எவரெஸ்ட் சோமசுந்தரத்தின் நூல் வெளியீட்டு விழா

கோவை: குழுமத்தின் சேர்மனான எவரெஸ்ட் சோமுவின் நூற்றாண்டு இந்த ஆண்டு இன்று 03.01.2021 கொண்டாடப்பட்டது. அதனைச் சிறப்பிக்க அவரது குடும்பத்தினர் நவ இந்தியாவில் உள்ள தனியார் ஹோட்டலில் விழா நடத்தினர். முக்கிய நிகழ்வாக “கோவையின் இரும்பு மனிதர்” (The Iron Man of Coimbatore) எவரெஸ்ட் சோமசுந்தரம் என்ற நூலினை விழாக்குழுவின் தலைவர் பிரம்மச்சாரி விக்னேஷ் சைத்தன்யா ஜி (சின்மயா மிஷன், கோவை) வெளியிட, கொடிசியாவின் முன்னாள் தலைவர் கந்தசாமி மற்றும் விருந்தினர்களும் நூலினைப் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் விழாக்குழுவின் தலைவருக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும், வருகை புரிந்த எவரெஸ்ட் கம்பெனியின் அலுவலர்களுக்கும் எவரெஸ்ட் குடும்பத்தினர் சிறப்பு செய்தனர். விழாத் தலைவர் தமது உரையில் எவரெஸ்ட் சோமுவின் செயல்களை விளக்கியும் கர்மாவைக் குறித்தும் பேசினார். அதனைத் தொடர்ந்து ராஜு செட்டியார் சன் ஜுவல்லர்ஸின் உரிமையாளர் ஸ்ரீ. ராஜேஷ் கோவிந்த ராஜுலு, கொடிசியாவின் முன்னாள் தலைவர் கந்தசாமி, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசியரியர் இராமச்சந்திரன், பாரதியார் பல்கலைக்கழகத்தின் சுற்றுச் சூழலியல் துறையின் முன்னாள் தலைவராகவும், பின்னர் கற்பகம் பல்கலைக்கழகத்தின் பதிவாளருமாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற லஷ்மண பெருமாள் சாமி அவர்களும், MSME-யின் இரண்டாம் நிலை துணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மயில்சாமி அவர்களும், சதாசிவம் (பிரிமியர் பிளேட் ஃபேபிரிகேஷன், நிர்வாக இயக்குனர்) அவர்களும், எவரெஸ்ட் சோமுவின் PA-வாகப் பணியாற்றிய அண்ணாமலை அவர்களும் எவரெஸ்ட் சோமுவின் கடின உழைப்பு குறித்தும், நேரம் தவறாமை குறித்தும், தரத்துடன் தந்தமை குறித்தும், அவர் பெற்ற பதக்கங்கள், பாராட்டுக்கள் குறித்தும், எவரெஸ்டில் பணியாற்றிய போது தாங்கள் அவரிடம் பெற்ற அனுபவங்கள் குறித்தும் மிகவும் சிறப்பாக எடுத்துரைத்தார்கள்.

இதனைத் தொடர்ந்து “உழைப்பு” என்ற தலைப்பில் உழைப்பினால் கிட்டும் உயர்வு குறித்தும், மேன்மை குறித்தும், சிறப்பு குறித்தும், பலரது கதைகளின் வாயிலாக அனைவரையும் கவரும் வகையில் தனது உரையை நிகழ்த்தினார் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த செல்வராஜ். வருகை புரிந்த அனைவருக்கும் எவரெஸ்ட் சோமசுந்தரத்தின் பேத்தி லஷ்மிதா நன்றி கூற விழா நாட்டுப்பண்ணுடன் நிறைவுற்றது.

இதில் பல தொழில் நுட்பக் கல்லூரிகளில் இருந்து வருகை புரிந்த மாணவர்கள் பங்கு பெற்றுப் பயன் பெற்றனர். உறவினர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறக்கச் செய்தனர். வருகை புரிந்த அனைவருக்கும் விருந்தளித்து விழா இனிதே நிறைவுற்றது.