2021 ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை

2021ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், மற்றும் இதர இடங்களில் 31.12.2020 அன்று இரவு அதிகமான அளவில் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள கொரோனா நோய் தொற்றானது அதிகரிக்கும் நிலை உண்டாகலாம். மேலும், சில மேலை நாடுகளில் இந்நோய் தொற்று மீண்டும் தாக்கி பாதிப்புக்குள்ளாகியுள்ளதால், நோய் தொற்று தடுப்பு பணிகள் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு ஆணையின்படி கோவை மாவட்டத்திலுள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் (Restaurants, hotels,clubs, resorts) 31.12.2020 அன்று இரவு நடத்தப்படும் 2021ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. அரசாணைக்கு முரணாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்தப்படுவதாக தெரிய வந்தால் தொடர்புடைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல பொது இடங்கள், சாலைகள், தெருக்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை. மேலும் 31.12.2020 அன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அரசு உத்தரவு சரிவர கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு வட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் வட்டாட்சியர் மற்றும் இதர அலுவலர்களைக் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.