வாக்கு எண்ணும் மையத்தில் தேவைப்பபடும் அடிப்படை கட்டமைப்பு பற்றி ஆய்வு

எதிர்வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குப்பதிவுகளை எண்ணும் மையமாக செயல்படவுள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து வெள்ளிக்கிழமை இன்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள கோவை வடக்கு, கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர் கவுண்டம்பாளையம், சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்மன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையமாக செயல்படவுள்ள கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வெள்ளிக்கிழமை இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலின் போது சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரையில் இவ்வளாகத்திலேயே அமைக்கப்படும் பாதுகாப்பு அறைகளிலேயே வைத்து பாதுகாக்கப்படுவதால் காப்பு அறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் தேவைப்பபடும் அடிப்படை கட்டமைப்புகளான மின்சார வசதி, பிரத்தேய தடுக்குகள் அமைத்தல், வாக்கு எண்ணும் அறைகளை விரிவு படுத்துதல், குடிநீர் வசதி, வாக்குப்பதிவு இயந்திரங்களை முறையாக எடுத்துச்செல்லும் வகையிலான பிரத்யேக நடைபாதை வசதி, முழுபாதுகாப்பு வசதிகளுடன் கூடிய மின்னனு வாக்குப்பதிவு இயந்திர காப்பு அறை உள்ளிட்டவற்றினை இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அமைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மாநகர காவல் ஆணையாளருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்தார்.