ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு

கோவை : மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் இன்று ஆய்வு  மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட இடங்களில் பணிகள் முடிவடைந்த பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம் வார்டு எண்.77க்குட்பட்ட செல்வபுரம் வடக்கு ஹவுசிங்யூனிட் பகுதியில் நடைபெற்று வரும் தார்சாலை பணிகளை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

அதனைத்தொடர்ந்து, தெற்கு மண்டலம் கிருஷ்ணசாமி நகரில் சாலைகள் பழுது சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதை ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.24.36 கோடி மதிப்பீட்டில் மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் திவான் பகதூர் சாலையில் சுக்ரவார்பேட்டை ரோடு சந்திப்பு முதல் கௌலிபிரவுன் ரோடு வரை சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் மாதிரி சாலை அமைக்கும் பணிகள், மின்சார புதைவடம், கேபிள்கள், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள், தொலைதொடர்பு கேபில் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், இருபுறமும் பாதசாரிகள் நடைபாதைகள், அலங்கார தெருவிளக்குகள் அமைக்கும் பணிகள், ஒளிரும் விளம்பர பலகைகள் அமைக்கும் பணிகள் ஆகிய பணிகள்  நடைபெற்று வருவதை பார்வையிட்ட ஆணையர் இப்பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.