ஜவுளி உலகில் புதிய புரட்சி – ஈரோடு டெக்ஸ்வேலி

P.ராஜசேகர், நிர்வாக இயக்குனர், டெக்ஸ்வேலி

குறைந்த விலையில் தரமான ஆடைகள். மொத்தவிலை வியாபாரமும், சில்லறை விலை வியாபாரமும் உண்டு.

ஈரோட்டில் உற்பத்தியாகும் ஜவுளிப் பொருட்களுக்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு பல ஆண்டுகளாய் உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தரமான ஜவுளிப் பொருட்களை உற்பத்தி செய்யும் லட்சக்கணக்கானோர் இங்கு சிறியளவு முதல் ஏற்றுமதி செய்யும் அளவு வரை உள்ளனர்.

இப்படிப்பட்ட ஒரு மாவட்டத்தில்தான் ‘டெக்ஸ்வேலி’ எனும் இந்தியாவின் முதல் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஜவுளி வணிக மையம் அமைந்துள்ளது. 16 லட்சம் சதுரடியில் 1000-க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்ட நவீன விற்பனை மையம் இது. முழுக்க முழுக்க ஈரோட்டின் ஜவுளித் துறையைச் சேர்ந்த அனைவரையும் சர்வதேச சந்தையில் இடம்பெற வைக்கவும், நாடு முழுவதும் மொத்த வியாபார அடிப்படையிலான ஜவுளித் தேவைகளுக்கு மூலமாக விளங்கக்கூடிய இடமாக ஈரோடு இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் உதவியோடு, லோட்டஸ் குழுமமும் URC குழுமமும்  இனைந்து உருவாக்கிய ஸ்தாபனம் இது.

2014-ல் இருந்து சிறப்பாக இயங்கிவரும் டெக்ஸ்வேலியின் நிர்வாக இயக்குநர் ராஜசேகர், ஈரோடு லோட்டஸ் குழுமத் தலைவர் பெரியசாமி அவர்களின் மூத்த மகன் ஆவார். இவர், நாம் இதுவரை பார்த்த தொழில்முனைவோர்களில் இருந்து பல்வேறு வகையிலும் வேறுபட்ட மனிதர். ‘டெக்ஸ்வெலி’ துவங்கும் முன்னரே தன் திறமையால் லோட்டஸ் டிவிஎஸ் நிறுவனத்தை இந்திய அளவில் ‘அதிகம் விற்பனை செய்யும் டீலர்’ என்கிற பெருமைக்கு அழைத்துச் சென்றவர்.

ரூ.140 கோடி மதிப்பிலான டெக்ஸ்வேலியை உருவாக்க இவர் எடுத்த கடும் முயற்சியையும், இந்த பிரம்மாண்டத்தை நிகழ்த்திய அனுபவத்தையும் குறித்து இவர் அளித்த சுவராசியமான தகவல்கள் வாசகர்களுக்காக:

டெக்ஸ்வெலி உருவான கதை:

ஆரம்ப காலத்தில் கோயம்பத்தூரில் இருந்தபோது சந்தித்த பெரியோர்களின் எல்லை கடந்த மனிதநேய எண்ணங்களை அறிந்து வியந்த இவர், அதைப்போல் தான் வளர்ந்த ஈரோட்டிற்கும் ஏதாவது செய்ய எண்ணிய தருணத்தில் இவர் முன் நின்றது ஜவுளி துறை.

ஈரோட்டில் ஏற்கனவே உள்ள ஜவுளிப் பொருட்களை மிகப்பெரிய அளவில் சந்தைப்படுத்த எந்தப் பெரிய அடித்தளமும் இல்லாததை உணர்ந்த இவர், அதற்கானத் தீர்வைத் தேடும் ஆய்வில் இறங்கினார். அவ்வாறு செய்தால் அது அடுத்தத் தலைமுறைக்கும், ஈரோட்டின் வளர்ச்சிக்கும் பக்க பலமாய் இருக்கும் என்று எண்ணினார்.

2006-ல் அப்போதைய மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராக இருந்த  EVKS இளங்கோவன் அவர்களிடம் அதுகுறித்த தனது திட்டத்தை விவரித்தார். எங்கெல்லாம் ஒரு பொருளுக்கான நல்ல சந்தை இருக்கிறதோ அங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது எனத் தன்  திட்ட அறிக்கையில் அரசாங்கத்திடமும் சுட்டிக்காட்டினார்.

இவரின் மிகப்பெரிய திட்டமான டெக்ஸ்வெலியினால் ஈரோட்டிற்கு கிடைக்கவிருக்கும் பலனை அறிந்த  மத்திய அரசாங்கம், 2008-09 ஆம் ஆண்டு ரூ. 40 கோடி மானியம் வழங்கியது. அதன் பின் URC குழுமத்துடன் இணைந்து, நிதியுதவிக்கு வங்கிகளை நாடி 2014 முதல் வியாபார சேவைகள் டெக்ஸ்வெலியில் துவங்கியது.

வாடிக்கையாளர்களின் வரவேற்பு:

டெக்ஸ்வெலிக்கு ஆரம்பம் முதலே நல்ல வரவேற்பு கிடைத்தது. அங்கிருந்த 1000 க்கும் அதிகமான கடைகளில் பலவற்றை உற்பத்தியாளர்கள்  பலர் விலைகொடுத்து வாங்கவும்,  வாடகை கொடுத்தும் வியாபாரத்தைத் துவங்க வசதிகள் வழங்கப்பட்டன.

ஈரோடு சந்தையில் உள்ள ஒரு மூன்றாயிரம் வியாபாரிகள் துவக்கத்தில் இங்குள்ள 4 லட்சம் சதுர அடியில் உருவாகியுள்ள வாரச் சந்தைக்கு வர ஆர்வம் காட்டி பதிவு செய்தனர். அதில் இப்போதும் 1/3 பகுதியினர் இங்குள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கேரளா, ஆந்திர, கர்நாடகம், தெலுங்கானா, கோவா போன்ற இடங்களில் இருந்து மொத்த விலை வியாபாரிகள் அதிகமாக வருகின்றனர். “நாங்கள் டெக்ஸ்வெலியை மொத்த விலை வியாபார மையமாகவே பார்க்கிறோம். சில்லறை வியாபாரம் மட்டும் செய்யத் தேவை நேர்ந்திருந்தால் வெறும் 10% நிலம் மட்டுமே தேவைப்பட்டிருக்கும். ஈரோட்டில் அளவிட முடியாத வகையில் ஜவுளிப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. டெக்ஸ்வெலியானது, இங்குள்ள உற்பத்தியாளர்களை நேரடியாக மொத்த விலை கொடுத்து அள்ளிச்செல்லும் வியாபாரிகளிடம் கொண்டுசேர்க்கின்றது. “இடையில் இடைத்தரகர்கள் எவருமின்றி செயல்படுவதால் கடைக்கார்கள் அனைவருக்கும் நல்ல பலன் கிடைத்து வருகிறது” என்கிறார் ராஜசேகர்.

மொத்த விலை வியாபாரம் செய்ய வெளி மாவட்டங்கள், மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு ஈரோடு சந்திப்பிலிருந்தும், கோவை விமான நிலையத்திலிருந்தும், ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்தும் இலவசமாக இங்கு வந்து சேர பேருந்து சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சவால்களுக்குத் தீர்வு !

தற்போது  இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து ஏற்றுமதியாளரும் ஒரு ஜவுளி பிராண்ட் நடத்தி வருகின்றனர். அதன் மூலமாகவும் அவர்களின் தொழிலில் நல்ல வளர்ச்சி அடைந்து வருகின்றது.  ஆனால் ஈரோட்டில் பலர் ஒரு ஜவுளிப் பொருளுக்கு (சட்டை அல்லது டீ-ஷர்ட்) தேவையான பண்டங்களை உருவாக்குபவர்களாக மட்டுமே இருந்து வருகின்றனர்.

அவர்கள் முதலில் ஆக்கம்பெற்ற சரக்கு உற்பத்தியாளராக (Finished goods manufacturer) மாறவேண்டும். பின்னர் அதன்படி உற்பத்தியாகும் பொருட்களை மற்றவர்களுக்காக ஆர்டர் மூலம் உருவாக்கிவரும் நிறுவனங்கள் அதனை ஒரு தனி பிராண்டாக மாற்ற வேண்டும். அப்படி மாறினால் இன்னும் அவர்களின் தொழில் மென்மேலும் உயரும்.

இந்த இரண்டும் பெரிய சவாலாக இருந்தாலும், டெக்ஸ்வெலியில் இப்படிப்பட்ட மாற்றத்தை அடைய விரும்புவோருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுகிறது.

என்ன மாதிரியான ஜவுளிப் பொருட்களை சிறு நிறுவனத்தோர் உற்பத்தி செய்யமுடியும் என அவர்களுக்குத் தெரியப்படுத்த, உருவாக்கிக் காட்ட பேஷன் டிசைனர்ஸ் கிளப் என்ற அமைப்பை உருவாக்கி, 4,500 பேஷன் டிசைன் பயிலும் மாணவ, மாணவிகளை இதில் உறுப்பினராக்கி அவர்கள் மூலம் என்னவிதமான ஆக்கம்பெற்ற சரக்கை இவர்களால் தயாரிக்க முடியும் எனத் தெரியப்படுத்துகின்றனர்.

டெக்ஸ்வெலியில் கிளை அமைத்துள்ள வங்கிகள் மூலமாக, மத்திய அரசாங்கத்தின் முத்ரா கடன் உதவிக்கு வழி அமைத்துத் தரப்படுகிறது. இவ்வாறு கடன் பெற்று, பொருட்களை தயாரிப்பவர்களிடம் மொத்த விலையில் வாங்கிச்செல்ல வாடிக்கையாளர்களையும் டெக்ஸ்வெலி நிர்வாகம் வழி செய்கின்றது. இதுபோல் 15 முதல் 20 புதிய பிராண்ட்களை டெக்ஸ்வெலி உருவாக்கியுள்ளது.

கொரோனா ஊரடங்கிற்குப் பின் டெக்ஸ்வெலியின்  திட்டங்கள்:

இது பற்றி ராஜசேகர் பேசுகையில் “டெக்ஸ்வெலியின் துணை நிறுவனம்தான் டெக்ஸ்வெலி பீ.டு.பீ. நிறுவனம் (Buyer to Buyer). இதன் மூலம் இங்குள்ள பொருட்களையும், இங்குவரும் புத்தம் புதிய பொருட்களையும் இதர ஜவுளிப் பொருட்களையும் நாங்கள் புகைப்படம் எடுத்து, எங்களுடைய இணையதளத்திலும் செயலியிலும் பதிவேற்றம் செய்வோம். எங்களின் செயலியை சுமார் 40,000சில்லறை வியாபாரிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர்”. “அவர்களின் பொருட்களை வாங்கும் தகவல்களை வைத்து அவர்களுக்கு எந்தப் பொருட்கள் தேவை அதிகம் இருக்கும் என்று அறிந்து, அதைப் பரிந்துரை செய்வோம். 200 வாடிக்கையாளர்களுக்கு 1 நிர்வாகி இந்த வேலையை செய்வார்”.

“குறைந்தபட்சம் ரூ. 2000 திற்கு பொருள் வாங்கினால், அந்த ஆர்டரில் உள்ள பொருட்கள் இங்கு பல கடைகளில் இருந்தாலும் அவற்றை நாங்கள் ஒரே பார்சலாக அனுப்பி வைப்போம். நம்முடைய 30,000 திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை டெக்ஸ்வெலி  பீ.டு.பீ.  மூலமாக பொருள் வாங்கும்பொழுது ரூ.1லட்சத்திற்கு பொருள் ஆர்டர் செய்தாலும் , முதல் கட்டமாய் ரூ 30,000 கட்ட வேண்டும். மீதியை அடுத்த நாள் கட்டலாம்”.

“இவ்வாறு பணப் பரிவர்த்தனை வாயிலான வணிகத்தை இங்குள்ள வியாபாரிகளுக்கு ஏற்படுத்தித்தர, ரூ. 30,000 திற்கு ஒவ்வொரு மாதமும் பொருட்களை வாங்குவோருக்கு ரூ.12 கோடி பரிசு என ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுளோம்”.

“இவ்வாறு 30,000 மொத்த வியாபார வாடிக்கையாளர்கள், ரூ. 30,000 திற்கு ஒரு மாதம் வாங்கினால் ரூ.90 கோடி வியாபாரம் ஏற்படும். அதுவே 12 மாதத்திற்கு நடந்தால் ரூ. 1,080 கோடி வியாபாரம் நடைபெறும்”.

“இப்போது கணக்குப் போட்டு பார்த்தால் நம்மிடம் 1,000 கடைகள் செயல்பட்டு வருகின்றன. கணக்குப்படி, இங்குள்ள ஒரு கடையில் ஆண்டிற்கு சுமார் ரூ. 1 கோடி வியாபாரம் நடைபெறும். அதேநேரம், இங்கு ஒரு கடையின் விலையே ரூ. 30 லட்சம்தான். ஆக, கூட்டிக் கழித்து  பார்த்தால் ஒரே ஆண்டில் கடை வாங்கியவர்கள் அவர்களின் முதலீட்டைத் திரும்ப எடுத்துவிடலாம். இது கடைக்காரர்களுக்கான லாபம்”.

“ஒவ்வொரு மாதமும் ரூ. 1 கோடி பரிசு பணம் தனியே எடுத்து வைக்கப்படுகிறது. ஆண்டு நிறைவில் ரூ. 12 கோடி பரிசுத் தொகையாக டெக்ஸ்வெலி பீ.டு.பீ -யின் வியாபாரிகளிடம் பொருள் வாங்குவோருக்கு பிரித்தளிக்கப்படும். இது பொருள் வாங்குவோருக்கான லாபம்” என்கிறார்.

ஏற்றுமதிக்கான வழி வகுத்துத்தருகிறோம்:

“டெக்ஸ்வெலியில் தொழில் நடத்துபவர்கள், தங்களது மொத்த விலை வியாபாரத்தைத்  தரம் உயர்த்த நாங்கள் அதிக கவனம் செலுத்திவருகிறோம்.மிகப்பெரிய, முழுநேர  ஒழுங்கமைக்கப்பட்ட ஏற்றுமதிகளில் தற்போது அந்தளவு ஈடுபாடு இல்லாவிட்டாலும், ஏற்றுமதிக்குள் அவர்கள் நுழைய பாலமாக உள்ளோம்”.

“ ‘வீவ்ஸ்’ என்ற மிகப்பெரிய ஜவுளிப் பொருட்காட்சியை வருடா வருடம் நடத்தி வருகிறோம். இங்கு இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் உள்ள ஏற்றுமதியாளர்களையும் வரவழைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். பெரியளவில் ஏற்றுமதி செய்வோர்களுக்குத் தேவையானப் பொருட்களை இந்தப் பொருட்காட்சி மிகவும் உதவியாக இருந்துவருகிறது”, என தெரிவித்தார்.

“சில்லறை வியாபாரத்தை மிகப்பெரிய அளவில் செய்பவர்களும் டெக்ஸ்வெலியில் பொருட்களை மிக எளிதில் வாங்கலாம். பொருட்களை வாங்க அவர்கள் தனியே ஒரு நபரை நியமனம் செய்ய அவசியம் இல்லை. டெக்ஸ்வெலி செயலி மூலம் தேவையானப் பொருட்களைத் தேர்வுசெய்து ஆர்டர் செய்தால், அத்தனையும் அவர் இருக்கும் இடம் தேடி வரும்”.

“மேலும்,  டெக்ஸ்வெலியில் பொருட்களை வாங்குவதன் மூலம் வியாபாரிகள் தங்கள் கடைகளில் பொருட்களை மாதக்கணக்கில் கையிருப்பு வைக்க அவசியம் இருக்காது. கடையில் பொருட்கள் குறையும்பொழுது அவர்களுக்குத் தேவையான பொருட்களை டெக்ஸ்வெலி விற்பனையாளர்களிடம் ஆர்டர் செய்தால் அதைக் கூரியர் மூலம் அடுத்தநாள் கொண்டுபோய் சேர்க்கும் வசதி உண்டு”.

தொழில் முனைய ஆர்வமுள்ளவர்களுக்கு வரவேற்பு :

டெக்ஸ்வெலியில் ஜவுளித் தொழில் துவங்க ஆசையும் ஆர்வமும் இருந்தால், நாங்கள் எல்லா வகையிலும் வழி வகுத்துத் தருகின்றோம். அதாவது, வங்கிக் கடன் கிடைக்க, உங்கள் ஆர்வத்திற்கேற்ப என்ன பொருள் விற்பனை செய்யலாம், உங்களின் பொருளை யார் உற்பத்தி செய்வார்கள், அந்தப் பொருளை யார் வாங்குவார்களென அனைத்து உதவிகளையும் செய்ய இங்கு நாங்கள்  தயாராக உள்ளோம்.
கடையை வாங்க நாங்கள் அழைக்கவில்லை, இங்குவந்து தொழில் செய்து கிடைக்கும் அனுபத்தைப் பெற்றுப்பார்க்கவே சொல்கிறோம்.

டெக்ஸ்வெலியின் ஒரே எதிர்பார்ப்பு:

“இங்கு தொழிலை வளர்க்க மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. ஈரோடு மார்க்கெட்டில் உள்ளோர் அனைவரும் இங்குவந்து செழிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இங்கு வந்து அந்த அனுபவத்தைப் பார்த்து அதன்பின் முழுமையாகத் தொழிலை டெக்ஸ்வெலியில் நடத்தலாமா என்ற முடிவை அவர்கள் எடுக்கலாம்”.

“டெக்ஸ்வெலியின் வாடிக்கையாளர் – விற்பனையாளர் மற்றும் இங்கு நடக்கும் வியாபாரத்தை அடிப்படையாக வைத்து 2017-18 இல்  சர்வதேச சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி நிறுவனமான ஏ.சி. நீயல்சென் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் 2021-ல் டெக்ஸ்வெலியில் ரூ. 10,000 கோடிக்கு வியாபாரம் நடைபெற மிகப்பெரும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது”.

“பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, பொருளாதார மந்த நிலை, கொரோனா சூழல் என எந்த இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் மேற்கொண்ட இலக்கை அடைய, ஈரோடு ஜவுளித் துறையை பன்மடங்கு உயர்த்த டெக்ஸ்வெலி தொடர்ந்து முயற்சி செய்யும்” என்றார் தொழில்துறை சாதனையாளர் ராஜசேகர்.