மேற்குமண்டல காவல் எல்லையில் இந்தாண்டு விபத்து வழக்குகள் குறைந்தது – ஐ.ஜி தகவல்

கோவை: தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் விபத்து வழக்குகள் குறைந்துள்ளதாக மேற்குமண்டல் காவல் துறை தலைவர் பெரியய்யா தெரிவித்துள்ளார்.

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சாலை விபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு 2,082 ஆக இருந்த விபத்து இறப்பு வழக்குகள், நடப்பு ஆண்டில் 1,675ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 19.55 சதவீதம் குறைவு. நடப்பாண்டில் 33 லட்சத்து 93 ஆயிரத்து 835 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது கடந்த ஆண்டை விட 14 லட்சத்து 78 ஆயிரத்து 798 வழக்குகள் அதிகமாகும். இதன்மூலம் அபராதமாக ரூ.20 கோடியே 54 லட்சத்து 56 ஆயிரத்து 340 வசூலிக்கப்பட்டது.

கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் கடந்த ஆண்டை விட 102 வழக்குகள் குறைவாக மொத்தம் 4,360 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 27,200 மனுக்கள் பெறப்பட்டு சம்பவ இடத்துக்கே சென்று விசாரித்து 25,296 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டன. தொண்டு நிறுவனங்கள், காவலன் செயலி உள்ளிட்டவை மூலமும் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் மூலமும் 511 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு 443 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை வெளிக்கொண்டு வர போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக வழக்குகளும் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருட்டு வழக்குகளில் 75 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு அதில் 68 சதவீத களவு போன பொருள்கள் மீட்கப்பட்டன. களவுபோன ரூ.12.36 கோடி மதிப்பிலான சொத்துக்களில் ரூ.8.45 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் ஆயிரத்து 849 லாட்டரி வழக்குகளும், 39 ஆயிரத்து 56 மதுவிலக்கு வழக்குகளும், 5 ஆயிரத்து 564 குட்கா வழக்குகளும், 580 மணல் கடத்தல் வழக்குகளும், 708 கஞ்சா வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 8 ஆயிரத்து 784 வழக்குகளில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில் நடப்பாண்டில் 43 ஆயிரத்து 352 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன. மொத்தமாக 174 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு விபத்தில்லா நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே டிசம்பர் 31ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி நள்ளிரவு வரை போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மேற்கு மண்டலத்துக்குட்பட்ட 8 மாவட்டங்களிலும் மொத்தமாக 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றார்.