மாநகரில் 172 காவல் அலுவலர்கள் நியமனம் : குற்றச்சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் !

குற்றச்சம்பவங்கள் குறித்து உடனடி தகவல் தெரிவிக்க மாநகரில் 43 பகுதிகளில் 172 காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அறிமுக விழா திங்கள் அன்று நடைபெற்றது.

இதையொட்டி கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் காவலர்கள் அறிமுக விழா நடைபெற்றது. விழாவுக்கு மாநரக போலீஸ் கமிஷனர் சுமித்சரண் தலைமை தாங்கி, காவல் அலுவலர்களுக்கு நியமன ஆணை மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், காவல்நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கையேட்டை வழங்கினார். இதில் போலீஸ் துணை கமிஷனர்கள் ஸ்டாலின், முத்தரசு, உமா உள்பட போலீசார் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் கூறும்போது, கோவை மாநகரத்தில் 43 பகுதிகளாக பிரித்து அதில் ஒரு பகுதிக்கு 4 காவல் அலுவலர்கள் என மொத்தம் 172 காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு ரோந்து வாகனமும் வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஒவ்வொருவரிடமும் வாட்ஸ்-அப் குழு அமைத்து அதில் 100 பொதுமக்களை சேர்க்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அந்த வாட்ஸ்-அப் குழுவில் பொதுமக்கள் தங்கள் பகுதி குறைகள் மற்றும் குற்றச்சம்பவங்கள் குறித்தும், புகார் அளிக்கலாம். பெயர் விவரம் தெரியப்படுத்த வேண்டாம் என்றால் அதில் இடம் பெற்று உள்ள உயர் அதிகாரிகளுக்கு தனியாக புகார் அனுப்பலாம். இதன் மூலம் மாநகரில் குற்றச்சம்பவங்கள் நடந்தால் உடனுக்குடன் தகவல் கிடைத்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று குற்றங்களை தடுக்க உதவியாக இருக்கும், என்றார்.