நல்ல காலம் பொறக்குது!

கோவை நகரம் என்றாலே அதன் தொழில் வளர்ச்சிதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக ஒரு சிறு நகரம், பெரிய அளவில் எந்தவித வெளி ஆதரவும் இல்லாமல் படிப்படியாக வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு எடுத்துக்காட்டாக கோயம்புத்தூரைத்தான் சொல்ல முடியும்.

எந்த விதமான அரசியல், பொருளாதார, ஆன்மீக முக்கியத்துவமோ இல்லாமல், மேலும் அவற்றின் மூலம் கிடைக்கின்ற எந்தவிதமான உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லாத நிலையில், அத்துடன், பலவிதமான தேவைகள் நிறைவு செய்யப்படாமல் இருந்த ஒரு நகரமாகவே கோவை வளர்ந்து வந்தது. குறிப்பாக தொழில் வளமும், வேலைவாய்ப்புகளும் பெருகும்போது இங்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது இயல்பு.

இந்த நகரம் எவ்வளவு வேலைவாய்ப்புகளை, உற்பத்தியை, பொருளாதார வளத்தைப் பெருக்கியதோ அந்த அளவுக்கு இங்கே உட்கட்டமைப்பு வசதிகள் பெருகாதது ஒரு பெரும் சோகம். குறிப்பாக, அடிப்படை வசதிகளான குடிதண்ணீர், மின்சாரம், போக்குவரத்து வசதிகள் வளராததால் பலவிதமான சிக்கல்கள் உருவாகின.

இந்த நிலையில் சிறுவாணி தொடங்கி, அத்திக்கடவு குடிநீர்த் திட்டங்கள் என தற்போது படிப்படியாக உருவாக்கப்பட்டு வருகின்றன. மின்சாரமும் பெரிய அளவில் சிக்கல் இல்லாமல் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர், மின்சாரம் இரண்டும் மனது வைத்தால் விலைக்குக்கூட கிடைக்கும்; வெளியிலிருந்து தருவிக்கின்ற வசதிகளும்கூட அறிவியல் முன்னேற்றத்தால் செய்துவிடலாம். ஆனால் இருக்கின்ற நிலப்பரப்பில் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது என்பது எப்போதுமே ஒரு சவாலாகத்தான் இருந்து வருகிறது.

1970கள் தொடங்கி கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலத்தில் கோயம்புத்தூர் நகரத்தில் உருவான மேம்பாலங்கள் வெறும் இரண்டே இரண்டு. ஆனால் பெருகிய மக்கள்தொகைக்குத¢ தேவைப்பட்ட போக்குவரத்து வசதியை மேம்படுத்த இந்த இரண்டு மேம்பாலங்கள் போதாது என்பது எல்லோருக்கும் தெரியும். கோவையின் எல்லா அமைப்புகளும், பொதுமக்களும் இதற்காக பலவிதமான கோரிக்கைகள் வைத்துவந்த நிலையில் இப்போது ஒரு நல்ல காலம் பிறந்திருக்கிறது.

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் அவிநாசி ரோடு மேம்பாலத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்திருக்கிறார். இதற்கு முழு பின்புலமாக இருந்து செயலாற்றிய உள்ளாட்சி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சிறப்பு செயலாக்கத் திட்டங்கள் திட்ட அமைச்சரும், கோவை மக்களிடையே நற்பெயர் பெற்றவருமான திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் இதற்கு முழு பின்புலமாக இருந்து இது தொடங்கப்பட காரணமாக இருந்து செயலாற்றி இருக்கிறார்.

கண்டிப்பாக இந்த அவிநாசி சாலை மேம்பாலத் திட்டம், அவர்களின் பெயரை காலம் எல்லாம் சொல்லும். அந்த அளவுக்கு அது கோவை மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கேற்ப இந்த ஆட்சியில் திரும்பிய பக்கம் எல்லாம் பாலங்கள், கட்டுமானங்கள் என்று பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கோவை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை, கோவை பொள்ளாச்சி நெடுஞ்சாலை, உக்கடம் மேம்பாலம், திருச்சி சாலை மேம்பாலம், கவுண்டம்பாளையம் மேம்பாலம் என்று பல பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதனால் இந்த அவிநாசி சாலை மேம்பாலத் திட்டமும் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

சாலை மீது அமைந்த மேம்பாலங்களில் பத்து கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைந்த நீளமான மேம்பாலத் திட்டம், சுமார் 1,600 கோடி ரூபாய் செலவில் செய்யப்படும் பெரும் திட்டம் என்ற பெருமைகளோடு கோவையின் உயிர்நாடியான அவிநாசி சாலை போக்குவரத்து சிக்கலைத் தீர்க்க வந்த ஒரு மாமருந்து என்றுதான் இதனைச் சொல்ல வேண்டும்.

தமிழக முதலமைச்சருக்கும், உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும் மீண்டும் ஒரு முறை பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்ளும் பொதுமக்களுக்கு இந்தத் திட்டத்தின் செயலாக்கத்தில் ஒரு கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் மேம்பாலம், திருச்சி சாலை மேம்பாலம், உக்கடம் மேம்பாலம் ஆகிய பணிகள் தொடங்கப்பட்டு சில ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

என்றாலும் அதனால் ஏற்படும் நடைமுறைச் சிரமங்கள் குறிப்பாக மழைக் காலங்கள் மற்றும் பீக் அவரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் படும்பாடு சொல்லி மாளாது. இதற்கு ஒரு நடைமுறைத்தீர்வு காணப்பட வேண்டும்.

நஷ்டத்தை தவிர்ப்பதும் ஒரு லாபம் என்ற வகையில் இந்தத் திட்டப்பணிகளில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்ப்பதன் மூலமாக பல கோடி ரூபாய் மிச்சப்படுவதோடு பொதுமக்களின் சிரமங்களும் குறையும். இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரத்தில் இதுபோன்ற பெரும் திட்டப்பணிகளை செய்து முடிப்பது ஒரு சவால்தான் என்றாலும் இன்னும் கொஞ்சம் கூடுதல் திட்டமிடுதலும் கவனமும் செலுத்தினால் பல நடைமுறை சிரமங்களைக் குறைத்து, இந்த அவிநாசி சாலை மேம்பாலத்தைக் கட்டி முடிக்க இயலும்.

ஏனென்றால், இது மற்ற பாலங்களைப்போல் அல்லாது அதிக போக்குவரத்து நிறைந்ததோடு, இருபுறமும் குடியிருப்புகளும், தொழில் வணிக அமைப்புகளும் அமைந்துள்ள இடமாகும். தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கும் பகுதியாகவும் இது உள்ள நிலையில் இந்த திட்டப்பணி எவ்விதத் தடையும், தடங்கலும் இன்றி செய்து முடிப்பதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும் என்பது கோயம்புத்தூர் மக்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் தமிழக அரசு செயல்பட ‘தி கோவை மெயில்’ வாழ்த்துகிறது.