மத்திய பட்ஜெட்டால் கோவைக்கு கிடைத்த பயன் என்ன?

 

இந்திய அரசின் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் முறையாக பட்ஜெட் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய நாடு முழுமைக்குமான திட்டம் என்பதால் குறிப்பிட்ட திட்டம் அல்லது பகுதி என்று பார்க்க முடியாது என்ற போதிலும், அவரவர் வாழும் பகுதிக்கு என்னென்ன சாதக, பாதக அம்சங்கள் உள்ளன? முன்னுரிமைகள் தரப்பட்டு உள்ளன? என்று ஆராய்வதில் தவறில்லை.

அந்த வகையில் கோவை பகுதிக்கு இந்த பட்ஜெட்டால் என்ன பெரிய நன்மைகள் கிடைத்திருக்கின்றன என்று பார்த்தால், பெரிய அளவில் இல்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றால், கோவை மற்ற பகுதிகளில் இருந்து சற்றே மாறுபட்டது. இப்பகுதியின் தேவைகள் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து வேறுபட்டதாகவே உள்ளது. அதுவும் கோவை மாவட்டம் தொழில் துறையினர் நிறைந்த மாவட்டமாக உள்ளதால் அதன் தேவைகளை இந்த பட்ஜெட் நிறைவு செய்யவில்லை என்ற கருத்து நிலவுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் அதிகம் பாதிப்பை சந்தித்த மாவட்டங்களில் கோவையும் ஒன்று. வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இப்போது தான் பணிக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். தொழில் துறையினர் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், மூலப்பொருட்களின் தொடர் விலை உயர்வு தொழில் துறையினருக்கு பேரிடியாய் அமைந்துள்ளது.

பட்ஜெட்டில், இது குறித்து சில அறிவிப்புகள் இருக்கின்றன. ஆனாலும், கோவையின் தொழில் துறையின் வளர்ச்சி சார்ந்த, அதற்கான நிவாரணம் சார்ந்த அறிவிப்புகள் எதிர்பார்த்த அளவு இதில் இருப்பதாகத் தெரியவில்லை.

ஏற்கனவே பல ஆண்டுகளாக கோவை மாவட்ட மக்கள் கோரிக்கை மனு அளித்து காத்திருந்த உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட தேவைகள், குறித்து எந்த குறிப்பான அறிவிப்புகளும் இல்லை. சாலை வசதி மேம்பாட்டுக்காக சுமார் ரூ.ஒரு லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு இருந்தாலும், இதனால் கோவை எந்த அளவுக்கு பயன்பெறும்? என்று தெரியவில்லை.

தமிழக அரசின் சாலைப் பணிகள், பாலம் கட்டும் பணிகள் ஆங்காங்கே மின்னல் வேகத்தில் நடந்தேறி வருகின்றன. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அவினாசி சாலை மேம்பால கட்டுமான பணிகள் தற்போது துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் என்ன ஆனது? என்ற கேள்விக்கு எங்கே பதில் தேடுவது என்று தெரியவில்லை.

இதே காலகட்டத்தில் தொடங்கிய கொச்சின் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு, பயணிகள் மகிழ்ச்சியாய் அதனை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதேபோல், சென்னைக்கு இரண்டாவது மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சுமார் ரூ.63 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இங்கே எப்போது மழை வருமோ? என்று வானம் பார்க்கும் விவசாயி போல கோவைக்கு எப்போது மெட்ரோ வருமோ? என்று மக்கள் காத்திருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக தொழில் துறை வளர்வதற்கு உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக போக்குவரத்து வசதிகள் மிக மிக இன்றியமையாதவை. அது குறித்த அறிவிப்புகளில் கோவைக்கென பெரிதாக பயனளிக்கும் திட்டங்கள் இல்லை என்றே மக்கள் கருதுகிறார்கள்.

சென்னைக்கும், பெங்களூர் போன்ற நகரங்களுக்குமான இரவு நேர ரயில் என்பது பல ஆண்டுகளாக கேட்கப்பட்டு வரும் கோரிக்கை. அத்தகையை அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இல்லை. அதேபோல், இப்பகுதியின் சாலை போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்தும் விதத்தில் இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.  மேலும், விமான நிலைய விரிவாக்கம் மற்றும் புதிய சேவைகள் அறிமுகம், இப்பகுதியில் புதிய தொழில் வழித்தடம் என்று கோவை தொழில் துறைக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் தொலை நோக்கோடு திட்டங்கள் வரும் என்ற எதிர்பார்ப்புகள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் காணக்கிடைக்கவில்லை.

இந்த வரவு செலவுத் திட்டம்  நாட்டின் சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளில் முக்கிய கவனம் செலுத்தி இருப்பது போல கோவை பகுதியின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. இதனைத் தகுந்த முறையில் அரசிடம் எடுத்துச்சொல்லி, தொழில் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது மக்கள் பிரதிநிதிகளின் பணி என்பதை இங்கே நினைவுகொள்ள வேண்டியது மிக அவசியம்.