இந்த தை, இனியதைத் தரட்டும்!

ஆங்கிலப் புத்தாண்டோ, தமிழ்ப் புத்தாண்டோ எதுவானாலும் மகிழ்ச்சிக்குரியதே. புத்தாண்டு வாழ்த்து என்பது இனி வரும் காலம் நலமுடனும், வளமுடனும் அமையட்டும் என்கின்ற வாழ்த்துதான். அந்த வகையில் இந்த தை முதல் நாளும்கூட ஒரு புத்தாண்டு தொடக்கம்தான்.

தைப்பொங்கல் என்பது இயற்கைக்கு மனித குலம் தெரிவிக்கும் நன்றி அறிவிப்பு. ஆம், இது கிட்டத்தட்ட உலகெங்கும் அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் சங்கராந்தி, மகி, மகா சங்கராந்தி என்று இந்த இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அது ஒரு படி மேலே போய் “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்பதை நினைவூட்டும் போகிப்பண்டிகை, கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல், வேளாண்மைக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப்பொங்கல் என்று அற்புதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்ற ஆண்டு இதேபோல தைப்பொங்கல் அன்று இப்படி ஒரு கோவிட் 19 தாக்குதல் இருக்கும் என்று யாரும் எண்ணிக்கூட பார்க்கவில்லை. என்றாலும் அந்த நிலையிலும் இயற்கை நம்மை கைவிடவில்லை. அத்தனைத் தொழில் வணிக, சேவைத் துறைகளும் கைவிட்ட போதும் இயற்கையும், விவசாயிகளும் மக்களைக் கைவிடவில்லை. உலகமே உழுதுண்டு வாழ்வோரின் பின்னால் தொழுதுண்டு நின்றது.

அத்தகைய பெருமைக்குரிய ‘வேளாண்மை’ என்றும் முதன்மை பெற வேண்டும். உலகமயமாக்கல் வந்த பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் வேளாண்மை குறித்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. அதனை எதிர்த்து போராட்டங்களும் சில இடங்களில் நடைபெற்று வருகின்றன.

எது எப்படி இருப்பினும் உழவே உலகிற்கு அச்சாணி என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

தற்போதுள்ள சூழலில் தமிழகத்தில் விவசாயம் மெல்ல மெல்ல தேய்ந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். இளைய தலைமுறை வேளாண்மையில் விரும்பி ஈடுபடுவதில்லை. அத்துடன் வேளாண்மையில் ஈடுபடுவோருக்கு போதிய வசதிகள் இல்லை, சிக்கல்கள் அதிகம், பொருளுக்கு ஏற்ற விலையும் கிடைப்பதில்லை என்று பல குறைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன.

இந்த நிலை மாற வேண்டும். பல மாற்றங்களை ஏற்றுக்கொண்டுள்ள நாம், வேளாண்மையில் ஈடுபடுவோர் பயன்பெரும்படியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மக்களின் உடல் நலம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை கோவிட் 19 என்ற பெரும் நோய்த்தொற்று நல்ல முறையில் அறிவுறுத்தி இருக்கிறது.

அந்த வகையில் நமது உடல்நலத்தைக் காக்கும் உணவும்,  அதற்கு அடிப்படையான வேளாண்மையும் மிகவும் முக்கியம். அந்த விதத்தில் பாரம்பரியமான, நமது பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் திருவிழா மிகவும் இன்றியமையாதது. அதற்காக இயற்கைக்கு நன்றி சொல்வதோடு, நமது மேம்பாட்டை நினைவுறுத்தும் வகையிலும்  பாதுகாப்பான முறையிலும் கொண்டாட வேண்டியது நமது கடமை.

அனைவருக்கும் ‘கோவை மெயில்’ பத்திரிகையின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!