கொழுப்பைக் குறைக்கும் கோதுமைப்பால் !

தானியங்களில் ஒன்றான கோதுமையும் தற்போது பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது. இது ஒரு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு. பல நோய்களை தீர்க்கும் தன்மை இக்கோதுமைக்கு உண்டு. ஆனால் அதனை சரியான வகையில் பயன்படுத்த உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க, டைப் 2 நீரிழிவு நோயை குணப்படுத்த மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த கோதுமை பெரிதும் உதவுகிறது. உடல் எப்போதும் சோர்வாக இருப்பது போல உணர்பவர்கள், கோதுமை பாலை குடித்து வந்தால் யானை பலம் பெறுவார்கள்.

கோதுமை என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது சப்பாத்தி தான். ஆனால் உண்மையில் கோதுமையில் பல வித உணவுகளை செய்து சாப்பிடலாம். கேழ்வரகு கஞ்சி பற்றி கேள்விபட்டு இருப்பீர்கள். கோதுமை கஞ்சி பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா…? கோதுமை கஞ்சியானது உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை சீராக்கும். ஊட்டச்சத்தில் குறைபாடு உள்ளவர்கள் கோதுமை கஞ்சியை தொடர்ந்து எடுத்து வர ஊட்டச்சத்து சமநிலை பெறும்.

கோதுமை கஞ்சி செய்வது மிகவும் எளிது. இதற்கு அரை டம்ளர் நீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வையுங்கள். பிறகு ஒரு தேக்கரண்டி கோதுமை மாவை 1/4 டம்ளர் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து கொதிக்கும் நீரில் சேர்க்கவும். மாவு பச்சை வாசனை போகும் வரை கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும். பிறகு இறக்கி வைத்து 1/4 டம்ளர் பால், 2 சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்க்கவும். மேலும் உங்கள் சுவைக்கு ஏற்ப நாட்டு சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து அருந்த வேண்டியது தான்.

அடுத்து கோதுமை பால் எடுப்பதும் சுலபம் தான். அதற்கு ஒரு இரவு முழுவதும் கோதுமையை ஊற வைத்து விட வேண்டும். பிறகு அதில் உள்ள தண்ணீரை கீழே ஊற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கோதுமையை அரைத்து வடிகட்டினால் கோதுமைப்பால் தயார். இந்த கோதுமைப்பாலில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கி உள்ளது. குழந்தைகள், பெரியவர்கள் என எந்த வித பாரபட்சமும் இன்றி இந்த கோதுமைப்பாலை அருந்தி வரலாம்.

நம் சத்தை அதிரிக்க கோதுமைப்பால் குடிக்க போவதால் இதனை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை பருகினால் போதும். வாத நோய் வராமல் இருக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் கோதுமைப்பால் பெரிதும் உதவி புரியும். மாதவிடாய் நாட்களில் பெரும்பாலும் பெண்கள் சோர்வாக காணப்படுவார்கள். இந்த சோர்வை போக்க மாதவிடாய் காலம் முன்னரும், அதன் பின்னரும் கோதுமைப்பால் அருந்தி வர அந்த நாட்களில் ஏற்படும் உபாதை குறையும்.

கோதுமைப்பாலானது உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். இதனால் எந்த விதமான நோய் தொற்றுகளும் உங்களை நெருங்காமல் இருக்கும். கோதுமைப்பால் ஆரோக்கியமானது என்பதோடு இது சுவையானதும் கூட. ஒரு சிலருக்கு கோதுமைப்பால் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே வயிற்று போக்கு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் அதனை குடிப்பதை நிறுத்தி விட்டு சில நாட்களுக்கு பிறகு பருகலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது 1/4 டம்ளரில் பாதி அளவு கொடுக்கவும். பெரியவர்கள் சம அளவு தேங்காய் பால் கலந்து ஒரு டம்ளர் அருந்தலாம்.