மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை அரசு செய்கிறது: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை: கோவையில் மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாற்றுத்திறனாளி வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை    ஏற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கம் மற்றும் ஆலயம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் 16 வது மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் கோவையில் நேற்று  துவங்கியது.

நேரு உள் விளையாட்டு அரங்கம் மற்றும் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி நீச்சல் குளத்தில் மூன்று நாட்கள் இந்த தடகள போட்டிகள் நடைபெற உள்ளன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 1200 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்போட்டிகள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டெறிதல், உள்ளிட்ட பல்வேறு தடகளப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நேரு விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் அமைச்சருக்கு அணிவகுப்பு மரியாதை செய்தனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர்  பேசுகையில், சர்வேதேச தரத்தில் மைதானம் அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். மாற்றுத்திறனாளி குழந்தைகளை கடவுளின் குழந்தை என முன்னாள் முதலமைச்சர் அடிக்கடி கூறுவார். மேலும் இக்குழந்தைகளுக்கு அரசு நல்ல விசயங்களை செய்து வருகிறது. இப்போட்டியில் இவர்கள் சாதிப்பதின் மூலமாக சர்வேதேச போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும் என்றார்.

இந்த நிகழ்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன், தமிழ்நாடு பார ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.