அம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில், உழைக்கும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ் மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் பெற உடனடியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 2020-2021 ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பொருட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ் மானியம் ரூ.25000 அல்லது வாகனத்தின் விலையில் 50% ஆகியவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். மாற்றுத்திறனாளி பயனாளிகள் எனில் ரூ.31,250 வரை மானியம் வழங்கப்படும். கியர் இல்லாத 125சிசி திறனுக்கு மிகாத வாகனத்தை மட்டுமே (ஸ்கூட்டர் வகை மாடல்கள்) வாங்க வேண்டும். இந்த வாகனங்கள் உழைக்கும் மகளிருக்கு வழங்கப்படும்.

அரசு அலுவலகங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்கள், அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், வர்த்தக மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமுதாய அமைப்புகளைச் சார்ந்த (மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், கணக்காளர்கள், சமுதாய வள பயிற்றுநர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு & கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் பிரதிநிதிகள்) சுய தொழில் செய்யும் பெண்கள் இத்திட்டத்தின்கீழ் இரு சக்கர வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற 18 வயது முதல் 45 வயது வரையில் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி முற்றிலும் தளர்வு செய்யப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் 2.50 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்: விண்ணப்பங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்: இத்திட்டத்தின்கீழ் பயன் பெற கீழ்க்கண்ட ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். வயதிற்கான சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் (ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை நகல் இவற்றில் ஏதேனும் ஒன்று), ஓட்டுநர் உரிம நகல், வேலையின் தன்மை மற்றும் வருமானச் சான்றிதழ் (வேலை அளிப்பவரிடமிருந்து பெற வேண்டும்), சுயதொழில் புரிவோர் அதற்கான சுய வருமானச் சான்றிதழ், கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஜாதிச் சான்றிதழ் நகல் (தாழ்த்தப்பட்ட- பழங்குடியினராக இருந்தால்) ஆகியவற்றை விண்ணப்பங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியது இல்லை. தகுதியானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைவரும் பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.