ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ‘எப்போ வருவாரோ’ – எட்டாம் நாள் : இந்திரா சௌந்தரராஜன் சிறப்புரை

ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் எப்போ வருவாரோ ஆன்மீகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியின் எட்டாம் நாள் நிகழ்வில் ஶ்ரீ ராமானுஜர் குறித்து எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் பேசினார்.

ஶ்ரீ ராமானுஜர் குறித்து இந்திரா செளந்தரராஜன் பேசுகையில், தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்ந்து, ஆன்மீகம் மற்றும் மொழிக்கு சேவை செய்தவர்களே வரலாற்றில் எஞ்சி நிற்கிறார்கள். அப்படி இந்த மண்ணில் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு வகுத்துத் தந்து சென்றவர் ஶ்ரீ ராமானுஜர். ஶ்ரீபெரும்புதூரில் பிறந்தவர், சிறந்த கல்வி பயின்று காஞ்சிபுரத்தில் குருவுக்கு மிஞ்சிய சீடனாக விளங்கியவர். ஶ்ரீ ராமானுஜரின் திறமையைக் கண்டு அவருடைய குரு யாதவப் பிரகாஷ் கோபம் கொள்கிறார். அவரைக் காசியில் கொல்லவும் முடிவு செய்கிறார் குரு. அது ராமானுஜருக்கு தெரிய வர கலங்கி பெருமாளையையும், ஶ்ரீ தேவியையும் நினைத்து வேண்டிக் கொள்கிறார். அப்போது வேடுவன், வேடுவச்சி வேடத்தில் வந்து ராமானுஜரை மறு நாள் காலையிலேயே காஞ்சிபுரத்தில் கொண்டு வந்து விடுகிறார்கள்.

பல மாதங்கள் நடந்து சென்ற காசி ஓர் இரவில் கடந்து வந்து விட்டுவிட்டனரே, இவர்கள் எம்பெருமானே என்று நினைக்கிறார். அப்போது ஶ்ரீ தேவி தண்ணீர் கேட்க, கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தால் இருவரும் மறைந்து விடுகிறார்கள். அன்று முதல் தினசரி வரதராஜப் பெருமாளின் திருமஞ்சனத்துக்கு நீர் கொண்டு செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். அவர் மனைவி தஞ்சணாம்பாள் பிராமணத்தின் மீது பற்றுக் கொண்டு, பிராமாணர்கள் அல்லாமல் ஶ்ரீ வைஷ்ணவர்களாக வாழ்ந்தவர்களை தொடர்ந்து அவமானப்படுத்த பொருக்காமல் அதைத் தெரிவித்துவிட்டு சந்நியாசம் பெற்றுச் செல்கிறார்.

ஒரு முறை ஆளவந்தான் சுவாமிகள் காஞ்சிபுரம் வருகிறார், வந்தவர் ராமானுஜரைப் பார்த்து, நமக்குப் பிறகு ஶ்ரீ வைஷ்ணவத்தை தூக்கிப் பிடிக்கப் போகிறவர், இவர் திருவரங்கம் வர வேண்டும் என்றார். அவரின் சொல்லுக் கிணங்க சந்நியாசம் பெற்று திருவரங்கம் செல்லும் போது ஆளவந்தான் இறந்து விட்டார். அப்போது அவர் கைகளின் மூன்று விரல்கள் மூடியிருந்தது. அவர் மேற்கொண்டிருந்த மூன்று கொள்கைகளை செய்யாமல் சென்றதற்குச் சான்றாக மூடியிருந்தது. அது, வியாசர், பராசரருக்கு வைஷ்ணவர்கள் பூரண நன்றியைத் தெரிவிக்க வேண்டும், நம்மாழ்வாரின் பாசுரங்கள் அனைத்தும் வைஷ்ணவத்துக்குள் கொண்டு வர வேண்டும், பிரம்மத்துக்கு விளக்கவுரை எழுத வேண்டும் என்ற கொள்கைகளை வைத்திருந்தார். அதைத் தான் முடிப்பதாக ராமானுஜர் உறுதி பூண்டவுடன் முடிய விரல்கள் திறந்தன.

32 வயதில் துறவறம் பூண்டவர், 79 வயது வரை திருவரங்கத்தில் வாழ்ந்தார். திருவரங்கத்தில் தற்போதுள்ள கட்டமைப்புகளை உருவாக்கியவர் ராமானுஜர். பிராமணராக இல்ல்லாமல் வைஷ்ணவத்தைப் பின்பற்றுபவர் அனைவருமே ஶ்ரீ வைஷ்ணவரே என்று சாதிகளைக் கடந்து இறைவனின் சேவையில் அனைவரும் பங்கெடுக்க வைத்தார் என்று பேசினார்.