எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவி காலத்தில் 3 அரசு பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும்

-எடியூரப்பா

கர்நாடக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் நிகழ்ச்சி பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது, கர்நாடக அரசுடன் மக்களும் கைகோர்த்து அரசு பள்ளிகளை மேம்படுத்த முன்வருவது ஒரு வித்தியாசமான திட்டம் ஆகும். இதன் மூலம் அரசு பள்ளிகள் முழுமையான வளர்ச்சி பெறும். எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் தங்களின் பதவி காலத்தில் குறைந்தது 3 அரசு பள்ளிகளையாவது தத்தெடுத்து அதை தங்களின் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து மேம்படுத்த வேண்டும் என்று திட்டம் வகுக்கப்பட்டது. மாநிலத்தில் தற்போது 34 அரசு பள்ளிகள் தற்போது தத்தெடுக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளது. இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. நாட்டிலேயே இது ஒரு முன்மாதிரி திட்டம் ஆகும். பள்ளிகளை தத்தெடுப்பவர்கள், அவ்வப்போது அந்த பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். பெற்றோர் ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி பள்ளியின் மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.