லண்டன் வழியாக கோவை வந்தவருக்கு கொரோனா தொற்று

ஸ்பெயின் நாட்டிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த 30 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நம் நாட்டில் கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் தற்போது உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் லண்டனில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இச்சூழலில் லண்டனில் இருந்து கோவை வந்த 96  பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அனைவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற முடிவுகள் கிடைத்தது. இந்த நிலையில், மற்ற நாடுகளில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு வெவ்வேறு நாடுகள் வழியாக கோவை வருபவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.

இதில், கடந்த 22ம் தேதி ஸ்பெயினில் இருந்து புறப்பட்ட ஒருவர் லண்டன், துபாய், மும்பை வழியாக கோவை வந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்காநல்லூரை அடுத்த உப்பிலிபாளையம் பகுதியை  சேர்ந்த அவருக்கு இ.எஸ்.ஐ மருத்துவமனையின் தனி வார்டில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், “அந்த நபர் லண்டலின் தங்கவில்லை. அவ்வழியாக வந்திருக்கிறார். 27ம் தேதி அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த நபருடன் இருந்த மூவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.” என்றனர்.