுதியில் தங்கும் மாணவர்கள் மாலை 7 மணியளவில் படிக்க தொடங்கிவிட்டனரா, இரவு நன்றாய் சாப்பிடுகின்றனரா என்றெல்லாம் கவனிப்பார்.

அவரின் அர்ப்பணிப்பை இன்று எங்கும் காணமுடியாது. அவர் சிறந்த ஆசான், ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்.

நல்ல ஆசிரியருக்கு ஒரு நல்ல இலக்கணம் ஜி.ஆர்.டி

– ஜெயபால், பொறியாளர்.

நான் 1970ல் பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தேன். படிக்கின்ற காலத்தில் நான் கல்லூரி நூலகத்திலே புத்தகம் வாசித்துக்கொண்டிருந்த போது ஜி.ஆர்.டி அய்யா அங்கு வந்தார். தேவை படும் புத்தகங்கள் எல்லாம் உள்ளதா என விசாரித்தார்.

நான் கல்வி இதழ் ஒன்று தேவைப்படுகின்றது என அவரிடம் கூறிய நொடிப்பொழுதில் நூலகரிடம் சென்று உடனே அதை வாங்கவும், அந்த இதழ் வந்ததும் என்னை அழைத்து வழங்கவும் கூறினார். ஜி.ஆர்.டி ஐயாவை  கல்லூரியில் எப்போதுவேண்டுமானாலும் பார்க்கலாம். அவர் அங்கேதான் இருப்பார். மிகவும் அன்பான முதல்வராக இருந்தார் அவர்.நல்ல பண்புகளை எங்களுக்கு கற்று தந்தார்.

அவருடைய முழு மனதும் கல்லூரியின், மாணவர்களின் வளர்ச்சியிலே தான் இருந்தது. நல்ல ஆசிரியருக்கு ஒரு நல் இலக்கணம் ஜி.ஆர்.டி. அவரை போல் இனி ஒருவரை பார்ப்பது அபூர்வம்.

நாடு போற்றும் கல்வித் தந்தை!

– சி.பாலசுப்ரமணியன், தலைவர், இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை

ஜி.ஆர்.டி கல்வித்துறையில் மிகப்பெரிய தொலைநோக்கு பார்வைகொண்டவர். மத்திய அரசாங்கம் 1971 ல் இந்தியாவில் பாலிடெக்னிக் கல்வியின் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சிறப்புக் குழு ஒன்றை அறிவித்தது. இந்த குழு தாமோதரன் அய்யா அவர்களின் வழிகாட்டுதலில் செயல்பட்டது. இந்தியாவில் உள்ள பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்கள் அனைத்துமே இந்த குழுவின் பரிந்துரைகளை ஏற்றன. கல்வித் துறையில் கோவையளவில், தமிழ் நாடு அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகப்பெரும் புரட்சியை கொண்டுவந்தவர் ஐயா ஜி.ஆர்.டி.

1972 லேயே அவர் கணினி, தொழில்நுட்பம் ஆகியவற்றை உணர்ந்து கணினிவசதியை பி.எஸ்.ஜி பவுண்டரியில்  ஏற்படுத்தினார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின்  ஆட்சிமன்ற குழுவில் உறுப்பினராகவும், பின்னர் இந்த இரு மிகப்பெரிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்தார்.

சீமா.; சி.எம்.ஏ.; சி.பி.சி. ஆகிய சங்கங்கள் உருவாக காரணமானவர் இவரே. மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டவர். கல்லூரியிலே தன் நாட்களை அதிகம் கழித்தார். இவரை கல்வித் தந்தை என்பார்கள் அனைவரும். நானும் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பயின்றேன் என்பதில் மிக மிக மகிழ்ச்சி. நான் ஜி.ஆர். டி யை கல்வி தெய்வமாகவே பார்க்கிறேன்.

 

கல்லூரி வளர்ச்சிக்கு தன்னை அர்பணித்துக்கொண்ட மாமனிதர்

– ஏ.கந்தசாமி, டீன், (IR&D), PSG தொழில்நுட்பக் கல்லூரி

1969-ல் நான் என் படிப்பை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் முடித்ததும் என்னை ஜி.ஆர்.டி அழைத்தார். முதல் மூன்று இடங்களை பிடித்தோர்க்கு கல்லூரியில் ஆசிரியர் ஆகும் வாய்ப்பை வழங்குவார். என்னிடம் ஆசிரியர் ஆகின்றாயா என அவர் கேட்டபொழுது நான் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளராக பணிபுரிய ஆசைப்படுவதாய் சொன்னேன்.

இவ்வளவு நல்ல மதிப்பெண்களை பெற்ற ஒருத்தர் ஆசிரியராகி மாணவர்களுக்கு பொறியியல் கற்றுக்கொடுக்கவேண்டும் என்றார். என்னால் ஆசிரியராகி கற்பிக்க முடியுமா என உறுதியாக தெரியவில்லை என்றேன். அதற்கு அவர் முயன்று பார், இந்த துறை உனக்கு பொருந்தவில்லை என்று உணர்ந்தால் பின் விருப்பம் போல் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செல்லலாமே என்றார்.

நான் அவர் வார்த்தைக்கிணங்கி முயன் றேன். மாணவர்களிடம் உரையாடுவது, நமக்கு தெரிந்தவற்றை அவர்களுக்கு தெரிவிப்பது என எனக்கு இந்த துறை மிகவும் பிடித்துபோனது. என்னால் பொறியியலை மாணவர்களிடம் எளிதில் கற்பிக்க முடிந்தது. 5 ஆண்டுகளுக்கு பின், அவர் என்னை பார்த்து ”இப்போது என்ன நினைக்கிறாய்” என்றார், நான் ”ஐயா இனிமேல் இந்த கல்லூரியை விட்டு போவதாக இல்லை” என்று சொன்னேன், அதை கேட்டுவிட்டு புன்னகையுடன் சென்றார்.

ஜி.ஆர்.டி அவர்களின் எல்.ஐ.சி. பாலிசி சம்மந்தமான தகவல் ஒரு நாள் என் கண்களில்பட்டது. இன்சூரன்ஸ் தொகையை ஒருத்தர் யார் பெயரை ’பரிந்துரைக்கப்பட்டவர்’ என சேர்கின்றாரோ அவருக்கே அந்த பணம் செல்லும். ஜி.ஆர்.டி அய்யா அந்த ’பரிந்துரைக்கப்பட்டவர்’ என்ற இடத்தில் ”பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி’ என்று பதிவிட்டிருந்தார். இந்த கல்லூரியின் மீது அவருக்கு இருந்த அர்பணிப்பிற்கு எல்லையே இல்லை.

தலைசிறந்த தொலைநோக்கு பார்வையாளர்

– கே.வி.கார்த்திக், தலைவர், சீமா

ஜி.ஆர்.டி அவர்கள் கோவை மாவட்டத்தின் தலைசிறந்த தொலைநோக்கு பார்வையாளர். 70 ஆண்டிற்கு முன் ஜவுளி மற்றும் அது சம்மந்தமான துறைகள் கோவையில் தலைதூக்கியபொழுது,  பொறியியலும் பொறியியலாளர்களும் இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மிக அவசியம் என்று கருதி அதற்காக பெரும் முயற்சிகள் எடுத்தவர் ஜி.ஆர்.டி அவர்கள்.

கோவையில் பொறியியல், பம்ப், ஃபவுண்டரி துறைகளின் வளர்ச்சிக்கு, அவைகளின் தேவையை அரசிடம் எடுத்து சொல்ல ஒரு சங்கம் அவசியம் என்பதை உணர்ந்து 1952லேயே சீமா எனும் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தை அவர் உருவாக்கினார். பின் நாட்களில் பலரும் தொழித்துறைக்கு தேவையான சங்கங்களை துவங்கினர்.

அந்த காலங்களில் லைசென்சு ராஜ்ஜியம் (License Raj) எனும் மிக சவாலான, கடினமான  தொழில்த்துறை விதிமுறைகளை அரசாங்கம் கொண்டுவந்தது. தொழில்துறையின் ஒவ்வொரு நகர்வும் அரசிடம் அறிவித்தபின்னரே நிகழவேண்டும் அப்போது. அந்த சவாலான காலங்களிலும்  சீமா மூலம் மூலப்பொருட்களை உறுப்பினர்களுக்கு கிடைக்க வழிசெய்தவர் ஜி.ஆர்.டி அய்யா என கேள்வி பட்டிருக்கிறோம்.

பொறியியல் கல்வித்துறையும் தொழில்துறையும் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதால் கிடைக்கும் நன்மைகளை அன்றே உணர்ந்தவர் அவர். அவர் உருவாக்கிய பொறியியல் கல்லூரியான பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியும் சீமாவும் இந்திய அரசின் உதவியோடு திறம்பட செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, பி.எஸ்.ஜி வழங்கிய பி.எல்.டி.சி ரிவைண்டபிள் நீரில் மூழ்கக்கூடிய மோட்டார் வடிவமைப்பு முறை பம்ப் உற்பத்தியாளர்களுக்கு சூரிய விசையியக்கக் குழாய்களுக்குப் பயன் படுத்தப்படும் ஒத்த தொழில்நுட்பத்தின் மோட்டார்கள் உருவாக்கும் நம்பிக்கை யையும் திறனையும் அளித்தது.

சீமா பி.எஸ்.ஜியுடன் தொடர்ந்து இணைந்து இன்னும் சிறப்பாக பல கண்டு பிடிப்புகளை வரும் நாட்களில் செய்யும்.

தொழிற் கல்வியின் பிதாமகர்

-இயாகோகா சுப்ரமணியன், தலைவர், நன்னெறி கழகம்

இன்று உலகில் உள்ள நகரங்களிலேயே மிக சிறந்த தொழில் முனைவோருக்கான ஒரு ஊர் இருக்கிறது என்று சொன்னால் அது கோவை மாநகரம் தான்.

ஈடு இணையற்ற ஈடுபாடும், உற்ச்சாகமும் அதற்க்கு தகுந்த அறிவும், ஆற்றலும் எல்லாவற்றையும் விட ஒரு தொழிலுக்குத் தேவையான அறமும் இருப்பதால் தான் இந்த கொங்கு பகுதியை சேர்ந்த கோவை மாநகரம் உலகில் எங்கும் பிரகாசமாக தெரிகிறது, எல்லாராலும் அறியப்படுகிறது. அதற்க்கு முக்கிய காரணம் என்று சில பேரை சொன்னாலும் எனக்கு கண் முன்னே நினைவுக்கு வருகிற ஒரே மாமனிதர் ஜி.ஆர். தாமோதரன் அவர்கள் தான்.

இங்கிருந்து வெளிநாடு சென்று தொழிற்கல்வி கற்று வந்து,  எத்தனையோ பேர் தொழில் நிறுவனங்களை தொடங்கி இந்த ஊருக்கு பெருமை சேர்த்தாலும் இந்த அற்புதமான நகரை கல்வி நகரமாக்கியவர் ஜி.ஆர்.டி அவர்கள் தான் .

தொழிற் கல்வியின் பிதாமகர் என்றே அவரை சொல்லலாம். அவர் மாணவர்களிடம் காட்டிய ஈடுபாடு அவர்கள் முன்னேற்றத்தில் காட்டிய அக்கறை, கல்லூரியில் உள்ள ஒவ்வொரு துறைக்கும் எப்படி செய்ய வேண்டும் என்ற ஒரு ஆற்றல் , எல்லாவற்றையும் விட கலைகதிர் என்ற பத்திரிகையை தொடங்கி பொறியியலை தமிழில் கொண்டு வர வேண்டும் என்று அன்றிருந்த ஆர்வம், இலக்கியத்தின் மீதிருந்த பற்று, இத்தனையும் சேர்ந்த ஒரு அற்புதமான மனிதர் ஜி.ஆர்.டி அவர்கள்.

உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் எந்த நிறுவனத்திலும், எந்த மிகப்பெரிய ஆலையிலும் நீங்கள் ஒரு பூ.சா.கோ பொறியியல் கல்லூரி மாணவரை சந்திக்காமல் இருக்கவே  முடியாது .

50, 60 வயதை கடந்தவர்களை கேட்டால் அந்த மாபெரும் மேதையை கல்விக் கடவுளாகவே அவர்கள் கொண்டாடுவார்கள். ஜி.ஆர்.டி அவர்களுடைய திருநாமம் வாழ்க.

முன்மாதிரியாக விளங்கியவர்!

– ஜெயக்குமார் ராம்தாஸ், தலைவர், கோயம்புத்தூர் மேலாண்மை சங்கம்

படித்தால் தான் வாழ்வில் உயர்வு வரும் என்பதை இங்குள்ள தலைமுறைகளுக்கு கற்றுக்கொடுத்த முன்னோடி அவர். ஒரு துறைக்கு மட்டுமல்ல… ஜி.ஆர்.டி  அவர்கள் அனைவர்க்கும் ஒரு முன்மாதிரியாக விளங்கியவர்.

தொழில்துறை நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப அறிவு மட்டும் போதாது சிறந்த மேலாண்மை  யுக்திகள் இருந்தால்தான் சிறப்பாக அவை செயல்பட முடியும் என்பதை அறிந்த அவர், கோவையில் முதன் முதலில் எம்.பி.ஏ எனும் முதுகலை வணிக மேலாண்மை பாடத்தை அறிமுகம் செய்தார். அவர் அடித்தளமிட்ட பி.எஸ்.ஜி மேலாண்மை கல்லூரி இன்று பல சாதனையாளர்களை உருவாக்கியுள்ளது.

மேலாண்மை சேவைகள் சிறு தொழில்களுக்கு கிடைக்க அவர் ஒரு மிகப்பெரிய காரணமாக இருந்தார். பின் நாட்களில் அந்த சிறு நிறுவனங்களில் பல கோவையில் வியக்க தக்க பெரும் நிறுவனங்களாக உருவெடுத்தன.

மேலாண்மையின் சேவைகள், செயல்பாடுகள் கோவைக்கு வலுசேர்க்கும் என்பதை ஜி.ஆர்.டி மற்றும் டி.ஜெயவர்த்தனவேலுபோன்ற பெரியோர் முன்னரே அறிந்து  கோயம்புத்தூர் மேலாண்மை சங்கம் (சி.எம்.ஏ) உருவாக்கினர். இந்தியாவின் மூத்த மேலாண்மை சங்கம் என்ற பெருமை சி.ம்.ஏ வைசேரும். அதற்கு பிறகு தான் அகில இந்திய மேலாண்மை சங்கமே தோன்றியது.  ஜி.ஆர்.டி கோயம்புத்தூர் மேலாண்மை சங்கத்தின் இரண்டாவது தலைவராக (1971-74) பொறுப்பு வகித்தார்.

அவர் மேலாண்மை பயிலும் மாணவர்களை தட்டி கொடுத்து அங்கீகாரம் வழங்கினார். புதுமையாக மாணவர்கள் ஏதாவது  செய்தால் அதை பற்றி கேட்டு தெரிந்துகொள்வார். நான் 2-ஆம் ஆண்டு எம்.பி.ஏ படித்துவந்த தருணத்தில் வாய்மொழித் தேர்வு (ஸ்வீஸ்ணீ ஸ்ஷீநீமீ) நடந்தது. நான் ’தேங்காய் மரங்களின் கீழ் இடைக்கால பயிர்களை அமைப்பதற்கான சாத்திய ஆய்வு’ எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டேன்.

என்னுடைய ஆய்வறிக்கையை பற்றி அந்த வாய்மொழித் தேர்வில் நான் பேசும்பொழுது ஜி.ஆர்.டி வந்துவிட்டார். நான் என் ஆய்வை விளக்கிமுடித்ததும், இயல்பாய் அனைவரும் செய்யும் ஆய்வை விட என்னுடையது தனித்துவமான ஒன்றாய் உள்ளது என்று அய்யா மிகவும் பாராட்டினார், தட்டிக்கொடுத்தார்.

எத்தனையோ தொழில்முனைவோர்கள் அவர் வழிகாட்டுதலால் கோவைக்கு கிடைத்திருக்கிறார்கள். அவர் போல் இனி வரும்காலங்களில் தொழில்துறைக்கும், மேலாண்மைத் துறைக்கும் நல்ல ஆளுமைகள் இப்போது உள்ள இளம் தலைமுறை மாணவர்களிடமிருந்து கிடைக்கவேண்டும்.

முன்னாள் மாணவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தவர்

– டி.நந்தகுமார்,  தலைவர், பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்

ஜி.ஆர்.டி யை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு மனிதநேயமிக்க மாமனிதர். பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி இன்று இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு காரணமே ஜி.ஆர்.டி அவர்கள் தான்.

அவர் அயல்நாட்டிலே மேற்படிப்பு படித்து விட்டு நம் நாடு வந்து என்ன செய்ய வேண்டும் என்றிருந்த நிலையில், தொழிற் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து   கல்லூரியை நிறுவ வேண்டும் என கனவு கண்டு,  அதை நிஜமாக்கியவர். இன்று அது பெரிய ஆலமரமாக வளர்ந்து இருக்கிறது. அந்த வகையில் அவர் ஒரு  பாராட்டத்தக்க மனிதர்.

1961 இல் அவரது முயற்சியில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தை தொடங்கி அதை சிறப்பாக செயல்படுத்த, ஊக்கமும் ஆக்கமும் அளித்தார். இன்று கோவையை பொறுத்தவரை இவ்வளவு பொறியாளர்களை கொண்டு வந்ததே  பி.எஸ்.ஜி கல்லூரிதான்.

கல்லூரியில் பயின்று 25 ஆண்டுகள் முடிந்த மாணவர்களை மீண்டும் அழைத்து சில்வர் ஜுபிலி என்ற ரீயூனியனை நடத்தினார். ஒவ்வொரு 25 ஆண்டும் முடிந்து  சென்ற மாணவர்களை மறுபடியும் கல்லூரிக்கு வரவழைத்து இரண்டு நாள் தங்க வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அவர்களுடன் உரையாடி, ஒரு குடும்ப விழாவாக அறிமுகப்படுத்தி பெருமைபடுத்தியவர். இந்த  சில்வர் ஜுபிலி ரீயூனியன் தொடர்ந்து நடந்து வருகிறது. அதற்க்கு முக்கிய காரணம் டாக்டர். ஜி.ஆர்.டி தான்.

1982 இல் நான் அக்கல்லூரியில் சேரும் போது காலை முதல் மாலை வரை அவர் கல்லூரியிலே ஒரு மாணவர் போல அனைத்துத் துறைகளுக்கும் சென்று கொண்டிருப்பார்.  விடுதிகளுக்கு வந்து அங்கு தங்கியிருக்கும் மாணவர்களிடம் உரையாடி அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் சௌகரியங்களையும்  செய்து  கொடுத்து மாலை வரை அங்கேயே இருந்து கவனித்து கொள்வார்.

எந்த ஊருக்கு சென்றாலும், உள் நாட்டில் இருந்தாலும், வெளி நாட்டில் இருந்தாலும் அங்கு அவர் பணியை முடித்துக் கொண்டு மாலையில் முன்னாள் மாணவர்களை சந்தித்து தேவையான ஆதரவுகளை அளித்தவர். அவர் பிறந்த நாளிலே அவரை நினைவு கூர்ந்து வாழ்த்தி வணங்குகிறேன்.

ஜி.ஆர்.டி ஒரு ஆதார தீபம்!

– முத்துக்குமார், தலைவர், சிபிசி

ஜி.ஆர்.டி பல நூறு தீபங்களுக்கு ஒளி ஏற்றிய ஒரு ஆதார தீபம். ஜி.ஆர்.டி என்ற மூன்றெழுத்து மந்திரச் சொல் கோவையின் பெருமைகளில் ஒன்று. எத்தனை மாணவர்கள், எத்தனை தொழிற்சாலைகள் இப்படி கோவைனுடைய ஒட்டு மொத்த வளர்ச்சியில் பேராசிரியர்  ஜி.ஆர்.டி அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

அவர் வாழ்ந்த காலத்தில் நாங்கள் இருந்திருக்கின்றோம் என்ற பெருமையை கொண்டாடுகிறோம்  என்பதே எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. கோவை உற்பத்தித்திறன் குழுவை பொறுத்த வரையிலே ‘சிட்ரா சீனிவாசன்’ அவர்களுக்குப் பிறகு இந்த உற்பத்தித்திறன் குழுவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர்  ஜி.ஆர்.டி அவர்கள் தான்.  அவர்களால் துவங்கப்பட்ட ஒரு பட்டயப்படிப்பு இன்று வரை பல நூறு மாணவர்களுக்கு, பல வேலைவாய்ப்புகளை பெற்று தந்திருக்கிறது என்பது யாராலும் மறக்க முடியாத ஒரு உண்மை.