நடிகர்கள் எல்லாம் எம்.ஜி.ஆரா..?

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து ஒரு மந்திரச்சொல். இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டசபைத் தேர்தல் வர உள்ள நிலையில், அந்த மூன்றெழுத்து மந்திரச்சொல் மீண்டும் வலம் வரத் தொடங்கி இருக்கிறது. வழக்கம்போல கருத்துகள், எதிர்க்கருத்துகள், விவாதங்கள், கேள்விகள், பதில்கள், உரிமை கொண்டாடுதல் என்று தமிழக அரசியல் களம் முன்கூட்டியே களை கட்டத் தொடங்கி இருக்கிறது.

தனது வாழ்வில் இளமையிலேயே நடிகராகி, பின்னர் அரசியலில் நுழைந்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி, பிறகு தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் நின்று இறக்கும் வரை முதலமைச்சராக மூன்று முறைத் தொடர்ந்து பதவி வகித்து சாதனை புரிந்தவர் எம்.ஜி.ஆர். தனக்கென ஒரு தனி இமேஜை மக்களிடம் உருவாக்கிக் கொண்டவர். சொல்லப்போனால் அவரது காலகட்டத்திலும், அவருக்குப் பின்னும் அவரைப்போல மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகர், அரசியல்வாதியை காண்பது அரிது. அந்த அளவு மக்களால் நேசிக்கப்பட்டவர்.

இப்போது தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அதிமுக இயக்கம்,  எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட கட்சி. அவருக்குப் பின் ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்டு அவரது மறைவுக்குப் பிறகு திரு. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார். அவர்களின் கூட்டணி கட்சியாக பா.ஜ.க. இருந்து வருகிறது. தற்போது சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் வியூகங்களை வகுக்கத் தொடங்கி உள்ளன. கூட்டணி பேச்சு வார்த்தைகள் தொடங்கி இருப்பதற்கு அறிகுறியாக கட்சித் தலைவர்களின் சந்திப்புகள் நடந்து வருகின்றன. அதில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் என்ற இரண்டு நடிகர்களின் அரசியல் செயல்பாடுகள் பலராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் எம்.ஜி.ஆர். தந்த  நல்லாட்சியைத் தருவோம், அவரின் ஆட்சியின் நீட்சி என்றெல்லாம் கருத்துகள், எதிர்க்கருத்துகள் பொதுவெளியில் வரத்தொடங்கி இருக்கின்றன.

முதலில், தமிழக பா.ஜ.க. தலைவர் எம்.ஜி.ஆருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு, செல்வாக்கு மிகுந்த தலைவர் என்றார். அடுத்ததாக, ரஜினிகாந்த் எம்ஜிஆரைப்போல தானும் கட்சி தொடங்கி ஒரு நல்லாட்சியைத் தர முடியும் என்றார். கமல்ஹாசன் இன்னும் ஒருபடி மேலே போய் அந்த எம்ஜிஆரின் ஆட்சியின் நீட்சி, தான் அவர் மடியில் வளர்ந்தவர் என்றெல்லாம் கருத்து தெரிவித்தார். உடனடியாக அதிமுக தரப்பில் இருந்து இதற்கு சூடான எதிர் கருத்து விமர்சனங்கள் எழுந்தன. யாரும் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாட முடியாது, அவர் அதிமுகவின் நிறுவனர் என்று தொடங்கி விவாதங்கள் நடந்து வருகின்றன. சீமான் போன்றவர்கள் இதுகுறித்து கடுமையாக விமர்சனம் செய்ததோடு, எம்.ஜி.ஆர். ஒன்றும் நல்லாட்சி தரவில்லை என்று சொல்ல, அதற்கு வைகோ பதில் தர என்று அரசியல் களம் வார்த்தை போர்மயமாக மாறிக்கொண்டு இருக்கிறது.

இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், இப்போது எம்ஜிஆரைப் பற்றி பேசுவதற்கான அவசியம் என்ன என்று பார்த்தால், ‘அரசியல்தான் வேறொன்றும் இல்லை’. அதன்மூலம்  வாக்குகளைப் பெறுவதைத் தவிர பெரிய நோக்கம் ஒன்றும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. இது அதிமுக நிறுவனர் குறித்து என்பதால் அந்த கட்சி இதுகுறித்து கருத்து தெரிவிப்பது நியாயம். மற்றபடி பாரதிய ஜனதா கட்சி தவிர்த்த வேறு தமிழக கட்சிகள் எதுவும் இதுகுறித்து பேசவில்லை.

ஆனால் கமல், ரஜினி போன்றவர்கள் செய்யும் அரசியலைப் பார்த்தால் ஒன்றும் புரியவில்லை. அவர்கள் மக்களிடம் திரைப்படத் துறையின் மூலம் நன்கு அறிமுகமாகிய பிரபலங்களாக இருக்கலாம். ஆனால் தங்களை எம்.ஜி.ஆரைப்போல பாவித்துக் கொள்வதோ, எம்.ஜி.ஆர். அனுதாபிகள், ஆதரவாளர்கள் ஆகியோரின் வாக்குகளைப் பெறுவதற்காக இப்படி எல்லாம் பேசினால் அது பயன் தராது என்றே தோன்றுகிறது. இரண்டு நாட்கள் பரபரப்பை வேண்டுமானால் ஏற்படுத்தலாம்.

எம்.ஜி.ஆர். நடிகராக இருந்தபோதே திமுக எனும் அரசியல் கட்சியில் இணைந்தவர், அதற்காக பாடுபட்டவர். வெளியில் பொதுக்கூட்டங்களிலும், கட்சிக்குள்ளும், மக்களிடமும் இயங்கியவர். தேர்தல் பிரச்சாரம் செய்தவர். சில ஆண்டுகளுக்குப் பிறகே தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட துணை நின்றவர். பிறகு அதே கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனிக்கட்சி தொடங்கி, தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தவர். அவர் மீது என்ன குற்றச்சாட்டு சொன்னாலும் பெரிய அளவில் எடுபடாத அளவுக்கு மக்கள் மன்றத்தில் நல்ல பெயர் பெற்றிருந்தவர்.

அந்த வகையில் பார்த்தால் எம்.ஜி.ஆரை யார் வேண்டுமானாலும் பாராட்டலாம், புகழலாம்; ஆனால் அவராக மாற முடியாது. குறிப்பாக,  கமல், ரஜினி இருவருமே இன்னும் முழுவதுமாக திரைப்படத் துறையில் இருந்து வெளியே வரவில்லை என்றே தோன்றுகிறது. இந்த நிலையில் இருவருமே பல ஆண்டுகளுக்கு முன்பே கட்சியைத் தொடங்கியவர்கள்போல 234 தொகுதியில் போட்டி, மூன்றாவது கூட்டணி, எம்ஜிஆரின் நல்லாட்சி அமைப்போம் என்றெல்லாம் கூறுவது மக்களை யோசிக்க வைத்திருக்கிறது. ஒரே வித்தியாசம், கமல் கட்சி தொடங்கி சில, பல மாதங்களாகிறது. ரஜினி வரும் மாதத்தில்தான் கட்சி தொடங்குவதாக செய்தி வந்திருக்கிறது.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது, ஆனால் தகுதி இருக்கிறதா என்று மக்கள் யோசிப்பார்கள். எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கியபோது அவரது பின்னணியில் கட்சியில் பணியாற்றிய சொந்த அனுபவம், மக்கள் செல்வாக்கு, அரசியல் நண்பர்கள் எனப் பலவும் இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களிடையே அவருக்கு இருந்த செல்வாக்கு அளப்பரியது. ஆனால் கமல், ரஜினிக்கு அப்படி இருப்பதுபோல தெரியவில்லை. இருவரும் அவரைப்போல தமிழகம் அறிந்த மாபெரும் நடிகர்களாக இருக்கலாம். ஆனால் தமிழகத்திற்கு நல்லாட்சி தருகிறோம் என்று சொல்லும் அளவுக்கு அனுபவமும், ஆற்றலும் இருப்பதாகத் தெரியவில்லை. அதுவும் ஆட்சியை நோக்கியே இவர்களின் அரசியல் நோக்கம் இருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

‘சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நேராக கோட்டைக்கு போவது’ நடக்குமா என்று தெரியவில்லை. ஏனென்றால், ‘தாடிகள் எல்லாம் தாகூரா, மீசைகள் எல்லாம் பாரதியா’ என்று ஒரு பாடல் வரி உண்டு. அதுபோல, நடிகர்கள் எல்லாம் எம்ஜிஆரா என்றும் மக்கள் யோசிப்பார்கள்.

யார் என்ன சொன்னாலும், என்ன வேஷம் போட்டாலும், அது எதற்காக  என்பதை மக்கள் கண்டிப்பாக புரிந்துகொள்வார்கள். நாட்டுக்குத் தேவையான நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்.