தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டுக்கு தடை: வெறிச்சோடி காணப்பட்ட கோவை!

கோவையில் ஆங்கில புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். குறிப்பாக மாநகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து பரபரப்பாக காணப்படும். ஆனால் இந்த முறை ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் பொது இடங்களில் கூடி புத்தாண்டுக் கொண்டாட்டங்களில்  ஈடுபட தமிழக அரசு தடை விதித்தது.

இதன் காரணமாக கோவையில் உள்ள நட்சத்திர விடுதிகள், கேளிக்கை மன்றங்கள் மற்றும் பார்கள் இரவு 10 மணிக்கு மேல் இயங்க தடை விதிக்கப்பட்டது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மது அருந்தி வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் எனவும் மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்து. அவிநாசி சாலை, திருச்சி சாலை, 100அடி சாலை, நஞ்சப்பா சாலை, பந்தய சாலை உள்ளிட்ட 35 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் 1500 காவலர்கள் தீவிர வாகன தணிக்கை மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் வாகனத் தணிக்கை காரணமாக அவிநாசி சாலையில் 9 மணியளவில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழக அரசின் புத்தாண்டு கொண்டாட்ட தடை உத்தரவால் 10 மணி அளவில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், நட்சத்திர விடுதிகளில் உள்ள பார்கள் மூடப்பட்டன. முக்கிய சாலைகளில் உள்ள மேம்பாலங்கள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. இதன் காரணமாக பெரும்பாலான சாலைகளில் வழக்கத்துக்கு மாறாக வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ, டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் உள்ளிட்ட தேவாலயங்களில் காவல்துறை சிறப்பு அனுமதியுடன் நள்ளிரவில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது.