பயிர்களை பாதுகாக்கும் புதிய ஜப்பானிய பூச்சிக்கொல்லி மருந்து

இந்தியாவில் நெல் மற்றும் காபி பயிர்கள் மற்றும் சந்தன மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் தண்டு துளைப்பான் மற்றும் இலை சுருட்டி போன்ற பூச்சிகளை திறம்பட கட்டுப்படுத்துவதோடு கருப்பு மிளகை பாதிக்கும் நூற்புழுக்களையும் கட்டுப்படுத்தும் வகையிலான புதிய ஜப்பானிய பூச்சிக்கொல்லி மருந்தான தடாக்கி என்னும் பூச்சிக்கொல்லி மருந்தை இந்தியா நிறுவனமான இன்செக்டிசைட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய பூச்சிக்கொல்லி மருந்தை இன்செக்டிசைட்ஸ் நிறுவனம், ஜப்பானின் ஓஏடி அக்ரியோ நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்தை தாவரங்களால் விரைவாக உறிஞ்ச முடியும். தடாக்கியின் முக்கியமான பண்புகளில் ஒன்று, இது மண்ணின் மேற்பரப்பில் இருந்து பூச்சிகளை கட்டுப்படுத்துவதோடு மண்ணையும் தண்ணீரை மாசுபடுத்தாது. நடப்பட்ட நாளில் இருந்து 25 முதல் 45 நாட்களுக்குள் இந்த பூச்சிக்கொல்லி மருந்தை பயிர்களுக்கு தெளிக்கலாம்.

இது குறித்து இன்செக்டிசைட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் அகர்வால் கூறுகையில், தடாக்கி பூச்சிக்கொல்லியானது ஜப்பான் ஓஏடி அக்ரியோ நிறுவனத்தின் மற்றொரு புதிய தலைமுறையின் தயாரிப்பு ஆகும். கடந்த ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த ஓஏடி அக்ரியோ நிறுவனத்துடன் இணைந்து சாப்பரோன் என்னும் பூச்சிக்கொல்லி மருந்தை அறிமுகம் செய்தோம். தற்போது இந்திய விவசாயிகளுக்காக புதிய பூச்சிக்கொல்லி மருந்தை அறிமுகம் செய்துள்ளோம். மேலும் அந்நிறுவனத்துடன் இணைந்து நாங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறோம்.

இது குறித்து இன்செக்டிசைட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் வி.கே. கார்க் கூறுகையில், இந்த புதிய பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்கும்போது வயல்வெளிகளில் தண்ணீரின் அளவு 2 இன்ச் முதல் 3 இன்ச் வரை இருக்க வேண்டும். இதை தெளித்து ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். இது விவசாயிகளுக்கு நல்ல பலனைத்தரும். இந்த பூச்சிக்கொல்லி மருந்து தென் மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெறும் என்று தெரிவித்தார்.