தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் துணை ஜனாதிபதி

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் 41-வது பட்டமளிப்பு விழா நாளை நடக்க உள்ளது. இந்த நிகழ்வில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், வேளாண்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர். விழாவில் 1,385 மாணவர்கள் நேரடியாகவும் 57 பேர் தபால் மூலமாகவும் பட்டங்களை பெறுகின்றனர். விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி இன்று(16.12.2020) கோவை வருகிறார். ரேஸ் கோர்ஸில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை(17.12.2020) மாலை 4 மணிக்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க்க உள்ளதால், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் ஆகியோருக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேடையில் ஏறி பட்டம் வாங்கப்போகும் 10 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சுகாதார துறையினர் கூறுகையில், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், மருத்துவ குழுவினர், பல்கலைக்கழக ஊழியர்கள், பட்டம் பெறும் மாணவர்கள் என மொத்தம் 300 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் தொற்று இல்லை என உறுதி செய்யப்படும் நபர்கள் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என்றனர்.

பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுவதை ஒட்டி நேற்று ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ரெட் பிரிட்ஜில் உள்ள சர்க்யூட் ஹவுஸ்லிருந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை அழைத்து வருவதற்கான வாகன ஒத்திகை நேற்று காலை 10 மணிக்கு கோவை மாநகர போலீசார் நடத்தினர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி ஒத்திகை நடந்தது. இதில் துணைவேந்தர், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் மாணவர்கள் பங்கேற்றறனர்.