காதல், காமம், ஆன்மிகம்… – சில புரிதல்கள்!

காதல் ஆனந்தமான ஒன்றல்ல; அது மிகவும் ஆழமான, அற்புதமான வலி. அதனால் உங்களுக்குள் இருக்கும் ஒவ்வொன்றும் கிழிபட வேண்டும்அப்போதுதான் காதல் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

கேள்வி: காதலின் ஆனந்தத்தை நாம் சுமந்திருந்தால், ஆன்மிகப் பாதையில் எளிதாக நம்மால் நடக்க முடியுமா?

சத்குரு: காதல் ஆனந்தமான ஒன்றல்ல; அது மிகவும் ஆழமான, அற்புதமானதொரு வலி. அதனால் உங்களுக்குள் இருக்கும் ஒவ்வொன்றும் கிழிபட வேண்டும் – அப்போதுதான் காதல் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் காதலின்போது இனிமையை உணர்கிறீர்கள் என்றால், அது காதல் அல்ல, அது வெறும் வசதி மட்டுமே. ஒரு சிறிதளவு பிரியத்தை நீங்கள் உணர்ந்திருக்கலாம். ஆனால் நீங்கள் காதலை உணரும்போது, உண்மையாகவே உங்களுக்குள் உள்ள ஒவ்வொன்றும் இரு கூறாகக் கிழிபடுகிறது. அது வலி மிகுந்தது என்றாலும் அற்புதமானது.

நீங்கள் காதலில் இருக்கும்போது, நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றும் காதலுடன்தான் இருக்கும். நீங்கள் சாப்பிட்டால் அது காதலோடு நடக்கும். நீங்கள் அந்த நபருக்காக ஏதாவதொரு செயல் செய்கிறீர்களோ அல்லது எதையும் செய்யாமல் வெறுமனே அமர்ந்திருக்கிறீர்களோ, ஆனால் அங்கு காதல் இருக்கும். ஆனால் இன்று, இந்த நிதர்சனத்தை ஏற்று, ‘காதல் செய்வது’ என்கிற கருத்தை முன்னிறுத்தி, இந்தப் பதத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம். அதன்படி, ஒரு குறிப்பிட்ட செயல் மட்டுமே காதல் என்றாகிறது.

ஆனால் நீங்கள் காதல் எனும் ஒரு செயலை செய்ய முடியாது. அதை அனுமதிக்கத்தான் முடியும். நீங்கள் அனுமதித்தால், காதல் உங்களுக்குள் நிகழக் கூடும். உண்மையில், காதல் என்பது எப்போதும் அணைத்துக்கொள்வது, எதையும் விலக்குவதல்ல. நீங்கள் காதலில் இருக்கும்போது, உங்கள் செல்ல நாயைப் பாருங்கள், அதைக் காதலிப்பீர்கள்; ஒரு மரத்தைப் பாருங்கள், அதைக் காதலிப்பீர்கள்; ஒரு மலரைப் பாருங்கள், அதைக் காதலிப்பீர்கள்; நீங்கள் வானத்தைப் பாருங்கள், அதைக் காதலிப்பீர்கள்.

அதேவேளையில், ஒரே ஒரு நபர் மட்டும் உங்களுக்கு அழகாகத் தெரிந்தால், உங்களுக்குள் காதல் இல்லை. அது, காமம் மட்டுமே. மேலும் அது தன்னைக் காதல் என்ற பெயரில் நாகரிகமாக வெளிப்படுத்திக் கொள்கிறது, அவ்வளவே. காதல் என்பது ஒரு பண்பு, அது ஒரு செயல் அல்ல.

தியானம் அல்லது ஆன்மிகம் என்பதும் ஒரு பண்புதான், செயல் அல்ல. அது ஒரு புதிய பரிமாணம். அது நீங்கள் செய்யக்கூடிய ஏதோ ஒரு செயல் அல்ல, நீங்கள் ஏதோ ஒன்றினுள் பிரவேசிக்கின்ற ஒரு உணர்வு. ஏதோ ஒன்று உங்களை வெற்றிகொள்வதற்கு நீங்களே அனுமதிப்பதில்லையென்றால், அங்கே ஆன்மிகத் தன்மை இருப்பதில்லை. நீங்கள் ஆன்மிகத்தை அடையப் போகிறீர்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நிகழப் போவதில்லை. நீங்கள் ஆட்படுவதற்கு சம்மதியுங்கள். அப்போதுதான், அங்கே ஆன்மிகம் எழுகிறது. நீங்கள் பாறை போல் நின்றால், அங்கே ஆன்மிகம் இல்லை.