கோவையைச் சேர்ந்த கராத்தே பயிற்சியாளருக்கு முதலமைச்சர் விருது

கோவை: தமிழகத்தில் முதன் முறையாக கோவையை சேர்ந்த கராத்தே பயிற்சியாளருக்கு முதலமைச்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1986ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்து வருகிறார் கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன். கராத்தே கலையில் பல்வேறு விருதுகளைப் பெற்ற இவர், ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி என்ற கராத்தே பள்ளி மூலம் மாணவர்களுக்கு கராத்தே கலையை கடந்த 34 ஆண்டுகளாக பயிற்றுவித்து வருகிறார். 1993ல் இருந்து 1996 வரை தொடர்ந்து மூன்றாண்டுகள் தேசிய அளவிலான போட்டியில் முதலிடத்தை பெற்றவர் கார்த்திகேயன்.

கடந்த 1996ம் ஆண்டு முதல் இவரிடம் இருந்து கராத்தே கலையை கற்றுக்கொண்ட மாணவர்களில் பலர் தேசிய அளவிலான சாதனைகளைச் செய்துள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு இவரது மாணவன் கராத்தே கலையில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில், கராத்தே கலையினை மாணவர்கள் மத்தியில் சிறப்பாக கொண்டு சேர்த்தமைக்காக தமிழக அரசின் சார்பில் ”கராத்தே கலையில் தலைசிறந்த பயிற்சியாளருக்கான பட்டம்” பெற்றுள்ளார்.

இதுகுறித்து கார்த்திகேயன் கூறுகையில், “2011ம் ஆண்டு பெய்ஜிங் நகரில் நடந்த ஆசிய அளவிலான போட்டிகளிலும், 2019ம் ஆண்டு காமன் வெல்த் போட்டிகளிலும் எனது மாணவர்கள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வந்துள்ளனர். மேலும், 65 மாணவர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டிகளிலும், 7 மாணவர்கள் பள்ளிகள் அளவிலான தேசிய கராத்தே போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்று வந்துள்ளனர். கடந்த 8ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் இருந்து இந்த விருதினை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், கேடயம்  மற்றும்  ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு மாணவர்களை தயார் படுத்துவேன்.” என்றார்.

தமிழகத்திலேயே காரத்தே கலையில் சிறந்த பயிற்சியாளர் என்ற பட்டயம் கோவையை கார்த்திகேயனுக்கு தான் முதல் முதலாக வழங்கப்பட்டுள்ளது என்பது கோவைக்கு கிடைத்த கூடுதல் பெருமையாக உள்ளது.