கே.பி.ஆர். கல்லூரிக்கு தேசிய அளவில் முதல் பரிசு

மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை, புவி அறிவியல் துறை மற்றும் மத்திய உடல் நலம், குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சர்வதேச அறிவியல் போட்டியில் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தேசிய அளவில் முதலிடம் பெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த பொறியியல் மாதிரி வடிவங்களுக்கான இந்த போட்டி மற்றும் கண்காட்சி, டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் முழுவதும் காணொளி மூலம் நடைபெற்றது. இந்த போட்டியில் மின்னணு தொழில்நுட்பப் பிரிவில் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திரவியல் துறை இணைப் பேராசிரியர் உதயகுமாரின் வழிகாட்டுதலில் மகேஷ், சாய் கௌஷிக், கிஷோர் மற்றும் தாரிக் அஜீஸ் ஆகியோர் அடங்கிய குழு உருவாக்கிய தானியங்கிப் பயண வாகனம் தேசிய அளவில் முதல் பரிசினை வென்று சாதான படைத்துள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வர் அகிலா கூறுகையில், தேசிய அளவில் இந்த போட்டியில் பங்கேற்ற 25,000 படைப்புகளில் முதல் சுற்றுப் போட்டியில் 100 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டதாகவும், இரண்டாவது மற்றும் இறுதிச் சுற்றில் பங்கேற்ற 25 படைப்புகளில் கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் படைப்பு முதலிடம் பெற்றுள்ளதாகக் கூறினார். மேலும், மின்சாரம் அல்லது சூரிய மின்சக்தியில் இயங்கக் கூடிய இந்த வாகனம் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது எனவும், குறிப்பிட்ட பகுதியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், மனித உதவியின்றி தானாக இயங்கக் கூடியது எனவும், செல்லும் பாதையில் இடர்பாடுகள் நேர்ந்தால் தானாக திசை மாற்றிக் கொள்ளும் எனவும் முதல்வர் குறிப்பிட்டார். இந்தக் கண்டுபிடிப்பை உருவாக்கிய குழுவினரை கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி, கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதன்மைச் செயலர் ஏ.எம்.நடராஜன் மற்றும் இயந்திரவியல் துறைத்தலைவர் குணசேகரன் ஆகியோர் பாராட்டினர்.