32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவையில் 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு எமதர்மன், சித்திரகுப்தன் வேடமிட்டு வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

கோவை மாநகர காவல்துறை சார்பில் தினந்தோறும் பல்வேறு இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வெள்ளிக்கிழமை இன்று கோவை சாயிபாபாகாலனி நான்குமுனை சந்திப்பில் எமலோகத்தில் ஆஃபர் எனும் விழிப்புணர்வை போக்குவரத்து உதவி ஆணையர் ராஜ் கண்ணா தலைமையில் எமதர்மன், சித்திரகுப்தன், உலகத்தில் உயர்ந்த மனிதன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல்வேறு வேடமிட்டு வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

சாலை விதிகளை மீறுவதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள், தலைக்கவசம் அணிய வேண்டிய அவசியம், சிக்னலை மதிக்காமல் செல்வது, வேகமாக சாலையில் பயணிப்பது, ஒன்வேயில் பயணிப்பதன் ஆபத்துகள் குறித்து எமதர்மன், சித்திரகுப்தன் வேடமிட்டு சாலையில் உயிரிழப்புகள் தவிர்க்க வேண்டிய வழிகள் குறித்தும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதில் போக்குவரத்து காவலர்கள்   துண்டு பிரசுரங்களை கொடுத்து வாகன விதிமுறைகளை குறித்து கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினர்.