குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை துடியலூர் சுப்பிரமணியம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணறு பகுதிகளில் அம்ருத் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பில்லூர் நீராதரம் மூலம் கோவை மாநகராட்சிக்கு வழங்கப்படும் மொத்த குடிநீரின் அளவு போதுமானதாக இருந்த போதிலும் புதிதாக இணைக்கப்பட்ட துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி மற்றும் காளப்பட்டி ஆகிய 6 பகுதிகளில் தற்போதைய குடிநீர் விநியோக அளவு நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 70 லிட்டர் என்ற விகிதத்தில் 6 நாள் முதல் 8 நாட்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சீரான கூடுதல் குடிநீர் விநியோகிக்க உள்கட்டமைப்பு அமைத்து தொட்டிகளுக்கு நீர் ஏற்றப்பட்டு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது. மேலும், புதிதாக வீட்டு இணைப்புகள் குடியிருப்புகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் அமைக்கப்பட உள்ளது.

துடியலூர் சுப்பிரமணியம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணறு பகுதிகளில் வீடுகளுக்கு பில்லூர் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு தெரிவித்த ஆணையாளர் குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட இடங்களில் பைப்புகள் ஏதேனும் பழுதடைந்திருந்தால் உடனடியாக சரிசெய்து குடிநீர் வெளியேரா வண்ணம் மற்றும் கசிவு ஏற்படா வண்ணம் குழிகளை மூடப்பட வேண்டும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தடாகம் ரோடு, பெரியசாமி சாலை, வெங்கிடசாமி சாலை, டி.பி.ரோடு, பொன்னுரங்கம் ரோடு, திருவேங்கடசாமி சாலை ஆகிய பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் வழங்க மீட்டர் இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட ஆணையாளர் குடிநீர் விநியோகத்திற்காக முடிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக தார்சாலை அமைக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.