கண்திருஷ்டியை கலைக்கும் கல் குத்துவிளக்கு !

மகேஷ்வரன், உரிமையாளர் , புகழேந்தி கிரைண்டர் ஸ்டோன் ஒர்க்ஸ்

தமிழ்­நாட்டில் மக்கள் ஆர்வமாய் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று கார்த்திகை தீபம். தீபாவளி போலவே இந்நாளிலும் இருள் நீங்கி ஒளிபரவ ஒவ்வொருவர் இல்லத்திலும் தீபமேற்றி இறைவழிபாடு நடப்பது பல ஆண்டுகளாய் பின்பற்றிவரும் மரபு.

சிறு அகல் விளக்குகளால் அலங்காரம் செய்த வீடுகளை மாலை நேரம் பார்ப்பது எவ்வளவு இனிமையோ அதைப்போலவே கல்குத்துவிளக்கால் வீட்டின் முற்பகுதியில்  தீபமேற்றுவதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்கிறார் கோவையைச் சேர்ந்த கல்குத்துவிளக்கு தயாரிப்பாளர் மகேஷ்வரன்.

அவர் மேலும் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள் உங்களுக்காக:

“நான் கடந்த 21 ஆண்டுகளாய் கற்களைக் கொண்டு பல பொருட்களை என்னுடைய நிறுவனமான புகழேந்தி கிரைண்டர் ஸ்டோன் ஒர்க்ஸ் மூலமாய் செய்துவருகிறேன். இதில் கல்குத்துவிளக்குகளை செய்வதில் எனக்கு எப்போதும் அதிக மகிழ்ச்சி.

பொதுவாக, கார்த்திகை தீப தினத்தன்று வீடுகளில் சிறு சிறு விளக்குகளை ஏற்றித்தான் பார்த்திருப்போம். இந்த கல்குத்துவிளக்கு நம்மில் பலருக்கு புதிதாகத் தோன்றலாம். ஆனால் இதை பல கோவில்களில் வாங்கி விளக்கேற்றிவருகிறார்கள்.

கேரளாவில் உள்ள மீன்குளத்து பகவதி அம்மன் கோவில், குருவாயூர் கோவில், தமிழ் நாட்டில் திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் பல வழிபாட்டுத்தலங்களுக்கு எங்களிடமிருந்து கல்குத்துவிளக்கு சென்றுள்ளது என்பதில் எங்களுக்கு பெருமையுண்டு. கோவில்களின் தலைவாசல் பகுதியில் இதை வைப்பது வழக்கம்.

கருப்பராயர் கோவில்களில் சாமி சிலைக்கு சற்று தொலைவில் நேராக இந்த கல்குத்துவிளக்கை வைப்பார்கள். அப்படி வைத்து கருப்பராயரை பார்க்கும்போது மிக வலிமையாக காட்சி அளிப்பார்.

கல்குத்துவிளக்கிற்கு மிகப்பெரிய ஒரு சக்தி உண்டு. இதை பெரிய வீடுகளில், மருத்துவமனைகளில் வைப்பார்கள். நம்முடைய வளர்ச்சியைக் கண்டு வியப்படைந்து எவரேனும் திருஷ்டியுடன் பார்த்தல், அந்த திருஷ்டியை இந்த கல்குத்துவிளக்கு முழுதுவமாய் உள்வாங்கிக்கொண்டு நமக்கோ அல்லது நம்முடைய குடும்பம் மற்றும் செல்வத்திற்கோ எந்தத் தீங்கையும் அண்டவிடாது என்பது நம்பிக்கை.

திருத்தலங்கள் மட்டுமல்லாமல் பெரிய பெரிய அப்பார்ட்மெண்ட்ஸின் வரவேற்பு பகுதிகளில், கல்லூரிகளின் வரவேற்பு பகுதிகளில் வைக்கவும் இதனை வாங்கிச் செல்கின்றனர் என்றார்.

ஒரு அடியிலிருந்து  பதினெட்டரை அடி வரை கல்குத்துவிளக்குகளை உற்பத்தி செய்து வருகிறார் இவர். 5.5 அடி உயரமுள்ள கல்குத்துவிளக்கை ஒரே நாளில் செய்து தர முடியும் என்கிறார்.

“கோவையின் பல பகுதிகளில் உள்ள அப்பார்ட்மெண்டுகள், மருத்துவமனைகள் மற்றும் இல்லங்களிற்கும் கல்குத்துவிளக்குகளை வாங்கிச் செல்கின்றனர். சென்னை, பெங்களூரிலும் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் நிறைய பேர் உள்ளனர் . இந்த குத்துவிளக்குகளை வீட்டின் முன்பகுதியில் வைத்து விளக்கேற்றுவதே  சரியானது,சிறந்தது.

எங்களிடம் கல்குத்துவிளக்கை வடிவமைக்கும் கலைஞர்கள் நால்வர் உள்ளனர்.  அவர்கள் மிகப் பொறுமையாய், நுணுக்கமாய் வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்கள். இந்த குத்துவிளக்கு உருவாக்கத்தின்போது பொறுமை மிக மிக அவசியம். ஏனெனில், உளி பட்டு ஒரு சிறு தவறு நேர்ந்தாலும், அந்தக் கல் முழுமையாக பயன்பாட்டுக்கு வராது. மீண்டும் புதிய ஒரு கல் கொண்டு தான் அடுத்த விளக்கை செய்ய வேண்டும். இதனால் அவசரகதியில் இந்தத் தொழிலை செய்ய முடியாது. ஒருகாலத்தில் பலரும் இதுபோன்ற கல்குத்துவிளக்குகளை செய்து வந்தனர். இப்போது இந்தத் தொழிலில் மிகக் குறைவானவர்களே இருக்கிறோம். இருப்பினும் இறைவன் அருளாலும் , மக்களினுடைய ஆதரவினாலும் எங்கள் தொழில் இதுவரை சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது” என்று மகிழ்வுடன் கூறினார் மகேஷ்.

காலத்திற்கேற்றவாறு தன்னுடைய முகநூல் வழியாக இவர் உற்பத்தி செய்யும் புதிய வடிவம் கொண்ட கல்குத்துவிளக்குகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்து, அதன் மூலமாகவும் புதிய வாடிக்கையாளர்களிடம் தன்னுடைய கலைப்பொருளை சென்றடைய முயற்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காலம் கடந்த, காலத்திற்கும் நிற்கும் இந்த கல் குத்துவிளக்குத் தொழிலின் மூலம் பாரம்பரியத்திற்கும் தெய்வீகத்த்திற்கும் ஒருங்கே பணி செய்துவரும் மகேஸ்வரன், மென்மேலும் வளர்ச்சி பெற்று வாழ வாழ்த்துகள்.