துவங்கியது ஆன்மீக உற்சவம் “எப்போ வருவாரோ” நிகழ்ச்சி

புத்தாண்டை ஆன்ம ஒளியுடன் வரவேற்கும் வகையில், கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அருள் நிறைந்த ஆன்மீக உற்சவமான ‘எப்போ வருவாரோ ‘ 2021 துவக்கியுள்ளது. இந்த நிகழ்வு 15ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 1.1.2021 அன்று ஆர்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது.

முதல் நாளில் பட்டி மன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆண்டாள் குறித்துப் பேசினார்.

இந்நிகழ்ச்சியினை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார் பேசுகையில், கோவை மாவட்டம் எப்போதும் மற்றவருக்கு முன்மாதிரியாக விளங்கும் நகரம். இது போன்ற ஆன்மீக நிகழ்வுக்கு ஆர்வத்துடன் வந்து அரங்கு நிறைந்து இருப்பதே பதினைந்து ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடப்பதன் வெற்றி தெரிகிறது. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் மிக நேர்த்தியாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இது போன்ற இக்கட்டான காலகட்டத்தில் ஆன்மீக நிகழ்வுகள் சமூகத்திற்கு அவசியம். எதிர்வரும் சவால்களை சமாளிக்க, நம்மைப் பக்குவப்படுத்த ஆன்மீகம் நமக்குத் தேவையாகின்றது. இது போன்ற நிகழ்வுகளை மக்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும். கோவை மண்டலம் நல்ல பண்பு நலன்கள், பாரம்பரியம், கலாச்சாரத்திற்கு முன்னோடியாக விளங்குகிறது என்று பாராட்டிப் பேசினார்.

ஆண்டாள் குறித்து சொற்பொழிவு வழங்கிய பாரதி பாஸ்கர், மிக நேர்த்தியான உரையை வழங்கினார். ‘சமூகம் எங்கும் ஒரு தத்தளிப்பு நடந்து வரும் சூழ்நிலையில், இந்தத் தத்தளிப்பில் இருந்து நம்மைக் காப்பாற்றுவது ஆன்மீகம் மட்டுமே. தமிழ் மண்ணிலே பிறந்து அழகுத் தமிழில் பாசுரங்களைப் பாடி அன்னையைப் போல், தோழியைப் போல் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறாள் ஆண்டாள். “ஓங்கி உலககளந்த உத்தமன் பேர்பாடி” என திருப்பாவைப் பாடல் மார்கழி மாதத்தில் மட்டுமல்ல தினசரி நமது அனைவரின் இல்லங்களிலும் ஒலிக்க வேண்டிய பாடல்.

ஆழ்வார்களிலேயே ஆண்டாள் தனித்துவம் பெற்றதற்கு அவளின் இனிமையான காதலே. பக்தி இலக்கியமாக, கவிதையாக, தத்துவ ரீதியாக என எப்படித் தேடினாலும் அனைத்தும் வழங்குகிறது திருப்பாவை. தமிழில் எழுத வேண்டும் என்றால் ஆண்டாளின் அருளாசி வேண்டும். தமிழில் ஆண்டாளை உபாசிக்காத கவிஞர்களே இல்லை. சங்க காலத்தில் 41 பெண் கவிஞர்கள் இருந்துள்ளனர். இதில் பதினைந்தே வயதிருந்த ஆண்டாள் அனைவருக்கும் முன்னோடியாக இருந்துள்ளார்.

இயற்கையோடு இணைந்த ஒப்புமைகள் திருப்பாவையில் நிறைந்து உள்ளது. குவளைப் பூ, மயில், குயில், கருவிளம் பூ, கலாக்காய் உள்ளிட்ட ஐந்தும் எனக்குப் பிடிக்கவில்லை. காரணம் கண்ணனின் நிறத்தில் உள்ளதால் என்கிறாள் ஆண்டாள். இயற்கையோடு வர்ணிக்கும் அழகு தனித்துவம். கவிதா மண்டலத்தின் பேரரசியாக உள்ளார் ஆண்டாள் என பாரதி பாஸ்கர் பேசினார்.

நிகழ்வின் வரவேற்புரையை எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா வழங்கினார். முகப்புப் பாடலை ஜான் சுந்தர் பாடினார். இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.கிருஷ்ணன், செல்வம் ஏஜென்சியின் நிர்வாக இயக்குனர் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்.