திட்டமிட்ட விவசாய அணுகுமுறையே நல்ல பலனைத் தரும்

முனைவர் நீ.குமார், துணைவேந்தர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

விவசாயம் என்பது இந்திய நாட்டின் அடிப்படை கலாச்சாரத்தின் ஓர் அங்கமாய் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் திகழ்ந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் அறிவியலின் வளர்ச்சியில் பல நன்மைகளை வேளாண்மைத் துறை பெற்றிருந்தாலும், மனிதர்களால் ஏற்பட்டுள்ள பூமி வெப்பமயமாதல், அதிகரித்து வரும் பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு எனப் பல மாற்றங்கள் விவசாயத்தையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன என்பதை மறுக்க முடியாது.

அதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் போல எழுவதிற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இந்த சவால்களை சந்திக்க ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான திறமை கொண்ட வேளாண் பட்டதாரிகளை, ஆராய்ச்சியாளர்களை, விஞ்ஞானிகளை நாட்டிற்கு வழங்கி விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

நமது ‘தி கோவை மெயிலிற்கு’ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நீ.குமார், விவசாயக் கல்வி குறித்தும், தற்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் நமக்கு அளித்த பேட்டி :

இன்ஜினியரிங், எம்.பி.பி.எஸ். போல வேளாண்மைப் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களை ஈர்க்கும் தன்மை இருக்கிறதா?

உயிரியல் சம்மந்தப்பட்ட பாடங்களைப் பயிலும் மாணவர்களைப் பொறுத்தவரை பெரும்பானோர் மருத்துவம், மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு பயில ஆசைப்படுவார்கள். அதற்கடுத்து அவர்கள் வேளாண்மைப் பட்டப்படிப்பு பயிலவே கடந்த பல ஆண்டுகளாய் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதே உண்மை.

உதாரணத்திற்கு, நம் கோவையில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டபடிப்புகளுக்கு 4,380 சீட்டுகள் உள்ள நிலையில் 45,000 விண்ணப்பங்கள் மாணவர்களிடம் இந்தாண்டு வந்துள்ளது. மாணவர்களை ஈர்க்கும் தன்மை நிச்சயம் வேளாண்மைப் பட்டபடிப்புகளுக்கு உண்டு என்பதையே இது நமக்கு உணர்த்துகிறது.

எங்களுடைய வேளாண்மைப் பட்டதாரிகள் அரசாங்கத் துறைகளான ரயில்வே மற்றும் தபால் துறை, இந்திய ஆட்சிப் பணி மட்டுமல்லாது விஞ்ஞானிகளாகவும், சர்வதேச அளவில் வேளாண் ஆராய்ச்சியாளர்களாகவும் இருந்து வருகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

வேளாண் துறையில் மாற்றங்கள் அடிக்கடி ஏற்பட்டு வரும் நிலையில்  வேளாண் கல்வியில் புதுமையை எப்படி புகுத்துகிறீர்கள் ?

பல்கலைக்கழத்தின் பாடத்திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறது. அவ்வாறு நாங்கள் மாற்றும்பொழுது அப்போதைய காலங்களில் விவசாயத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்களையும் மாணவர்களின் எதிர்காலத் தேவைகளுக்கு ஏதுவானதாகவும் எங்கள் பாடத்திட்டங்களை மாற்றுவோம்.

1970-80 ஆம் ஆண்டுகளில் இருந்த சூழல் வேறு, இப்போது நிலவும் சூழல் வேறு. மனிதன் மண்ணோடும் மாட்டோடும் விவசாயம் செய்த காலம் மாறி, இயந்திரங்களின் பயன்பாட்டையும் தாண்டி அறிவியலின் வளர்ச்சியில் ‘நானோ-டெக்னாலஜி’, ‘ரிமோட் சென்சிங்’ மற்றும் ‘துல்லிய பண்ணை முறை’ போன்ற புது முயற்சிகளை வேளாண்மைத் துறைக்கு விஞ்ஞானம் வழங்கி வருகிறது. இதை முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு கற்பிக்கிறோம்.

அதிநவீன பாடங்களை மாணவர்களுக்கு கற்றுத்தர தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மிகச்சிறந்த ஆசிரியர்கள் தங்களின் திறனை நிகழ்கால மாற்றத்திற்கேற்ப பல மடங்கு உயர்த்தி வருகிறார்கள், சிலர் நம் நாட்டின் சிறந்த வேளாண்மை ஆய்வாளர்களுடன் விவசாயிகள் சந்திக்கும் சவால்களுக்கான தீர்வு பற்றி ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வண்ணம் எங்கள் பேராசிரியர்கள் சிறந்த முறையில் மாணவர்களுக்கு புதுமையை புகுத்தி வருகிறார்கள்.
விவசாயம் சார்ந்த நிறுவனங்களோடு கூட்டு வைப்பதால் மாணவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள்?

எங்களுடைய பாடத்திட்டத்திலேயே மாணவர்களின் இறுதியாண்டில் விவசாயம் சார்ந்த நிறுவனங்களுக்குச் சென்று பயிற்சி எடுத்துக்கொள்ளவும், ப்ராஜெக்ட் செய்யவும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. வேளாண்மைப் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை  40% தான் விரிவுரையாற்றுதல் இருக்கும், மீதம் 60% செய்முறைக் கல்வி வடிவம் கொண்டது. விவசாயிகளின் கிராமங்களுக்குச் சென்று அங்கேயே தங்கி ப்ராஜெக்ட் செய்யவும் வழிகள் அமைத்திருக்கிறோம்.

இன்றைய காலத்தில் எல்லாமே அதிநவீனம் ஆகிவரும் சூழலில், பழைய முறை விவசாய நடப்புகளை மட்டும் பின்பற்றினால் மாணவர்களுக்கு இப்போது நிகழும் தொழில்துறை மாற்றங்கள் பற்றி கல்வி பயிலும் காலத்தில் தெரியாமல் போய்விடும். எனவே எங்களின் தேவை என்னவென்று விளக்கி விவசாய நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாய் மாணவர்களுக்கு சமகால விவசாயத் தொழில்துறை அனுபவத்தை வழங்க வழிசெய்துள்ளோம்.

விவசாய நிறுவனங்களில் பயிற்சி எடுக்கும் பல மாணவர்கள் அங்கேயே வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.

வேளாண்மை கல்லூரிகளால் நாட்டிற்குக் கிடைத்த பலன்கள்?

விவசாயத்திற்குத் தேவையான அறிவுசார்ந்த தகவல்களை, ஆராய்ச்சிகளை நாட்டின் நலனுக்காய் வேளாண்மைப் பல்கலைகழகங்கள் செய்து வருகின்றன.

தெற்குப் பகுதியில் விவசாயப் படிப்பிற்கு நம்முடைய பல்கலைக்கழகம்தான் 1970 -திற்கு முன் இருந்தது. அப்போது அது பல்கலைக்கழகமாக இல்லாமல் வெறும் கல்லூரியாகத்தான் இருந்தது. நாட்டிலே மிகக்குறைந்த விவசாயக் கல்லூரிகள் தான்  அன்று இருந்தன. ஆனால் இப்போது 74 விவசாயப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.

விவசாய வளர்ச்சிக்குத் தேவையான அறிவாற்றலை இந்த பல்கலைக்கழகங்கள் ஆண்டாண்டுகளாக வழங்கி வருகின்றன. உலகில் இரண்டாம் மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட நம் நாடு, தன்னுடைய உணவுத் தேவைகளைத் தானே சந்தித்துக்கொள்ளும் தற்சார்பு நிலையைப் பெற்றுள்ளது பாராட்டிற்குரியது.

1960- தில் 60-65 மில்லியன் டன் உணவுப் பொருள் உற்பத்தி செய்து வந்த நம் நாடு, இன்று 290 மில்லியன் டன் உணவுப் பொருட்களையும், 333 மில்லியன் டன் பழங்கள், காய்கறிகளையும் உற்பத்தி செய்து வருகிறது. அத்துடன், ஊட்டச்சத்து அதிகம் கொண்ட உணவுப் பொருட்களையும் உற்பத்தி செய்து வருகிறது.

இந்த வளர்ச்சிகளுக்கான பல திட்டங்களைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த, அரசாங்கத்திடம் எடுத்துச் செல்ல, செயல்படுத்த நம்மிடம் திறமை வாய்ந்த விவசாயத் துறை அரசு அதிகாரிகள் உள்ளனர். விவசாய வளர்ச்சியில் இவர்களுடைய பங்கு அளப்பரியது, இவர்களை உருவாக்க வேளாண்மைக் கல்லூரிகளின் பங்கு பெரியது.

ஆனால் என்னதான் நாம் இப்போது உணவு மிகுதியாய் உற்பத்தி செய்தாலும், இது போதாது. வரும் காலத்தில் மக்கள்தொகை பெருகும், தேவை அதிகரிக்கும். இப்போது நகரமயமாக்கலால் விவசாய நிலங்கள் குறைந்து வருகின்றன, பருவநிலை-மாற்றங்களால் மழை இயல்பாய் பொழிவதில்லை அல்லது இயல்பை மீறி பொழிந்து விடுகிறது. விவசாயிகள் பல சவால்களை சந்தித்து வருகிறார்கள் என்பதையும் இங்கே மறுக்க முடியாதது. அதற்கு தீர்வுகாண வேளாண்மை ஆராச்சியாளர்கள் அயராது உழைத்துவருகிறார்கள். மாறிவரும் பருவக்காலத்திற்கு ஏற்ப திறன்கொண்ட தானியங்களை உருவாக்க ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

நாட்டில் விவசாயிகள் அடிக்கடி சிரமமடைய எது முக்கியமான காரணம்?

நம் நாட்டில் 80 சதவீதம் சிறு குறு விவசாயிகளே. அவர்களிடம் உள்ள விவசாய நிலமும் பெரும்பான்மையாக சிறியதாகத்தான் உள்ளது. இவர்களில் பலர் ஒரே பருவத்தில் ஒரே வகையான தானியங்களை, காய்களை, பழங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். விளைச்சல் மிகுதியாக இருந்தாலும் விரும்பிய விலை கிடைக்காமல், டிமாண்ட் இல்லாமல் போகும். இது ஒரு முக்கிய காரணம்.

விளைந்த பொருட்களை சந்தைப்படுத்த அவர்கள் நிறைய சிரமப்படுகிறார்கள்.
ஆனால் நம்முடைய அரசாங்கம் இதை நிவர்த்தி செய்ய பல முயற்சிகளை எடுத்து வருகிறது. சிறு குறு விவசாயிகளை கூட்டு வேளாண்மை (கலெக்ட்டிவ் பார்மிங்) யுக்தியைப் பின்பற்ற ஊக்குவித்து வருகிறது. விளைந்த பொருட்களை சுத்தப்படுத்தல் (பிரைமரி ப்ராசஸிங்) மூலம் பொருளின் விலை அதிகரிக்கும் என்கிற யுக்தியைத் தெரியப்படுத்துகிறது. சில உணவுப் பொருட்களின் விலையை அரசாங்கமே நிர்ணயம் செய்கிறது. எப்.பி.ஓ. எனும் பார்மர் ப்ரொடியூசர் ஆர்கனைசேஷன் மூலம் நம் மாநில விவசாயிகளுக்கு நிதி உதவி, தொழில்நுட்ப உதவி வழங்க தமிழ்நாடு அரசு முயற்சி எடுத்து வருகிறது.

சிக்கிம் மாநிலத்தில் இயற்கை விவசாயம் தலைதூக்கியுள்ளது, தமிழகத்தில் அது சாத்தியமா ?

சிக்கிம் மாநிலத்தின் நிலப்பரப்பு, விவசாய நிலம் மற்றும் மக்கள்தொகையைப் பார்த்தல் தமிழகத்தைவிட அனைத்திலும் குறைவாகத்தான் உள்ளது.

தமிழ்நாட்டில் 7 வித்தியாசமான பருவநிலை மண்டலங்கள் உள்ளன, மக்கள்தொகையும் அதிகம், நம்முடைய உணவுத் தேவையும் அதிகம். இன்று நமக்குத் தேவையான உற்பத்தி சீராக கிடைக்கக் காரணம் நாம் உபயோகிக்கும் உரங்கள், நாம் பின்பற்றிவரும் விவசாய முறையுமே. திடீரென அதை மாற்றி நாம் தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தை செய்ய முயன்றால், அது நமக்குத் தேவையான உற்பத்தியைத் தராது.

இயற்கை விவசாயத்தை தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் ஆதரிக்கிறது. நாங்கள் கடந்த நூறு ஆண்டிற்கு மேலாக ஒரு நிலத்தை மூன்றாகப் பிரித்து அதில் ஆய்வு ஒன்று நடத்தியுள்ளோம். அதில் ஒரு பகுதியில் முழுமையாக இயற்கை விவசாயம், மறுபுறம் தற்போது நாம் பின்பற்றி வரும் இரசாயனப் பயன்பாடு கொண்ட முறை, மற்றொரு பக்கம் ஒருங்கிணைந்த விவசாய முறையைப் பின்பற்றினோம். ஆய்வின் முடிவில் ஒருங்கிணைந்த விவசாய முறையே சிறந்தது என்று தெரிந்துகொண்டோம்.

விவசாயிகள் தற்கொலை தமிழகத்தில் அதிகமாகி வருகிறதே?

விவசாயிகள் தற்கொலை மகாராஷ்டிரா போன்ற வடக்கு மாநிலங்களில்தான் அதிகம். தமிழ்நாட்டில் இல்லை எனக் கூற முடியாது. பொதுவாகவே விவசாயிகள் போதிய மழை இல்லாமல் போகும் காலங்களில் நில வறட்சியில் பயிர்கள் சேதமடைவதைக் கண்டு துயர் அடைகிறார்கள். இவை மாறிவரும் காலநிலையினால் ஏற்படும் கொடுமை.

கடந்த 4 ஆண்டுகள் பருவ மழை நன்கு பொழிந்துள்ளது. எனவே தண்ணீர் இல்லை என்று சொல்லிவிட முடியாது. விவசாயிகள் திட்டமிடுதலில் கவனம் செலுத்த வேண்டும். ஒரே வகை உணவுப் பொருளை ஒரே பருவத்தில் அனைத்து விவசாயிகளும் விளைவித்தால் விளைபொருளின் சந்தை மதிப்பு குறையும் என்பது உண்மை.

அனைத்துப் பருவத்திலும் விளையும் வெவ்வேறு வகையான காய்கறிகள் இப்போது உள்ளன. ஆண்டு முழுவதும் காய்கறிகளின் தேவை இருக்கிறது. எனவே விவசாயிகள் திட்டமிடுதலில் மிக கவனம் செலுத்தினால் அது அவர்களுக்கு மிக உதவியாக இருக்கும் என்றார்.