செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பொதுமக்கள் சாலை மறியல்

கோவை: குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை கள்ளிமடை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை கள்ளிமடை பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடுமங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தனியார் நிலத்தில் செல்போன் டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதை தடுக்க கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவை- திருச்சி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஆதவன் என்பவர் கூறுகையில், “தனியார் இடத்தில் செல்போன் டவர் அமைக்கும் முயற்சி நடைபெறுகிறது. இதுகுறித்து ஊர் பொதுமக்கள் யாரிடமும் கூறவில்லை. தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. சட்ட ரீதியாக இதை தடுக்க முயற்சித்தும் பிரியோஜனம் இல்லை. டவர் வைத்தால் கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளும் பிரச்சனைகள் ஏற்படும். எனவே உடனடியாக இதனைதடுக்க வேண்டும்.” என்றார். பொதுமக்கள் நடத்திய இந்த போராட்டத்தால் திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.