வானிலை சார்ந்த வேளாண் பரிந்துரை – விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் மற்றும் இந்திய வானிலைத் துறையின் வேளாண் பிரிவும் இணைந்து கிராம அளவிலான வேளாண் வானிலை சேவை என்ற திட்டத்தின் மூலம் கடந்த 20 வருடங்களாக வானிலை சார்ந்த வேளாண் பரிந்துரைகளை விவசாயிகளுக்கு வழங்கிவருகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கான பயன்கள் மற்றும் வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளுக்கான செயலிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் 02.02.2021 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் மேலாண்மை இயக்குநர் கீதாலட்சுமி வானிலை சார்ந்த பரிந்துரைகள் எவ்வாறு தயாரிக்கப்பட்டு வாரம் இருமுறை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விவாசாயிகளுக்கு குறுந்தகவல் மூலமாக வழங்கப்படுகிறது என்பதனை விளக்கி கூறினார்.

வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் துறைத் தலைவர் ராமநாதன் பல்வேறு வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளுக்கான செயலிகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். பேராசிரியர் மரகதம் வானிலை எவ்வாறு விவசாயத்தினை பாதிக்கிறது மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார். தொடர்ந்து இணைப் பேராசிரியர் சத்தியமூர்த்தி வானிலை ஆய்வு மையத்தில் எவ்வாறு மழை மற்றும் வெப்ப அளவீடுகள் செய்யப்படுகின்றன என்பதனை செயல்விளக்கம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். திட்ட அலுவலர் மற்றும் உதவிப் பேராசிரியர் தீபாகரன் வானிலை, பயிர், பூச்சி மற்றும் நோய்க்களுக்கிடையிலான தொடர்பு பற்றியும் மற்றும் உதவிப் பேராசிரியர் கோகிலவாணி கடந்த மாதத்தில் பெய்த அதிகப்படியான மழையினால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினை குறைக்கும் வழிமுறைகள் பற்றியும் பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து சுமார் 40 விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.