கோவையில் செயற்க்கைக் கோள் தரைதள கண்காணிப்பு மையம் துவக்கம்

கோவை: ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் செயற்கை கோள் தரத்தள கண்காணிப்பு மையத்தை இஸ்ரோ தலைவர் சிவன் 28ம் தேதி வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.

சின்னியம்பாளையம் எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சாட்டிலைட்டை விண்ணில் செலுத்தும் தரைதள கண்காணிப்பு நிலையத்தை இஸ்ரோவின் தலைவர் டாக்டர் சிவன் இணைய வழியாக துவக்கி வைத்தார். மாணவர்கள் இணைந்து ரூ.2.5 கோடி மதிப்பில் ஸ்ரீ சக்தி சாட் எனப் பெயரிடப்பட்டுள்ள PSLV C-51 செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர். 460 கிராம் எடை கொண்ட இந்த சிறிய செயற்கைக்கோள் 10 கிலோ எடை கொண்ட செயற்கை கோளின் பணியை செய்யும் விதமாக வடிமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தவும்  திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இணைய வழியாக நடைபெற்ற விழாவில் இஸ்ரோ தலைவர் சிவன் கலந்து கொண்டு செயற்கைக்கோள் தரத்தள மையத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், “இந்த புதிய முயற்சியில் பங்கெடுத்துக் கொண்ட கோவை ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி, சென்னை ஜே.பி.ஆர் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜி.ஹெச்.ராய்சோனி பொறியியல் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளுக்கும் எனது பாராட்டுக்கள். இஸ்ரோ மற்றும் மத்திய அரசு இணைந்து இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையத்தினை துவக்கியவுடன் துணிச்சலாக இஸ்ரோவுடன் இணைந்து மூன்று கல்லூரிகளும் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர். இது மிகப்பெரிய துணிச்சலான நடவடிக்கை.

இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு செயற்கைக் கோளை வடிவமைத்து ஏவ வேண்டும் என்பது கனவாக இருக்கும் சூழலில், மாணவர்களே ஒரு செயற்கைக் கோளை வடிவமைத்து ஏவுவது இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இது புதிய சாதனை. இதுவே முதல் படியும் கூட, விண்வெளி ஆராய்ச்சியில் இந்திய மாணவர்களின் பங்களிப்பு வரும் காலங்களில் பெரும்பான்மையாக இருக்கும். இது மாணவர்கள், ஆசிரியர்களின் புதிய முயற்சி. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஹார்டுவேர்கள், மற்றும் சாஃட்வேர்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. இதனால் செலவும் வெகுவாக குறைந்துள்ளது. இளைய சமுதாயத்தினர் வேகமும், தரமான, கண்டுபிடிப்புகளை விண்வெளி ஆராய்ச்சியில் கொண்டு வரவேண்டும். மாணவர்களுடன் பணியாற்ற இஸ்ரோ எப்போதும் தயாராக இருக்கின்றது. இவ்வாறு அவர் பேசினார்.