வேளாண் சட்டங்கள் எங்களுக்கு சாதகமாக உள்ளது – ஈஷா நிறுவனம் தகவல்

கோவை: உற்பத்தியாளர் நிறுவனம் என்ற அடிப்படையில் வேளாண் சட்டங்கள் சாதகமாக இருப்பதாகவும், கோவையை சேர்ந்த விவசாயிகளுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஈஷா மையத்தின் வழி காட்டுதலின் கீழ் செயல்படும் வெள்ளிங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஈஷாயோக மையத்தின் வழிகாட்டுதலின் பேரில் வெள்ளிங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு ஆளுமையில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் என்ற விருதை தமிழக அரசு வழங்கியுள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.

அப்போது வெள்ளிங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாகிகள் கூறியதாவது: இந்த நிறுவனம் கடந்த 2013-ல் 1,063 விவசாயிகளுடன் ஆரம்பித்தது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை என்பதால் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்தோம். அதன்படி ஈஷா யோக மையம் சத்குரு வழிகாட்டுதலின்படி இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களை வியாபாரிகளிடம் தனித்தனியாக விற்பனை செய்யும் போது தான் விலை வித்தியாசம் ஏற்படுகிறது. நாங்கள் ஒன்றிணைந்து விற்பனை செய்வதால் உரிய விலை கிடைக்கிறது. எங்கள் நிறுவனத்தில் உள்ள விவசாயிகள் இயற்கை விவசாயமும் மேற்கொள்கின்றனர்.  காய்கறிகள் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

2020-2021ல் ஆண்டு வருமானம் ரூ.12 கோடியை ஈட்டியுள்ளது. இதனால் “ஆளுமையில்  சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்” தமிழக அரசின் விருதைப்பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள், சொட்டு நீர்பாசனம், மானிய விலையில் உரம் கிடைக்க வழிவகை செய்து வருகிறோம். வேளாண் சட்டங்களை பொறுத்தவரை  உற்பத்தியாளர் நிறுவனம் என்ற அடிப்படையில் எங்களுக்கு சாதகமாக உள்ளது. வேளான் சட்டத்தால் கோவையில் எந்த விவசாயிக்கும் பாதிப்பு இல்லை. வடமாநில விவசாயிகளுக்கு தான் பாதிப்பு. போராடித்தான் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றிபெற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.