அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் ரேக்ளா போட்டி !

பொங்கல் பண்டிகை மற்றும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-104 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் கோவை கொடிசியா மையதானத்தில் இன்று (17.1.2021) ரேக்ளா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

கோவை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் கே.ஆர்.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ரேக்ளா போட்டியை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் துவக்கி வைத்தார்.

கோவையை சுற்றியுள்ள பகுதிகளான திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் பகுதிகளிலிருந்து காளைகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர். 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என போட்டிகள் இரண்டு வகைகளில் நடத்தப்பட்டது. மொத்தம் 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

போட்டிகளில் சிறப்பு பரிசாக 200 மீட்டர் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு தமிழகத்தில் முதல் முறையாக ஆல்டோ கார் வழங்கப்படுகிறது. மேலும், 300 மீட்டர் போட்டியில் வெற்றி பெருபவர்களுக்கு என்பீல்ட் புல்லட் இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட உள்ளது. இது தவிர தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் என மொத்தம் 20 இடங்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இன்று மாலை நடைபெறும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்ள உள்ளனர்.