எம்.ஜி.ஆரைப் பாதுகாத்த ‘ஜிம் வீரர்’

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்து 33 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அவரது நினைவுநாள், பிறந்த நாள் இரண்டையும் தவறாமல் நினைவுகூர்ந்து வருகிறார் கோவையைச் சேர்ந்த ‘ஜிம்’ சுகுமாறன். இவரை, கோவை இளைஞர்கள், உடற்பயிற்சி வீரர்கள், ‘எம்.ஜி.ஆர். அவர்களின் உடற்பயிற்சி வாரிசு’ என்றே அழைக்கிறார்கள்.

இவர், எம்.ஜி.ஆரின் அன்புக்கு பாத்திரமாக இருந்தவர், ஹெர்குலிஸ் ஆஃப் தமிழ்நாடு என்ற பட்டத்தை எம்.ஜி.ஆரின் பொற்கரங்களால் பெற்ற பெருமைக்குரியவர்.

எம்.ஜி.ஆர். பற்றி இவர் கூறுகையில், ‘1970களின் தொடக்கத்தில் நடிகர் பயில்வான் ரங்கநாதன், கோவை காந்திபார்க் உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சிகள் செய்வார். அப்போது, அவருடன் நட்பு கொண்டு நானும், பயிற்சி செய்தேன். உடற்பயிற்சியில் அதீத ஆர்வம் கொண்டு பெரும்பாலான நேரத்தை உடற்பயிற்சிக் கூடத்திலேயே செலவிட்ட நான் காலப்போக்கில் கோவை உடற்பயிற்சியாளர்களால் ‘ஜிம்’ சுகுமார் என்றே அழைக்கப்பட்டேன். 1980களில், நண்பர் ஜெயபாலனுடன் சேர்ந்து ஸ்டார் ஜிம் என்றொரு உடற்பயிற்சிக் கூடத்தைத் தொடங்கினேன்.

எம்.ஜி.ஆருக்கு பாதுகாப்பாக…

எம்.ஜி.ஆர். தேர்தல் பிரச்சாரத்திற்கு, சென்னையிலிருந்து ஸ்டன்ட் நடிகர்களுடன்தான் கோவைக்கு வருவார். கோவைக்கு வரும்போதெல்லாம், எம்.ஜி.ஆர். சர்க்யூட் ஹவுசில் தான் தங்கி பிரச்சாரத்திற்கு செல்வார். அப்போது ஸ்டன்ட் நடிகர்களுடன் சேர்ந்து நானும், ஜெயபாலும் எம்.ஜி.ஆர். பாதுகாப்புக்கு செல்வோம்.

இதனைக் கவனித்த எம்.ஜி.ஆர். என்னுடன் அன்புடன் பழகினார். எம்.ஜி.ஆர். முதலமைச்சரானவுடன், கோவை வந்தபோது பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது மேடைக்குச் செல்ல முயன்ற என்னை போலீஸ் அதிகாரி நவி ஆறுமுகம் தடுத்தார். பின்னர், எம்.ஜி.ஆர். மேடையிலிருந்து கீழே இறங்கும்போது என்னைப் பார்த்துவிட்டு ‘நீ என் மேடைக்கு வரவில்லை’ என்றார்.

எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு…

காரணத்தை சொன்னதும், எம்.ஜி.ஆர். ஆறுமுகத்தை அழைத்து, தான் எப்பொழுது கோவை வந்தாலும், சுகுமாறன் எவ்வித தடையுமின்றி தன்னை சந்திக்கக் கட்டளையிட்டார்.

மறுநாள் காலை சர்க்யூட் ஹவுஸில் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, உனக்கு கட்சியில் ஏதேனும் பொறுப்பு வேண்டுமா? அல்லது பெரிய ஜிம் அமைக்க பணம் வேண்டுமா? என்ன வேண்டும் கேள்? என்று அன்புடன் கேட்டார்.

அவர் சென்னைக்கு புறப்பட காரில் ஏறுவதற்கு முன், எனது கையிலிருந்த லெட்டர்பேடைப் பார்த்து, அதை வாங்கி, கார் பேனட் மேல் வைத்து அதில் எழுதி, எனது கையில் கொடுத்துவிட்டு புறப்பட்டார். 24.5.1981 அன்று எழுதிய அந்த வாழ்த்துமடல் கடிதத்தை இன்றுவரையிலும் பெரும் பொக்கிஷம்போல பாதுகாத்து வருகிறேன்.

எம்எல்ஏவிடம் உடனடி உத்தரவு..

கோவை ராமநாதபுரம் பகுதியில் 1ம் வீதியிலிருந்து 6ம் வீதிவரை தெரு விளக்கு, சாக்கடை வசதி போன்ற பல கோரிக்கைகளை மனுவாக முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வழங்கினேன். உடனே அப்போதைய எம்.எல்.ஏ. கோவைத்தம்பியை அழைத்து, சுகுமாறனின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றித் தரும்படி உத்தரவிட்டார்.

அடுத்த இரு தினங்களில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்படி இடத்தைப் பார்வையிட்டு உடனடியாக அனைத்து வசதிகளையும் செய்தனர். இதை என்றென்றும் மறக்க முடியாது என்றார்.

வார்டுகள் தோறும் எம்.ஜி.ஆர். பெயரில் ஜிம் துவக்க வேண்டும் என்பதை இவரது லட்சியமாகும். அதனையே மனுவாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அம்மன் அர்ஜூனன் MLA அவர்களுக்கும் கோவை பொதுமக்கள் சார்பாக அளித்துள்ளார். அந்த மனுவில், உக்கடம் வாலாங்குளம் பார்க், செல்வபுரம் பார்க் ஆகிய இரண்டு இடங்களிலும் எம்.ஜி.ஆர். பெயரில் உடற்பயிற்சி நிலையம் தொடங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.