இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் நூலகம்..!

கோவை ஜிவி ரெசிடென்சி பகுதியில் ஆமினி புத்தக நூலகம் என்ற பெயரில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே வாசிப்புத்திறனை அதிகரிக்க லாப நோக்கமில்லாமல் துவங்கப்பட்டுள்ளது.

மூன்று மாடி கட்டிடமாக உள்ள இந்த நூலகத்தில் சுமார் 2 லட்சம் புத்தகங்கள் உள்ளன.

இதுகுறித்து நூலகத்தின் நிறுவனர் கோவிந்தராஜன் கூறியதாவது: இந்த நூலகத்தில் குழந்தைகளுக்கான ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. மாதம் ரூ.225 கட்டணம் செலுத்தி நூலகத்தில் உறுப்பினர்களாக இணைந்து கொள்ள முடியும். காலை 11 மணி முதல் மாலை 8 மணி வரை நூலகம் திறந்திருக்கும்.

தமிழ், ஆங்கிலம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 2 லட்சம் புத்தகங்கள் 5 ஆயிரத்து 500 சதுரடியில் அமைந்துள்ளன. கதை புத்தகங்கள், ஆராய்ச்சி, போட்டி தேர்வுகள், கட்டுரைகள் என பல்வேறு தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் இங்குள்ளன.

புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்துவிட்டு 15 முதல் 30 நாட்களில் திருப்பி கொடுக்கலாம்.

கடந்த ஓராண்டாக இளைஞர்கள் அதிகமாக வாசிப்பதை பார்க்கிறோம். இன்னும் அதிக வாசகர்களை உருவாக்க வேண்டும் என லாப நோக்கம் இல்லாமல் துவங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.